US Elections to the Congress & Senate – Saddam Hussein Death Sentence in Iraq
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
அமெரிக்கத் தேர்தலில் இராக் நிகழ்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன
![]() |
![]() |
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் புஷ் |
அமெரிக்கக் காங்கிரஸிற்கு நாளை செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இராக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்று வருகின்றன.
தேர்தல் நடைபெற இருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனிற்கு தண்டனை வழங்கப்பட்ட நேரத்திற்கும், அமெரிக்கத் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்புணர்த்தப்படுவதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் சார்பில் பேசவல்ல ஒருவர் மறுத்திருக்கிறார். இருந்த போதும், இராக்கிய நிகழ்வுகளை, தன்னுடைய குடியரசுக் கட்சிக்கு ஆதரவைக் கூட்டுவதிலும், ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவதிலும் அதிபர் புஷ் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இன்று ஃப்ளோரிடா, அர்கன்ஸாஸ் மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களில் இறுதி கட்ட தேர்தல் கூட்டங்களில் புஷ் பங்கேற்க இருக்கிறார். இராக்கில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கப் படையினர் ஆட்சேதத்திற்கு உள்ளாகி வருவது, இராக் ஆக்கிரமிப்பை ஒரு தேர்தல் விவகாரமாக பல தொகுதிகளில் ஆக்கியுள்ளதாக வாஷிங்டனில் உள்ள பி பி சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று இரு அவைகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நம்பும் ஜனநாயகக் கட்சியினர் பல இடங்களில் முன்னணியில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் குறிப்புணர்த்துகின்றன.
ஆனால், குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருவதாகவும் இந்தக் கணிப்புக்கள் காட்டுகின்றன.
bsubra said
அமெரிக்காவில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
அமெரிக்க அதிபர் புஷ்ஷின் கடைசி இரண்டாண்டு கால ஆட்சியின் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய , கடுமையான போட்டிக்கிடையே நடத்தப்பட்ட, அமெரிக்க பேராயத்துக்கான இடைக் காலத்தேர்தல்களில் , அமெரிக்கர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புஷ்ஷின் குடியரசுக் கட்சி, அவரது ஆறு ஆண்டுகால ஆட்சி முழுவதுமே, அமெரிக்க பேராயத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தது.
ஆனால், இராக் போர் மற்றும் வாஷிங்டனில் வெடித்துள்ள மோசடி விவகாரங்கள் ஆகிவை குறித்து வாக்காளர்களின் அதிகரித்து வரும் கவலை காரணமாக , இந்த நிலையில் மாறுதல் ஏற்படும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
பிரதிநிதிகள் அவையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போட்டி நடக்கிறது. செனட் அவையில் உள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சி, இந்த இரு அவைகளில் ஒன்றையோ அல்லது இரண்டினையுமோ கட்டுப்பாட்டில் எடுக்கும் என்ற நிலை இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டின ஆனால், குடியரசுக்கட்சியினர் சமீப நாட்களில் சற்று முன்னேறத் தொடங்கியுள்ளனர்.
bsubra said
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் அதிபரின் கட்சி பெரும்பான்மையை இழந்தது
கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மிகப் பெரியதான பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசுக் கட்சி தனது பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
செவ்வாயன்று நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ளனர். பெரும்பான்மை பெறுவதற்குத் தேவையான பதினைந்து இடங்களை விட டெமாக்ரடிக் கட்சியினர் அதிக இடங்களைப் பெற்றுள்ளனர்.
முதன் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பெண் சபாநாயகராக டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். வரலாற்றிலேயே மிக நேர்மையான, ஒளிவுமறைவற்ற, அறநெறிக் கோட்பாட்டின் அடிப்படையில் காங்கிரஸை டெமாக்ரடிக் கட்சியினர் வழி நடத்திச் செல்ல குறிக்கோளைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முதன்முறையாக அமெரிக்கக் காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், கீத் எல்லிசன் என்பவர் மினசோட்டாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
bsubra said
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான இடைக்காலத் தேர்தலில் இரு அவைகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடும் நிலையில் இருப்பது போலத் தோன்றும் ஜனநாயகக் கட்சியினர் தங்களது அவை நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பணியினைத் தொடங்கி இருக்கின்றனர்.
அமெரிக்காவை எதிர் நோக்கும் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாக தெளிவாகத் தெரிவித்து விட்ட அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஜனநாயகக் கட்சியின் நேன்ஸி பெலோஸியுடன் இன்று பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்த இருக்கிறார்.
அமெரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்த நபராக இருக்கப் போகும் திருமதி பெலோஸி, ஜனநாயகக் கட்சியினர் முன்னுரிமைகளாகக் கருதும், அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துதல், அமெரிக்காவின் இராக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வருகிறார்.
அமெரிக்க செனட் தேர்தலில், முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத விர்ஜீனியாவிலும், ஜனநாயகக் கட்சியினரே வெற்றி பெறுவார்கள் என்பது போலத் தோன்றுகிறது. அதிகாரபூர்வமாக அந்தத் தொகுதியும் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்தால், இந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியை, ஜனநாயகக் கட்சி தோற்கடித்த நிகழ்வு நிறைவு பெற்று விடும்.
அமெரிக்காவிற்கு புதிய பாதுகாப்புத் துறைச் செயலர்
அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அறுபத்து மூன்று வயதான ராபர்ட் கேட்ஸ் என்பவரை அமெரிக்க அதிபர் புஷ் நியமித்துள்ளார். ராபர்ட் கேட்ஸ் அமெரிக்க சர்வதேச புலனாய்வுத் துறையான சி ஐ ஏவின் முன்னாள் இயக்குநராவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான இடைக்காலத் தேர்தலில் அதிபர் புஷ் அவர்களின் குடியரசுக் கட்சி தோல்வி கண்டதற்குப் பிறகு பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த டொனல்ட் ரம்ஸ்ஃபெல்ட் நேற்று புதன்கிழமை இரவு பதவி விலகினார். அமெரிக்காவின் முந்தைய ஆறு ஜனாதிபதிகளுடன் பணியாற்றியுள்ள கேட்ஸ், இராக் தொடர்பான அமெரிக்க கொள்கையில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருவார் என புஷ் தெரிவித்துள்ளார்.