Govt moves to stub out smoking scenes on TV – Two Years Jail Sentence
Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006
`டி.வி.’யில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றால் 2 ஆண்டு ஜெயில்
டெலிவிஷன் காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் (தடை) சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நரேஷ் தயாள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளின் இணை செயலாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கட்சி எம்.பி. சச்சின் பைலட்டும் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்.
புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதால், அதன் காரணமாக நிகழும் மரண விகிதங்களும் அதிகரித்து வருவதாக, பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலை பொருட்கள் தடை சட்டத்தின் 5-வது விதியை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புகைப்பழக்கத்தை பிரபலப்படுத்தி, சிகரெட் விற்பனையை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த சட்ட விதி தடை செய்கிறது. இந்த விதியை மீறுகிறவர்களுக்கான தண்டனை விவரங்கள் 22 மற்றும் 23-வது விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அதன்படி, அந்த விதியை மீறினால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. 2-வது முறையாக இந்த விதி மீறல் நடந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
புகைப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விளம்பர பலகைகளை அழிக்கவும் அரசுக்கு இந்த சட்ட விதிகள் அதிகாரம் வழங்கி உள்ளன.
மறுமொழியொன்றை இடுங்கள்