Gunmen Kidnap 150 : Iraq – Baghdad
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
இராக்கில் அமைச்சு அதிகாரிகள் ஒட்டுமொத்தமாகக் கடத்தப்பட்டனர்
இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள அரசாங்க அமைச்சுக் கட்டிடத்தில் இருந்து பெருமளவிலானோரை ஆயுதபாணிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கொமாண்டொக்களுக்கான சீருடையில், பாதுகாப்புப் படையினர் போன்று, வாகனத் தொடரணி ஒன்றில் வந்த ஆயுதபாணிகள், உயர் கல்வி அமைச்சுக்கு வெளியே வீதியை இரு புறமும் வழிமறித்துள்ளனர்.
கட்டிடத்துக்கு உள்ளே நுழைந்த ஆயுதபாணிகள் அங்கிருந்த பெண்களை ஆண்களிடம் இருந்து தனியாகப் பிரித்து, பெண்களை அறை ஒன்றினுள் அடைத்து விட்டு, ஆண்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின்படி, 40 முதல் 100 பேர்வரை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஒரு இராக்கிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல்கள் என்பது இரக்கில் வழமையாகிப் போய்விட்ட போதிலும், அங்கு அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய கடத்தல் இதுவே என்று பாக்தாதில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
அதேவேளை பாக்தாத் நகரின் சன நெருக்கடி மிக்க ஒரு சந்தைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், இராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
bsubra said
பாக்தாத் கடத்தல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்
பாக்தாதில் கடத்தப்பட்டவர்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்
பாக்தாதில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெருந்தொகையாக கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் அவர்களுக்கு ஊறு ஏதும் விளைவிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர் என்று முன்னதாக வந்த செய்திகளுக்கு மாறாக, சிலர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இராக்கிய அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் சிலர் பிடித்துவைக்கப்பட்டிருந்த பிறர் மூர்க்கமான தாக்குதலுக்கு ஆளானர்கள் என்று கூறியதாக மேல்நிலைக்கல்வி அமைச்சர் அபெத் தியாப் அல் உஜைலி கூறினார்.
ஒரு அரசாங்க கட்டிடத்திலிருந்து செவ்வாய்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டவர்களில் 70 பேர்கள் இன்னும் திரும்ப வரவில்லை என்று அமைச்சர் கணித்துள்ளார்.
இராக்கில் ஒரு சக்தி வாய்ந்த அரசு இல்லை என்பதால் தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறினார்.
பாக்தாதில் மிகச்சமீபத்தில் நடந்த வன்முறையில், துப்பாக்கிதாரிகள் , ஒரு ரொட்டிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்த குறைந்தது எட்டு பேரை சுட்டுக்கொன்றனர்.