Congress (I) vs Opposition BJP vs Communist Allies
Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயல் வீசுமா?
புதுதில்லி, நவ. 20: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை (நவ. 22) தொடங்க இருக்கிறது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் பாதியை முடித்துள்ள நிலையில், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.
இதையடுத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்சல் விவகாரம்: பாஜக எழுப்பும்
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முகமது அப்சலுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று இந்த விவகாரத்தை பாஜக எழுப்பலாம் என்று தெரிகிறது.
- உள்நாட்டு பாதுகாப்பு,
- பயங்கரவாதம் ஆகியவற்றில் அரசின் மெத்தனம்,
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்புவோம் என்று பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்தார்.
அணுவிசை உடன்பாடு பிரச்சினையை முன்வைக்க இடதுசாரிகள் திட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.
இடதுசாரிக் கட்சிகள், இந்தியா-அமெரிக்கா அணுவிசை உடன்பாடு, சர்ச்சைக்குரிய சிறப்பு பொருளாதார மண்டலம், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் ஆகிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுவிசை உடன்பாடு தொடர்பாக சில நிபந்தனைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்