S Malathi appointed new TN Home Secretary
Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006
தமிழக உள்துறைச் செயலர் பொறுப்பை ஏற்கும் 3-வது பெண்
சென்னை, டிச. 1: தமிழக அரசின் உள்துறைச் செயலர் பதவிக்கு நியமிக்கப்படும் மூன்றாவது பெண் அதிகாரி எஸ். மாலதி (52). அவர் வியாழக்கிழமை புதிய பொறுப்பை ஏற்றார்.
சாந்தா ஷீலா நாயர், ஷீலா ராணி சுங்கத் ஆகியோருக்குப் பிறகு உள்துறைச் செயலர் பதவியை ஏற்கும் 3-வது பெண் மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.
எத்திராஜ், பச்சையப்பன் கல்லூரி மாணவி: மாலதியின் சொந்த ஊர் தஞ்சாவூர்; சென்னையில் பிறந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி. (விலங்கியல்) பட்டப் படிப்பு, பச்சையப்பன் கல்லூரியில் எம்.எஸ்ஸி. (விலங்கியல்) பட்ட மேற்படிப்பு படித்தார். 1977-ம் ஆண்டின் “ஐஏஎஸ் அணி’யைச் சேர்ந்தவர். திருச்சி உதவி ஆட்சியராக 1978-ல் பணியைத் தொடங்கினார்.
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர், வேலூர் மாவட்ட ஆட்சியர் (1987) உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் (1996-2001) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலராக சிறப்பாகப் பணியாற்றினார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையராகவும் இருந்துள்ளார்.
பஞ்சாயத்து ஆட்சி முறை மூலம் முதன் முதலில் நகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் எந்தெந்த வரிசையில் அமர வேண்டும், மேயருக்கு எந்த இடம் ஒதுக்க வேண்டும் என்பதற்கு உரிய அரசாணையை வடிவமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. தற்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையராக லத்திகா சரண் உள்ள நிலையில், காவல் துறையை உள்ளடக்கிய உள்துறைச் செயலர் பதவிக்கு ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்