Nobel prize for Yunus hailed as anti-poverty boost
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006
சுய உதவிக் குழுக்களின் தந்தை
இரா.நாறும்பூநாதன்
கடைசியில், சகலவிதத்திலும் தகுதி பெற்ற இந்த மனிதருக்கு உலகின் உயரிய விருது அளிக்கப்பட்டிருப்பதை எண்ணி இந்தியர்களாகிய நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “சுய உதவிக் குழுக்களின் தந்தை’யாகக் கருதப்படக்கூடிய முகம்மது யூனுஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை இந்தியாவின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பரவசத்துடன் வரவேற்பதைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதே சரியாக இருக்க முடியும்.
1976-ல் பங்களாதேஷில் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் 1986-களுக்குப் பின்பாக இந்தியாவில் படிப்படியாகத் துவங்கி உலகிலேயே அதிக சுய உதவிக் குழுக்களைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்தப் பொருளாதார நிபுணரின் தொலைநோக்குப் பார்வை நுட்பமாகவும், சரியானதாகவும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முகம்மது யூனுஸுக்கு 1974-ல் ஏற்பட்ட வங்கப்பஞ்சம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்களின் அவல நிலை, கந்துவட்டிக் கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் நிலையை நேரில் பார்த்தார். மருந்தின்றி நோயில் அவஸ்தைப்படும் ஒரு வயதான மூதாட்டியைக் காப்பாற்றக்கூட அருகில் உள்ளவர்கள் முயலாத இயலா நிலையைப் பார்க்க நேரிட்டது.
அந்தத் தெருவில் வசித்த பெண்களிடம் மிகச் சொற்பமான தொகையை வசூல் செய்து, அந்த மூதாட்டியை உயிர் பிழைக்க வைத்து அந்தப் பெண்கள் சுயமாகத் தொழில் துவங்க சிறிய தொகையைக் கடனாகக் கொடுத்தார் யூனுஸ். தங்களின் சிறிய பங்களிப்பில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்ததையும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய பொருளாதார உதவியைப் பற்றிக் கொண்டு அந்தக் கடனை சிறிது சிறிதாக அடைக்க இயலும் என்ற நம்பிக்கையையும் இந்தச் சிறிய நிகழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ரொம்ப நேர்மையாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய விதம் யூனுஸுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசு வங்கிகள் மறுத்த நிலையில், 1976-ல் கிராமிய வங்கியை பெண்களுக்காகவே துவக்கினார். பெண்களின் சுய உதவிக் குழுக்களை நிறுவி, அவர்களது வாராந்திர சேமிப்பை வங்கியில் செலுத்தச் செய்து, அதன் அடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். பங்களாதேஷ் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட்ட பின்னணியில், யுனெஸ்கோ மூலம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய மதிப்பீடு உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இவை செயல்படும் என்பதைக் கண்டறிந்து ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த சிந்தனை பரவியது.
1986களுக்குப் பின்பு இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இதன் அபரிதமான வளர்ச்சி, பெண்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஒரே மாதிரியாக சீருடையில் 20 பேர், 30 பேர் உள்ளூர் பிரச்சினைகளை, நகராட்சிகளில், மாநகராட்சிகளில் மொத்தமாக முறையிட்டபோது, அவசர அவசரமாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். கடைசியாக, சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்தார்கள் என்ற போட்டி தமிழகத்தில் முக்கிய இரு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டதில் போய் முடிந்தது. எது எப்படி என்றாலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், சுய உதவிக் குழுக்களை ஆதரித்தன. இந்தியாவில் இன்றைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்றால் அவற்றில் உத்தேசமாக 5 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் வங்கிகளில் கடனை வாங்கி மிகவும் நேர்மையாகத் திருப்பிச் செலுத்துவதை அறிந்து, பெரும்பாலான வங்கிகள் இவர்களுக்கு கடன் தருவதையே விரும்புகின்றன. “வாராக் கடன்கள்’ பட்டியலில் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இல்லையென்றே கூறலாம்.
மனித சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண எத்தனையோ தத்துவங்களும், மதங்களும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கின்றன. ஆனாலும் மனித வாழ்வு நைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆயினும் ஓரளவு சாத்தியப்பாடுடன் கூடிய ஓர் அமைதியான இயக்கத்தை – பெண்களின் விழிப்புணர்வை, நம்பிக்கையைப் பெறுவதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் முகம்மது யூனுஸ் என்றே கூறலாம்.
சுயதொழில் மூலம் சம்பாத்தியம் செய்யும் இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பெண்கள் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். “நம்ம ஆளுக்குத்தான் நோபல் பிரைஸ் கொடுத்திருக்காகளாம்…’ என்று மகிழ்ச்சியுடன் சில பெண்கள், பத்திரிகை படித்துச் சொல்லும்போது, ஓரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரைப் பற்றி ஒரு நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் நினைவு கூர்வதுகூட இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்