Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sri Mathivaanan – Casteism, Society Dwellings, Certificates, Oppression

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

விஞ்ஞான வழியில் ஜாதீயம்!

ஸ்ரீ.மதிவாணன்

நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் சட்டத்தின் ஆட்சி, கைலையங்கிரி நோக்கி நாவுக்கரசர் சென்றது போல் நெஞ்சினால் ஊர்ந்தேனும் நடக்க வகையுள்ளது. அவற்றின் இயக்கங்கள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளியாகும் வாய்ப்புகள் மிக்கதாயுள்ளன. ஆனால், அவ்வவ்வுறுப்பினர்களின் ஊர்களில் – அவையும் கிராமங்களெனில் – ஒட்டு மொத்த அதிகாரங்களும் ஜாதிய குண்டாயிஸத்தின் அடிப்படையில் மட்டுமே கைப்பற்றப்பட்டு ஆண்டு அனுபவிக்கப்படுகின்றன. ஆங்காங்கே நடப்பவை வெளியில் தெரிய வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு. இவ்விடங்களில் அரசுகளைவிட வலிமை மிக்கதும் அரசினையே வரையறுப்பதுமாகிய ஜாதியமே சட்டம்! வேதம்! சாஸ்திரம்!

எஸ்.டி. (ST) எனப்படும் பழங்குடி – மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதை மிகப் பெரிய துணிச்சல் எடுப்பு நடவடிக்கையாகவே கீழ்நிலை மற்றும் நடுநிலை அதிகார வர்க்கங்கள் கருதி வந்துள்ளன. அவர்களைப் பொறுத்தவரை எஸ்.டி. சான்றிதழ் வழங்குவது என்பது வேண்டாத தலைவலி! சான்றிதழ்கோரி வருபவர்களிடம், “இந்த ஜாதியே இந்த ஊரில் இல்லையே’ என அடிவயிற்றில் இடியைப் பாய்ச்சுவது மிக இயல்பான “நடைமுறை’. குறிப்பிட்ட கலாசாரமுறை பயிற்றும் எஸ்.டி. வகையினர் குறிப்பிட்ட இடங்களில்தான் வசிப்பார்கள் என்பது ஆளும் வர்க்கத்தின் பிடிவாதம்.

ஜாதிச் சான்றிதழ் வழங்க, நில உரிமைப் பத்திரங்களில் காணப்படக்கூடிய ஜாதிக்குறிப்பை மட்டுமே அழுத்திக் கோருவது, அப்பட்டமான சட்ட உடைப்பு நடவடிக்கை! கால்காணி நிலமுமற்ற கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் எந்தப் பத்திரத்தைக் காட்டுவார்கள்? அதைப் பெற நிலம் வாங்கி, அந்த ஆவணத்தில் ஜாதிப் பதிவு செய்த பிறகுதான் சான்றிதழ் கிடைக்கும் என்பது, அம்மக்களைத் தற்கொலைக்கோ தவறான வழிகளுக்கோ மறைமுகமாகத் தூண்டும் குற்ற நடவடிக்கையே!

இருளர் மட்டுமல்ல, குறும்பர், சங்கிலிக்குறும்பர், குருமன்ஸ், மலைக்குறவர், மலையாளி, காட்டுநாயக்கன் நரிக்குறவர், புதிரைவண்ணார், பளியர், பளிஞர் – என, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினர் சார்ந்த பலப்பல பிரிவுகளுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைப்பது தவமாய்த் தவமிருந்தும் பலப் பல நேரங்களில் கானல் நீராகவே இருக்கிறது. காரணம், ஜனநாயகம் என்ற பெயரில் துறைதோறும் குறுநில மற்றும் பெருநில மன்னராட்சிகள் நடந்து வருவதே! ஆளும் வர்க்க ஆண்டைகள் தத்தங்களைப் புரவலர்களாகவும், தம்மிடம் கோரிக்கை வைக்க வரும் ஏழை மக்களை இரவலராகவும் நினைத்தும் நடத்தியும் வருவதை அறிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாமல் அழுத்தமான மௌனத்தில் மறுகுகிறார்கள், பிரித்தாளப்படும் மக்கள்!

காலங்காலமாக “மேல்’ ஜாதியினரால் அமுக்கப்பட்டும் அறியாமை மற்றும் மூட நம்பிக்கைகளில் மூழ்கடிக்கப்பட்டும் கிடக்கும் தலித் மற்றும் பழங்குடியினரால் தத்தம் ஜாதிகளுக்கான ஆவணச் சான்றுகளை எப்படிப் பாதுகாத்து வைத்திருக்க இயலும்? அரசின் மேல்நிலை மாந்தர்தம் வழிகாட்டலின்கீழ் இடைநிலை – அடிநிலை அதிகார வர்க்கங்களல்லவா ஜமாபந்திகள் மற்றும் கள ஆய்வுகளின் மூலம் ஊரில் ஜாதிப் பிரிவுகளைக் கணக்கெடுத்துத் தேவையான பிரிவினர்க்குச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்? வரிகளின் மீதான தாக்கீது அறிக்கைகளை அனுப்பும் முறையில் இதையும் செய்யலாமே!

ஒரு பக்கம் சலுகைகளுக்காக அரசிடம் தங்களைப் பின்தங்கிய பட்டியலில் சேர்க்கக்கோரும் ஜாதிகள், தலித் – பழங்குடிகளைப் பொறுத்து மட்டும் “மேல்ஜாதி’, “உயர் ஜாதியினர்’, “ஜாதி ஹிந்துக்கள்’ என்ற தலைப்புகளில் மட்டுமே உலா வருகின்றன. அவர்களுக்கு எஜமானர்களாகத் தங்களைத்தாமே நியமித்துக் கொள்கின்றன.

இப்போதெல்லாம் ஜாதீயம் விஞ்ஞான வழியில் வளர்க்கப்படுகிறது. ஜாதிய வன்முறை, உயர்கல்வி, பதவி, அரசியல் செல்வாக்கு, பொய்ப்புகழ்ப் பரவல் போன்றன ஒருங்கிணைந்து, அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தலைகளின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. “அடிக்கும் படைகள்’, ” அடிப்படை உரிமைகளைக் கெல்லியெயெறிந்து கொண்டிருக்கின்றன.

பாப்பாப்பட்டிகளும், கீரிப்பட்டிகளும் நாட்டார்மங்கலங்களும் கொட்டாங்கச்சியேந்தல்களும் வெறும் உதாரணங்கள்தாம். அவற்றையொட்டிய ஊர்களை அளக்க முயன்றால், மிகப் பெரும் அடையாள அணிவகுப்பே நடக்க வேண்டி வரும். ஆனால், அதிகார வர்க்கங்களும் அரசியல் ஆண்டைகளும் மிக எளிதாக இந்த அடிமை மக்களின் மீதான ஆளுகை மற்றும் அதன் மூல காரணமாகிய அறியாமைத் திணிப்பை விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் ஜாதிச் சான்றிதழ் கொடுக்கிறார்களோ இல்லையோ கிராமங்களின் ஜாதீய துர்தேவதைகள் சான்றிதழ் தந்து கொண்டுதான் உள்ளன. அச்சான்றிதழ், “ஜாதி கெட்ட பயலுக’ என்பதே!

ஒரு பதில் -க்கு “Sri Mathivaanan – Casteism, Society Dwellings, Certificates, Oppression”

  1. Gurumurthy said

    Tribals News value news our commnity also affted Raya kurumban

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: