Ambedkar’s 50th Anniversary – Biosketch
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006
சமூக நீதி சக்திகள் ஒருங்கிணைப்பு
இரா.சிசுபாலன்
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
1930-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டுக்கு தலைமையேற்ற டாக்டர் அம்பேத்கர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடுகையில், “அரசியல் அதிகாரம், நமது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடாது. நமது பிரச்சினை சமூக உயர்வில் அடங்கியுள்ளது. நமது கெட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும். நாம் கல்வி கற்க வேண்டும். எழுதப் படிக்கக் கற்றால் மட்டும் போதாது. பலர் உயர் கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுவதையும் மேலே இட்டுச் செல்ல முடியும். பிறரும் கௌரவிப்பார்கள்’ என்றார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.
தேச விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பின்னரும் சாதியக் கொடுமைகள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் சவாலாய் விளங்கி வருகின்றன. தேசிய இயக்கமும், திராவிட இயக்கமும், சமூக நீதி இயக்கங்களும், பொதுவுடமை இயக்கமும் ஒன்றுபட்டு நின்று, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.
காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன. இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.
தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
(இன்று அம்பேத்கரின் 50-வது நினைவு நாள்).
This entry was posted on திசெம்பர் 6, 2006 இல் 9:46 பிப and is filed under Ambedkar, Babasaheb, Bioigraphy, Biosketch, British India, Buddhism, Casteism, Columbia University, Dalit, Dravidian Movement, Feminism, Freedom, Harijan, Hinduism, Human Rights, Independence, Law, Lifesketch, Mahathma, MK Gandhi, SC, SC/ST, Socialism, ST, Untouchability, Varnasramam. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்