Jayalalitha assassination scene in ‘Kutra Pathirikai’ – Does it support banned Terrorist Organization?
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006
தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினை: “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி நாளை பார்க்கிறார்
சென்னை, நவ.21: தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாதது பற்றிய வழக்கு தொடர்பாக, “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் புதன்கிழமை பார்க்கின்றனர்.
பல ஆண்டுகளாக இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்து தில்லியில் உள்ள தணிக்கைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல இலங்கை தீவிரவாதிகள் முயற்சிப்பது போலவும் அத்திட்டத்தைத் தடுத்து, ராமகிருஷ்ணன் என்பவர் ஜெயலலிதாவை காப்பது போலவும் அப்படத்தில் காட்சி வருகிறது. அந்த காட்சிகளை நீக்குமாறு கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்காட்சிகளை நீக்கிவிட்டால் “குற்றப்பத்திரிகை‘ திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரி பாபு ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தருமாறு தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு உள்ளது. படத்தின் மூலக்கதையே, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இந்நிலையில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டால், பொதுமக்களுக்காகக் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தரலாம் என்று நீதிபதி கூறியிருப்பது சரியல்ல.
இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை ஆதரிக்கும் இப்படத்துக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவைத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி சென்னையில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டரில் இத்திரைப்படத்தை நீதிபதிகள் புதன்கிழமை மாலை பார்க்கின்றனர். அதன்பிறகு வியாழக்கிழமை இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பர்.
bsubra said
“குற்றப்பத்திரிகை’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்
போலீஸ் அதிகாரி தயாரித்த டாகுமென்டரி படத்தை நீதிபதிகள் பார்க்கின்றனர்
சென்னை, நவ.29: “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்துக்கு சென்சார் அனுமதி கோரும் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இப்படத்தின் கதை இருப்பதாகக் கூறி சென்சார் அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி யாதவ் தாக்கல் செய்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் இத்திரைப்படத்தை நீதிபதிகள் பார்த்தனர். இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பாளர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, ராஜீவ் கொலையில் சிபிஐ நடத்திய புலன் விசாரணை பற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தயாரித்த டாகுமென்டரி படத்தின் சிடி யை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
சென்சார் அனுமதி இந்த டாகுமென்டரி படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் பற்றி பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பினர் இலங்கையில் மேற்கொள்ளும் பயிற்சி முறைகள் பற்றி அங்கேயே படமாக்கப்பட்ட காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. தனது இயக்கத்தைப் பற்றி பிரபாகரன் பேசும் காட்சியும் அதில் உள்ளது.
அந்த படத்துக்கு சென்சார் அனுமதி வழங்கியிருக்கும்போது, கற்பனை கதை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை படத்துக்கு சென்சார் அனுமதி ஏன் தரக்கூடாது? உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கெனவே 5 ரீல்கள் இப்படத்தில் வெட்டப்பட்டுள்ளன என்றார் முத்துகுமாரசாமி.
இந்த “டாகுமென்டரி’ படத்தை பார்ப்பதாகக் கூறிய நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.