‘I never hated individual Brahmins; what I admonish is Brahminism’ – M Karunanidhi
Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006
தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை: கருணாநிதி
சென்னை, நவ. 20: திமுக ஏற்க மறுப்பது பிராமணியக் கொள்கையைத்தான், தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நானோ, என் தலைமையில் இயங்கும் திமுகவோ தமிழுக்கு, தமிழர்க்கு, மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்த தனிப்பட்ட பிராமணரையும் வெறுத்ததுமில்லை வெறுப்பதுமில்லை. தமிழ் செம்மொழி என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றத் திட்டம் வகுத்திருப்பதும் அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும் இந்த அரசுதான்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் என் அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசுதான். கல்கியின் நூல்களை அரசுடைமையாக்கி ரூ. 20 லட்சம் அரசு நிதி வழங்கியதும் திமுக ஆட்சியில்தான்.
சென்னை கிண்டியில் அமைத்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில், அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசிய கொடியை பறக்க விட்ட “ஆர்யா’ என்ற பிராமண இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.
பத்திரிகையாளர் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப்படுத்தியதும் திமுக அரசுதான்.
பாரதிக்கு சிலை அமைத்தது திமுக அரசுதான்.
எனவே திமுக ஏற்க மறுப்பது பிராமணியம் என்ற கொள்கையைத்தான்.
திராவிட இயக்கம் என்னும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பது உண்மையானால் பெரியாரின் கருத்துகளிலும் அண்ணாவின் எழுத்துகளிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, லட்சிய நடை போடுகிறவர்களாகவே இருப்பார்கள்.
கயவர்கள் சூழ்ச்சிக்கு காலம் காலமாக ஆட்பட்டு சரித்திரத்தில் களங்கச் சேற்றைப் பூசிக் கொண்டுள்ள தமிழினம். இனியாவது அவர்களது ஏமாற்றுப் பேச்சில் புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்