AIIMS Vengopal’s corrupt practices exposed by the Healthcare Ministry
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006
வேணுகோபாலின் ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், நட்சத்திர விருந்து: மக்கள் பணத்தில் “கொண்டாட்டம்’
ஏ. தங்கவேல்
புதுதில்லி, அக். 24: சர்ச்சைக்குரிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (AIIMS) இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபால், தனது ஆதரவாளர்களுக்கு, வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளித்து, பொதுமக்கள் பணத்தில் குஷிப்படுத்தியுள்ளார் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஏஐஐஎம்எஸ்-ஸின் நிர்வாக அமைப்புக் கூட்டம் கடந்த வாரம் நடந்தபோது, இதுதொடர்பான ஆவணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அந்த ஆவணங்களின் மூலம், நோயாளிகளுக்கு அல்லாமல் மற்ற தேவையற்ற காரியங்களுக்கு பொதுமக்கள் பணம் விரயமாக்கப்பட்டது தெளிவாகியுள்ளது.
- ஏஐஐஎம்எஸ் இயக்குநர்,
- துணை இயக்குநர் அலுவலகத்தின் நான்காம் பிரிவு ஊழியர்கள்,
- மூத்த நிதி நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு செல்போன்கள் மக்கள் பணத்தில் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆடம்பர விருந்துகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இயக்குநருக்கு வேண்டிய நபர்களுக்கு, தகுதியில்லாவிட்டால் கூட, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு, விமான டிக்கெட்டுகளுக்காக பெருமளவு தொகை செலவிடப்பட்டுள்ளது. அதுபோன்ற கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் அந்தக் கருத்தரங்ககுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து அறுவைச் சிகிச்சை மற்றும் ஸ்கேனிங் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்காக ஏஐஐஎம்எஸ் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை சுமார் ரூ.40 கோடி, விதிகளுக்கு மாறாக, நிரந்தர டெபாசிட்டில் போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அறுவைச் சிகிச்சை நடைபெறாத நிலையில், அந்தத் தொகை நோயாளிகளுக்குத் திருப்பியளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
குற்றப்பிரிவு போலீஸôரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய விசாரணையில் வெளியான இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வேணுகோபால் உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை.
அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான உணவுப் பொருள்கள், டெண்டர் முறையில் முடிவு செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் ஒரே குறிப்பிட்ட சப்ளையரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும், பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரங்கள் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்