Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Bt paddy trials raise a din in Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

பி.டி.படாமல் போகுமா?

கோவை அருகே ஆலாந்துறையில் தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெற்பயிர்களை சில விவசாய அமைப்பினர் அழித்தனர்.

நவம்பர் 10-ல் சம்பவம் நடந்தது. பி.டி.நெற்பயிரை சாகுபடி செய்திருந்த நிறுவனம் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவோ, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறையும் வெளிப்படையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த அமைதியில், நியாயத்தின் நிழல் தெரியவில்லை.

இதேபோன்ற சம்பவம் அக்.28-ம் தேதி ஹரியாணாவில் நடைபெற்றது. மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரான அமைப்பினர் இந்த பி.டி.நெற்பயிரை அழித்தனர். இந்தியாவில் 9 இடங்களில் பி.டி. நெல் உற்பத்திக்கான சோதனைக் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் மரபீனி மாற்று பருத்தி உற்பத்திக்கு மட்டுமே இதுவரை அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி (மனிதரின்) உணவுப் பொருள் பட்டியலில் இல்லை. இருப்பினும், பருத்திக்கொட்டைப் புண்ணாக்கை மாடுகளும் பசுவின் பாலை மனிதரும் சாப்பிடுவதை அரசு கணக்கில் கொள்ளவில்லை.

தற்போது மரபீனி மாற்று நெற்பயிரை அறிமுகம் செய்ய, சோதனைக்களம் அமைத்து விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் சோதனைக்களத்தில் விளையும் நெல்மணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பின்னர் அதன் புள்ளிவிவரங்களை அரசுக்குத் தெரிவித்து, அனுமதி பெறும் முயற்சி “முறைப்படி’ நடக்கும்.

இந்தியாவில் நெல் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த மாநிலத்திலும் அரிசித் தட்டுப்பாடு இல்லை. வெளிச்சந்தையில் கிடைப்பதுடன், கடத்தலுக்கும் நிறைய அரிசி மூட்டைகள் கிடைக்கின்றன. அப்படியிருக்க எதற்காக இந்த பி.டி.நெற்பயிரைத் திணிக்கும் முயற்சி?

பி.டி. நெல் ரகம் என்பது நெற்பயிரைத் தாக்கக்கூடிய முக்கிய புழுக்கள், நோய்களை எதிர்க்கும் மரபீனிகளைக் கொண்டுள்ளதால் பூச்சிகொல்லி செலவுகள் மிச்சமாகும் என்பது மட்டுமே மேலோட்டமாகச் சொல்லப்படும் தகவல். ஆனால் இதனை உணவாகச் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று யாராலும் உறுதி கூற முடியாது. சுற்றுச்சூழல், உடல்நலக் கேடுகள் என்பதைவிட இதில் வேறுவகையான அரசியலும் கலந்திருப்பதை உணர்ந்தால் இந்திய அரசு இதில் மெத்தனம் காட்டாது.

உயர்ரக அரிசி உள்பட பல்வேறு வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் அன்னியச் செலாவணி ஆண்டுக்கு ரூ.7000 கோடி. நாம் ஏற்றுமதி செய்யும் அரிசியை வாங்கும் நாடுகள் பூச்சிகொல்லி மற்றும் மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில் பி.டி. நெல் ரகங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து உற்பத்தி நடக்கும் நேரத்தில் “இந்தியாவில் பல லட்சம் எக்டேரில் பி.டி. நெல் சாகுபடி’ என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் செய்திகள் (உள்நோக்கத்துடன்) வெளியாகும். இந்திய அரிசி அனைத்தையும் அந்நாட்டினர் சந்தேகத்துடன் வாங்கத் தயங்குவர். இந்திய நெல்லுக்கு சந்தை வாய்ப்பு வீழ்ச்சியடையும். இது ஒருவகையில் வர்த்தகப் பயங்கரவாதம்.

பி.டி. ரகப் பயிர்களைச் சோதனை அடிப்படையில் பயிரிடும்போது, சோதனைக்களம் அமைந்துள்ள பஞ்சாயத்துக்கு இது பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதி வலியுறுத்துகிறது. ஆலாந்துறையில் நிலத்தை குத்தகைக்கு விட்ட விவசாயிக்கு பி.டி.நெல் பற்றி தெரிந்திருக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

================================================

மீண்டும் பிரச்சினை

மரபீனி மாற்றப்பட்ட விதைகள் மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளின் நச்சுத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களைத் தருவதற்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநாதன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு தகவல்களைக் கேட்டு இத்துறையிடம் சென்ற ஆண்டு மனு கொடுத்தார். முதல் கோரிக்கை – மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியன பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவை? இதற்கான பட்டியலை உயிரி தொழில்நுட்பத் துறை தெரிவித்தது.

இரண்டாவது கோரிக்கை – இந்த மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியவற்றில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை குறித்த தகவல்கள். இதை உயிரி தொழில்நுட்பத் துறை தர மறுத்துவிட்டது. இதற்காக அவர் உயர்நிலைக் குழுவுக்கு முறையீடு செய்துள்ளார். ஒருவேளை அவருக்கு அப் புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் கிடைக்கும்.

