IT Corridor to have public arts project displays – Panchabhootham Sculptures
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006
ஐ.டி. காரிடார் சாலைச் சந்திப்புகளில் பிரம்மாண்டமான பஞ்சபூத சிற்பங்கள்
பா. ஜெகதீசன்
சென்னை, அக். 23: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மாமல்லபுரம் வரை அமைக்கப்படும் ஐ.டி. காரிடார் சாலையின் முக்கிய சந்திப்புகளில் பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமான சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
திருவான்மியூர் பகுதியில் “அக்னி‘யை உருவகப்படுத்தும் வகையிலான அழகிய சிற்பம் உருவாக்கப்படுகிறது.
ஐ.டி. காரிடார் சாலை அமைக்கும் பெரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மத்திய கைலாஷில் இருந்து சிறுசேரி வரை 20 கி.மீ. தூரத்துக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டுச் செலவில் சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இச்சாலை 10 வழித்தடங்களைக் கொண்டதாக இருக்கும்.
இச்சாலையில் சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்குச் செல்ல சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.
2-வது கட்டமாக சிறுசேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 25 கி.மீ. தூரத்துக்கு சூப்பர் சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 சந்திப்புகளில்…: இச்சாலையின் 5 சந்திப்புகளில் தலா ஒன்று வீதம் மொத்தத்தில் 5 பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமாண சிற்பங்கள் நிறுவப்படுகின்றன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோஹித் மோதி, துணைத் தலைவர் கே. மால்மருகன் ஆகியோர் தெரிவித்தனர்.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள்.
இவற்றில் நெருப்பை உருவகப்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான வண்ண ஜுவாலைகளைப் போல காட்சி தரும் 30 அடி உயர சிற்பம் திருவான்மியூர் பகுதி சந்திப்பில் உருவாக்கப்படுகிறது. கான்கிரீட்டில் இச்சிற்பம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சிறுசேரி பகுதியில் “நீரை’ உருவகப்படுத்தும் சிற்பம் உருவாக்கப்படுகிறது.
சுரங்கப் பாதைகள்: தரமணி -சிறுசேரி இடையேயான 17 கி.மீ. தூரத்தில் முக்கிய இடங்களில் பாதசாரிகளுக்கான நவீன சுரங்கப் பாதைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்