Who will be the next Mayor of Chennai?
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006
சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்?- 3 பேர் பெயர் அடிபடுகிறது
சென்னை, அக்.23-
சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்
- 90 இடங்களில் தி.மு.க.வும்,
- 38 இடங்களில் காங்கிரசும்,
- 17 இடங்களில் பா.ம.க.வும்,
- அ.தி.மு.க. 4 இடங்களிலும்,
- இந்திய கம்ïனிஸ்டு,
- விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,
- ம.தி.மு.க.,
- பகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.
கடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.
மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
மேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேயர் பதவிக்கு
- மா.சுப்பிரமணியம்,
- தனசேகரன்,
- சுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.
மேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.
இதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.
சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
துணைமேயர் பதவிக்கு
- 111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,
- 69-வது வார்டு சாந்திபாய்,
- 68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி
ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்