இருப்பினும், உயிரி தொழில்நுட்பத் துறை சொல்லும் காரணம் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. “தகவல் அறியும் சட்டத்தின் பகுதி 8.1.டி-யின்படி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் அல்லது அறிவுக் காப்புரிமை ரகசியங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் தொழில்போட்டியில் பின்னடைவு ஏற்படுமெனில் அத்தகவல்களை வெளியிட வேண்டியதில்லை’ என்பது ஏற்புடையதாக இல்லை.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் நிச்சயமாக எந்த நோயும் பின்விளைவும் ஏற்படாது என்று எந்த ஆய்வுக் கூடமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் மரபீனி மாற்றப்பட்ட அரிசியும் காய்கறிகளும் இந்தியச் சந்தையை நிறைக்கப் போகின்றன. இந்த உணவுப் பொருள்கள் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் விளைந்தவை என்ற அறிவிப்புடன் விற்கப்படும் என்பதும் நிச்சயமில்லை. இதை உண்ணும் இந்தியர்கள், அதன் புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளாமலேயே சாப்பிடலாம் என்பது தற்கொலைக்குச் சமமானது.

மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்படும் இடங்களின் பட்டியலைத் தெரிவித்தவுடன் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று அப்பயிர்களை நாசம் செய்த சம்பவம் உயிரி-தொழில்நுட்பத் துறைக்கு சில சங்கடங்களைத் தந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. அதற்காக, ஒரு நிறுவனத்தின் தொழில்போட்டி பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிரையும் உடல்நலத்தையும் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்குமா?

பாரம்பரிய வேளாண்மையில், குறிப்பிட்ட பூச்சியை, நோயை எதிர்த்து வளரும் பயிர்களின் விதைகளைத் தனியே பிரித்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிரிட்டு, அதிலிருந்து விதை உற்பத்தி செய்வார்கள். ஆனால், மரபீனி விதைகளில் வேறு ஒரு மரபீனியை உட்செலுத்துவதன் மூலம் ஒரே சாகுபடியில் அதன் போக்கை மாற்றுகிறார்கள். இதனால்தான் அதன் பின்விளைவு எந்தத் திசையில் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஆகவே இதற்கு எதிர்ப்பு உள்ளது.

பாரம்பரிய வேளாண்மையில் நோய் தாங்கும் பயிர் விதைகளை உற்பத்தி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளாகும். மரபீனி விதைகளை ஒரே சாகுபடியில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், அதன் விளைபொருளைச் சாப்பிடுவோருக்கு ஏற்படும் நோய்க்கான காரணங்களை அறிந்துகொள்ள 5 ஆண்டுகள் ஆகும். சிறிய வேறுபாடுதான்! ஆனால் இதுதான் சிக்கலாக இருக்கிறது.

ஒரு பதில் -க்கு “Bt paddy trials raise a din in Tamil Nadu”

 1. bsubra said

  மரபீனி மாற்று பயிர்கள்

  சில நாள்களாக தமிழக உழவர்கள் மத்தியில் பரபரப்பு. மான்சான்டோவை நம் விவசாயிகள் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வு எழுந்துள்ளது. அதேசமயம் BT. நெல் வயல் அழிப்பிற்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் விவசாயத்துறை செயலரும், விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் அளித்த பேட்டி, உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை.

  மைய அரசின் சூழல் துறை அமைச்சகம் பல ஆண்டுகளுக்கு முன் இட்ட உத்தரவுப்படி மரபீனி மாற்று நுட்பக் கண்காணிப்புக் குழுவை மாநில, மாவட்டங்களில் அமைக்கவே இல்லை. ஏன் அமைக்கப்படவில்லை (அமைக்கப்பட்டால்தானே புகார் தருவார்கள்)!

  மாற்றிப் பொருத்தப்படுவது ஒரு மரபணு மட்டுமல்ல. Hepatitis-ஆ நோய் தரும் வைரஸின் மரபணுவை ஒத்த அமைப்புள்ள மரபணு ஒன்று, ஆண்டிபயாடிக்கைத் தாங்கிடச் செய்யும் மரபணு ஒன்று, குறியீடு முடிவிப்பு மரபணு ஒன்று என பல மரபணுக்கள் பொருத்தப்படுகின்றன என்பதைச் செயலருக்கு விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனரா?

  மொத்தம் உள்ள சுமார் 190 நாடுகளில் 21 நாடுகளில் மட்டுமே மரபீனி மாற்று பயிர்கள் பயிராகின்றன. இதிலும் 94 சதவிகிதம் பயிர்ப் பரப்பு அமெரிக்கா, கனடா, பிரேசில், ஆர்ஜென்டீனா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே! இந்த உண்மை ஏன் மறைக்கப்படுகிறது? ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை (IPM) என்ற இயற்கைப் பயிர்ப்பாதுகாப்பு முறையில் நெல், காய்கறிகள், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கோடிகள் செலவு செய்து விவசாயிகளிடம் அரசும், பல்கலைக்கழகமும் கூறியதே! இந்த முறை தோல்வியடைந்து விட்டதா? இந்த எளிய முறை இருக்க கம்பெனிகளுக்கு லாபம் கிடைக்கச் செய்யும் முறை ஏன் திணிக்கப்படுகிறது?

  மான்சான்டோ நிறுவனத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் துணைவேந்தர். BT. கத்தரி ஆராய்ச்சிக்கு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது? ஒப்பந்த விவரங்கள் என்ன? என்பதைத் தெரிவிப்பார்களா?

  BT. கத்தரி, BT. நெல் உள்ளிட்ட மரபீனி மாற்று பயிர்களில் நடந்த, நடக்கின்ற ஆய்வுகளின் வரையறைகளை, முடிவுகளை (Raw data உள்பட) நடுநிலை ஆய்வாளர் ஆய்விற்காக வெளியிடத் தயாரா?

  இரா. செல்வம், அரச்சலூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: