DMK Government’s undemocratic collusion with election commission
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தன் மணிமகுடத்தில் மீண்டும் அந்த வைரத்தைப் பதித்துக்கொண்டது.
சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மட்டுமன்றி, முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது சுமார் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 35 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் 19,909 வாக்குகளே பெற முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. கடந்த தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, மொத்தம் 17 ஆயிரம் வாக்குகளுடன் அதிமுகவை மிக நெருங்கி, 3-வது இடத்தில் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதே நிலைதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் தொடர்கிறது.
மதுரை மாநகரின் வெற்றி திமுகவுக்குப் பெருமை சேர்த்தாலும், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நடந்த வன்முறை, அதன் பெருமையைக் குறைப்பதாய் அமைந்துவிட்டது.
உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளுங்கட்சி விரும்பாத சம்பவங்களை சில அதிகாரிகள் பூசிமெழுகுவது வழக்கமான ஒன்றுதான். இது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்ட்டுகள் என்ற அளவில் முடிந்து போகும்.
2001-ல் அதிமுக ஆட்சியில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் கள்ளவோட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு என பல சம்பவங்கள் இருந்தன. இருப்பினும் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாஜக, தேமுதிகவினரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவைக் குற்றம் சாட்டியதைப் போன்ற சம்பவம் இதுவே முதல்முறை.
சென்னை மாநகர முந்தைய மேயரும் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அப்பதவியிலிருந்து விலக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடுதான்-ஓர் இடத்தில் கூட அதிமுக வந்துவிடக்கூடாது என்ற தீவிரமும், அதைத் தொடர்ந்த வன்முறையும் எனக் கருதப்படுகிறது. திமுகவின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது.
வன்முறைகள் தலைகாட்டியவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “முரசு சின்னத்தை முடக்கிவிட்டீர்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதும் உடனே எச்சரிக்கை விடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, வன்முறை நடந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் இன்று நீதிமன்றத்தில் குட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.’
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தன. அதேபோன்ற நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் செய்யத்தவறி விட்டது. மக்களுக்கு, குறிப்பாக ஊரக மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இதுபோன்ற செயல்களால் குறைந்து போகும்.
தமிழகத்தில் நடந்த பிரசாரங்களில் மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் முழுமையாகத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இதுவே ஒரு பொதுவான ஜனநாயகத்தன்மைக்கு விரோதமானது. இது எதிர்மறை அரசியலாகும். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம்.
மறுமொழியொன்றை இடுங்கள்