Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Laloo Prasad Yadav – For Prime Minister of India (Dinamani Editorial)

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

லாலுவின் ஆசை

நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.

ஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.

பிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.

ரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் பதவியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் பிரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.

இவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: