Ka Pazhanithurai – State of Dalits in Leadership roles
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
நீங்கியது அவமானம்
க. பழனித்துரை
பத்தாண்டு காலமாக நாம் எங்கே சென்றாலும், நம்மைக் கேட்பது
“பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்குமா? இதை எப்படி மத்திய அரசு, தமிழக அரசு, நிர்வாக இயந்திரம், அரசியல் கட்சிகள், அறிவு ஜீவிகள், நீதிமன்றங்கள் சகித்துக்கொண்டு உள்ளன’ என்பதாகத்தான் இருந்தது.
இடஒதுக்கீட்டிற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை இந்தப் பஞ்சாயத்துகளில் வாழும் ஜாதி இந்துக்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. புரிய வைக்க யாரும் முனையவுமில்லை. நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் சமூக நீதிக்காக நம் பெரியார் சென்று வைக்கத்தில் போராட்டம் நடத்தினார். அந்த மாநிலம் இன்று சமூக நீதிக்கும் மனித வளத்திற்கும் மனித உரிமைப் பாதுகாப்பிற்கும் உலகிற்கு வழிகாட்டும் மாநிலமாக உருவாகிவிட்டது. ஆனால் நம் தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு ஜனநாயக ஆட்சியில் நம் அரசியல் சாசன ஷரத்துகளைச் சமுதாயப் பழக்கவழக்கங்களுக்குக் காவு கொடுத்து பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இதுதான் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் அண்மைக்காலம் வரை நடைபெற்றது. அரசியல் கட்சிகளோ, குறிப்பாகத் தமிழகத்தை ஆளும் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைச் சமூகநீதி என்ற அடிப்படையில் அணுகினால், தென்மாவட்டங்களில் ஜாதி இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற போலிக் காரணத்தைப் பின்னணியில் வைத்து வாளாவிருந்தன. “”இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் நாட்டில்தான் இருக்கின்றனவா அல்லது காட்டில் இருக்கின்றனவா? இந்தப் பஞ்சாயத்துகளில் நடப்பதற்கு என்ன பெயர்? இவை நாட்டிற்குள் ஒரு காடுபோல் அல்லது ஒரு தீவுபோல் இருந்து வந்துள்ளனவே” என்றுதான் அனைவரும் கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் நம் அரசாங்கமோ, இது அரசு இயந்திரத்திற்கு அரசியல் ஆட்சிக் கட்டமைப்பிற்கு விடப்பட்ட ஒரு சவால் என்று கருதவில்லை.
இந்தப் பஞ்சாயத்துகளில் தேர்தல் வரும்போதெல்லாம், அந்தத் தலைவர் பதவியைத்தான் குறி வைத்து அரசு இயந்திரமும் சரி, அரசியல் கட்சிகளும் சரி செயல்பட்டனவே அன்றி ஒட்டுமொத்தப் பஞ்சாயத்தை – அதாவது தலைவர், வார்டு உறுப்பினர் அனைவரும் சேர்ந்த ஓர் அமைப்பாகத் தேர்தல் மூலம் உருவாக்கிட வேண்டும் என்று யாரும் முயலவில்லை. இதுதான் இவ்வளவு நாள் தோல்விக்கும் காரணமாக இருந்தது. தேர்தல் நடத்த முடியவில்லை அல்லது அப்படி நடந்தாலும் தலைவரால் நீடித்துப் பதவியில் இருக்க முடியவில்லை. இந்த நாடகங்கள் நான்கு பஞ்சாயத்துகளில்தான் நடந்தன என்றாலும் இதன் விளைவுகள் எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் வலுவாகச் செயல்படவில்லை. இடதுசாரிக் கட்சிகளும் ஒரு சில தலித் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சில பத்திரிகைகளும்தான் இந்தப் பிரச்சினையைத் தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனவே தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அரசு இயந்திரமும் எப்படியாவது தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும் என்ற கடப்பாட்டுடன் செயல்படுவதற்குப் பதிலாக மேலதிகாரிக்கு தாங்கள் “கடமைகளைச் செய்து கொண்டுதான் உள்ளோம், இருந்தும் முடியவில்லை’ என அறிக்கை சமர்ப்பிப்பதில்தான் கவனமாக இருந்தது. மாறாக, “கண்டேன் சீதையை’ என்று ராமனிடம் அனுமன் கூறியதுபோல் “முடித்தேன் வேலையை’ எனச் சொல்லும் ஓர் அமைப்பாகச் செயல்படவில்லை என்பதை தற்பொழுது நடந்து முடிந்துள்ள தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இந்த முறை பல்முனைத் தாக்குதலை, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பத்திரிகைகளும் ஒரு சில இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளும் கூட்டாக நடத்தி வெற்றி பெற்றுள்ளன. கொள்கை முடிவைச் சரியாக எடுத்து உறுதியாக மாநில அரசும் நின்றதால், தமிழக அரசு ஒரு செய்தியை அந்த ஜாதியத் தலைவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது. “நாம் என்னதான் செய்தாலும் மாநில அரசு அசைந்து கொடுக்காது. அது மட்டுமல்ல, எத்தனை முறை நாம் இப்படித் தடுத்தாலும் அதனால் நம் பஞ்சாயத்து பொதுத் தொகுதியாக மாறப்போவது இல்லை’ என்ற செய்தியினைத் தெளிவாகத் தந்துவிட்டது. அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுச்சுதந்திரம் தந்து செயல்பட வைத்தது. மாவட்ட நிர்வாகம் இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. அடுத்த நிலையில் இந்த முறை களத்திற்கும் – அதாவது பஞ்சாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நிமிடத்திற்கு நிமிடம் கவனித்து, முடிவுகளை அவ்வப்போது எடுத்து அவற்றை நிறைவேற்றும்போது ஏற்படும் விளைவுகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வகையில் ஓர் உயிரோட்ட செய்தித் தொடர்பினை ஏற்படுத்தி அனைவரும் முழு மூச்சுடன் செயல்பட்டுள்ளனர். ஏனென்றால் களத்தில் மணித்துளியில் கருத்துப் பரிமாறும் அளவிற்கு – களத்தில் இறங்கி வேலை செய்த அமைப்புகள், அதிகாரிகள், அனைவருடனும் மாவட்ட நிர்வாகம் தொடர்பு வைத்துக்கொண்டு கணநேரத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டேயிருந்தது. இந்தப் பஞ்சாயத்துகளில் ஜாதி இந்துக்களின் தலைவர்கள் வகுக்கும் அனைத்திற்கும் பதில் திட்டங்களை வைத்து ஒட்டுமொத்தப் பஞ்சாயத்திற்கும் தேர்தலை நடத்த முனைந்ததால் மிகப்பெரிய வெற்றியினை மாவட்ட நிர்வாகம் பெற்றுவிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களைப் பற்றிய புரிதலும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தக் கடுமையான நடவடிக்கையையும் எடுத்து மாநில அரசிற்கு எந்த விதத்திலும் தர்மசங்கடத்தை உருவாக்கவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரங்களை வைத்தே சாதுரியமாக, தெளிவான திட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்கள். இந்தத் தேர்தலுக்குப் பெரிதும் உதவிய காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரும் பாராட்டுக்குரியோராவர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு சரியான தலைமை கிடைக்கும்போது, அது தன்னகத்தே உள்ள சக்தியை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெற்றுத் தருகிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த சான்றாகும். மாநில அரசு, அரசுத்துறைச் செயலர், மாவட்ட நிர்வாகம், அடிநிலை அரசு அலுவலர்கள், மக்களுடன் பணியாற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தலை நடத்தித் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் பஞ்சாயத்து அமைப்பையே உருவாக்கி விட்டனர். இதுவரை பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத்தான் நம் அரசு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் பிரயத்தனப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தப் பஞ்சாயத்துக்கான அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலை முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். இனிமேல் இந்தப் பஞ்சாயத்துகளில் தலைவர் ராஜிநாமா செய்தாலும் உதவித்தலைவரை வைத்துப் பஞ்சாயத்தை நடத்தி விடலாம். இந்தப் பஞ்சாயத்துகளைப் பின்பற்றி செல்லம்பட்டி ஒன்றியத்தில் இன்னொரு கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலை முறியடிக்க எடுத்த முடிவையும் மாவட்ட நிர்வாகமும் அமைப்புகளும் தகர்த்திருக்கின்றன. இவர்களின் செயல்களால் நம் அவமானம் நீங்கியது. சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் நமக்கு ஓர் அவமானம் நிகழ்ந்தது. ஆனால் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடந்து பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டதன் மூலம் நமக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நீங்கியது. இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நாம் உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள்தான் நமக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கியவர்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்