Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Indian Economic Growth : Analysis by S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

வளமையே, வா!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

அறிஞர் எட்வர்டு லூசி (Edward Luce்) தனது சமீபத்திய புத்தகத்தில் (Inspite of the Gods) இரு கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

ஒன்று, “”இந்தியர்கள் பொதுவாக வெற்றிக்கனியை எட்டிப் பிடிப்பதற்கு முன்னரே, வெற்றி விழா கொண்டாட முற்படுவார்கள்.”

இரண்டு, “”இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தானாக இயங்குவதும் (automatic) அல்ல; அதே நேரம், உத்தரவாதம் கொண்டதும் அல்ல!”

அவரது கூற்றை மறுப்பதற்கில்லை. எனினும், ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக நிகழும் பொருளாதார முன்னேற்றங்கள், நிச்சயமாக நமக்கு மனநிறைவு அளிக்கக்கூடியவையே.

நமது தொழில் உற்பத்தி, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 12.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. முதல் முறையாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இதுவரை சேவைத் துறை வளர்ச்சியின் பயனாகவே, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8 சதவீதத்தைத் தொட்டது. இப்போது, சேவைத்துறை மட்டுமல்லாமல் தொழில் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி இரண்டு மடங்காக உயருவதும் சாத்தியமே.

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இந்த இரட்டை இலக்க தொழில் உற்பத்தி வளர்ச்சியில், தகவல் தொழில் நுட்பத் துறையோ, பி.பி.ஓ. எனப்படும் கணினி சார்ந்த சேவையோ சேர்க்கப்படவில்லை. அவை முழுக்க, முழுக்க சேவைத்துறையின்கீழ் வருகின்றன.

இங்கு குறிப்பிடப்படும் தொழில் உற்பத்தி வளர்ச்சி என்பது மூலதனப் பொருள்கள், கட்டமைப்புத் துறை, கார், டிரக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள், உருக்கு, சிமெண்ட், ஜவுளி, மருந்துப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சர்க்கரை, சோப்பு என எண்ணற்றப் பொருள்களின் உற்பத்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் ஜவுளி. கோட்டா முறை கடந்த ஆண்டு ரத்து ஆன பின், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அபரிமித வளர்ச்சி தொடரும் என்பது மட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயரும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

சிறிய கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நலிந்த நிலையில் இருந்த காகிதம் மற்றும் காகிதப் பொருள்கள் உலக அளவில் போட்டியை எதிர்கொண்டு, சந்தையை பிடிக்கும் வகையில் நவீனமடைந்துள்ளன; வலுவடைந்துள்ளன. நம் நாட்டு மின் விசிறிகள், சீன மின் விசிறிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதே விலையில், “வால்-மார்ட்’க்கு விற்பனை ஆகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

டாடா ஸ்டீல் தங்கள் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், அவர்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது என்பது தனிக்கதை. சுரங்கம், மின் உற்பத்தித் துறைகள் 13 சதவீதத்துக்கு மேல் முன்னேற்றம் அடைந்துள்ளன.

ஏற்றுமதியும், உள் நாட்டுத் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, பிரபலமாக உள்ள நிறுவனங்கள், மற்றும் தொடர்ந்து வெற்றிக் கதைகள் படைக்கும் நிறுவனங்களைப் பற்றி மட்டும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தள்ளாடிக் கொண்டிருந்த, சற்றே நலிவடைந்திருந்த தொழில் நிறுவனங்களும் தலை நிமிரத் தொடங்கி உள்ளன என்பதுதான் கவனிக்கத்தக்கது. அடிப்படை ரசாயனப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பிட்ட கால கட்டத்தில், வங்கிகளின் கடனுதவி தொழில்துறைக்கு 31 சதவீதம் உயர்ந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையும் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. நாட்டின் தனி நபர் சேமிப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், இதில் நடுத்தர மக்களின் பங்களிப்பு பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

இன்றைய சூழலில், பொருளாதார வளர்ச்சியின் பயனாக, வேலை வாய்ப்பு அதிகரிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. உதாரணமாக, வங்கி மற்றும் நிதித்துறை சேவை அமைப்புகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் என்னதான் வளர்ந்தாலும், இத்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மாறாக, தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாக 1.31 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், அதே ஆய்வு தரும் இன்னொரு செய்தி ஆறுதல் அளிக்கக்கூடியது. கட்டுமானத்துறை, தகவல் தொடர்பு, போக்குவரத்து, தொழில்கூட உற்பத்தி, மின்சாரம், மற்றும் இதர சேவைத்துறைகளில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். மொத்தத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேற்கூறிய துறைகளில் 10 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என்பது ஆய்வறிக்கையின் சாரம். ஆனால், ஆண்டுதோறும் 86 லட்சம் புதிய பட்டதாரிகள் வேலை தேடி சந்தையில் நுழைகிறார்கள் என்பதுதான் சோகம்.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி இவ்விதம் இருக்க, தனி நபர்களின் முயற்சியின் பயனாக விளையும் பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் தனி நபர்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுப்பதாக அமைந்துள்ளது. பன்னாட்டுத் தர நிர்ணய அமைப்புகளின் ஆய்வுப்படி, இந்தியாவில் தனி நபர் கோடீஸ்வரர்களின் (நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

உலக அளவில் பிரபலமாக “கார்டியன்’ நாளேட்டின் பொருளாதார ஆசிரியர் Larry Elliot தனது சமீபத்திய கட்டுரையில், அமெரிக்க டாலரின் மதிப்பு எப்படி இறங்குமுகத்தில் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “”19-வது நூற்றாண்டில் பிரிட்டன் ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாகத் திகழ்ந்தது. அப்போது அதன் நாணயமான ஸ்டெர்லிங் உச்சத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதேபோல், அமெரிக்கா தன் சக்திக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க நிலை இப்படியே நீடிக்குமானால், 2050-ம் ஆண்டுக்குள், நிச்சயமாக சீனாவும் அனேகமாக இந்தியாவும், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகத் திகழக்கூடும்’.

இந்தச் செய்தியை பார்த்துவிட்டு எட்வர்ட் லூசி கூறுவதுபோல் உடனே இந்தியர்கள் வெற்றி கொண்டாடப் போவதில்லை. ஆனால், அவரே ஒப்புக் கொள்வதுபோல், இந்தியப் பொருளாதார முன்னேற்றம் தானாக இயங்குவதோ  அல்லது, நிச்சயம் நிகழும் (guaranteed) என்றோ சொல்லுவதற்கில்லை. இடையே எத்தனையோ தடைக்கற்கள் உள்ளன. தொழில் சுழற்சியில் மேலே ஏறும்போது, கீழே இறங்குவதும் இயல்பே. கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இத்திசையில் ஆற்றிட வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நமது துறைமுகங்களில், விமானக் கூடங்களில் கிடைக்கும் வசதிகள் மேலும் மேம்பட வேண்டியது அவசியம். நெடுஞ்சாலைகள், பாலங்கள், மின்சாரம் என பல கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதையே இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். இத்தனை குறைபாடுகள் இருந்தும், இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. தடைக் கற்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டால், வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரிக்கும் அல்லவா? இந்த உணர்வுடன் செயல்படுவது, வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு முன்பே கொண்டாடுகிறோம் என்றாகாது. இன்னும் கொஞ்சம் “தம்’ பிடித்து “எம்பினால்’ புதிய உயரங்களைத் தொட்டு விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு நூறு கோடி மக்கள் செயல்படுவது நல்லதுதானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: