India ranks first in safeguarding interests of its Production Industries – WTO
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006
உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்
புதுதில்லி, டிச. 7: அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் குவிவதைத் தடுக்க இந்தியா அதிக அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உலக வர்த்தகக் கழகம் (டபிள்யூ.டி.ஓ.) தெரிவித்துள்ளது.
அதேபோல இறக்குமதியாகும் பொருள்களால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிப்படையாமல் தடுக்க, அதிக எண்ணிக்கையில் காப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வர்த்தகக் கழகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள், அன்னியப் பொருள் இறக்குமதியால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள “காப்பு நடவடிக்கைகள்’ எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, ஒரு நாடு காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அந்த அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த வகையில், உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்ட 1995-ம் ஆண்டிலிருந்து இந்தியா 15 காப்பு நடவடிக்கை விசாரணைகளையும், அதன் அடிப்படையில், பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 8 முறை காப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளது. இதில் 7 வேதிப் பொருள்கள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகள் சார்ந்தது; மற்றொன்று பிளாஸ்டிக்குகள் மீதானது.
இதேபோல, அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் வந்து குவிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக 448 ஆய்வு விசாரணைகளையும், 323 நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என உலக வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்