Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

State of Scheduled Castes & Tribes – Unable to get the Community Certificates

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சாதியப் “பாம்பு’கள்-“கீரி’ப்பட்டிகள்!

முகில்வண்ணன்

“தலித்துகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைவதைச் சாத்தியமாக்கிவிட்டது வாக்குரிமை; ஆனால், அந்த வாக்கு வங்கியால், அவர்களைத் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களுக்குள் நுழைய வைக்க முடியவில்லையே; ஏன்? என்று கேட்டார் சத்யஜித் பட்கர்.

இன்னும் ஒரு கேள்வியும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது;  “ந.ப. எனும் பட்டியல் பழங்குடியினருக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவி உள்பட பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பதவிகளால் அந்தந்த ஊரிலுள்ள பழங்குடியினருக்கு  “சாதிச் சான்றிதழ்கள்”கூட பெற்றுத் தர முடியவில்லையே! ஏன்?”

வெளிச்சத்துக்கு வராத கீரிப்பட்டிகளும், பாப்பாப்பட்டிகளும், நாட்டார்மங்கலங்களும், புற்றுக்குள் பாம்பாகத் தமிழகத்தில் இன்னமும் பல ஊர்களில் உள்ளன. இதோ ஓர் எடுத்துக்காட்டு:

விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கெல்லையில் மலை சூழ்ந்த ஒரு கிராமம்: (தண்டரை எனும் பெயர்கொண்ட பல ஊர்களில் அதுவும் ஒன்று) சுமார் 1000 பேர் உள்ள கிராமத்தில் 23 குடும்பங்களில் 60 வாக்காளர்கள் மட்டும் “இருளர்’ எனும் பட்டியல் பழங்குடியினர். இம்முறை இட ஒதுக்கீட்டுச் சுழற்சியில் தலைவர், ஓர் உறுப்பினர் என அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்க்கச் சென்ற எனக்குப் பல அதிர்ச்சிகள்! 59 ஆண்டுக்கால சுதந்திரத்தில், புறத்தோற்றத்தில் மட்டும் சற்றே மாறி, மனத்தளவில் சற்றும் மாறாத “பழங்கால மக்களை’ அங்கே அடையாளம் காண நேர்ந்தது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில், இங்கும் “கீரி’கள் கட்டப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டு, (சாதிப்) பாம்புகள் சுதந்திரமாய்ப் படமெடுத்தாடி மிரட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஊரிலுள்ள பிற்பட்ட வகுப்பினரில் உள்ள சில இளைஞர்களின் முயற்சியால், நப எனும் “இருளர்’ குடும்பங்கள் 23க்கும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகளும் “”ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம்” ரகம்தான்.

75% மானியத்தில் பசுக்கள், செம்மறியாடுகள் பெற்றுத் தரப்பட்டதாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற “”மான்யம்” பெறும் விஷயங்களுக்கு, அதிகாரிகள் அவசர அவசரமாக “”இவர்கள் இருளர்கள்” எனும் நப பிரிவினர் எனத் தாற்காலிகச் சாதிச் சான்றிதழ்கள் தயார் செய்து (“”பங்கு போடும்”) திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கின்றனர்.

ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளாய், அந்த இனத்தில் சில மாணவர்கள் 10ஆம் வகுப்பும், ஓரிருவர் 12ஆம் வகுப்பும் படித்திருந்தும் “”சாதிச் சான்றிதழ்கள்” வழங்கப்படாததால், மேற்படிப்புக்கோ, வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கோ செல்ல முடியாத நிலை.

விவசாயக் கூலித் தொழிலாளிகளாக, முத்திரை குத்தப்படாத கொத்தடிமைகளாகவும் இன்றுவரை இருக்கும் அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), முதல் கோட்ட வருவாய் அலுவலர் (RDO) வரைப் படியேற நேரமும் இல்லை; படியளக்கப் பணமும் இல்லை; எனவே, சாதிச் சான்றிதழ் பெற முடியவில்லை.

இருளர்களில் ஒரு பெற்றோர் மட்டும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவரமான ஒருவர் மூலம் புகார் மனு அனுப்பினார்.

மனு மீதான நேரடி விசாரணைக்கு ஓர் அதிகாரி வந்தார். மனுதாரரை எலி பிடித்துக் காட்டச் சொன்னார். அவரும் ஓர் எலி வளைக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு பானையால் அதை மூடி, புகைபோட்டு, எலிகள் வெளியேறும்போது பிடித்துக் காட்டினார்.

“”எலி பிடிப்பது சுலபம்; பாம்பைப் பிடித்துக் காட்டு” என்றார். “”பாம்பு நிலையாக ஓரிடத்தில் தங்காது; அதைத் தேடிப்பிடிப்பது கடினம்” என்று கூறிவிட்டார் அந்தப் பழங்குடி.

“”கன்னிமார் சாமி கும்பிடுவீர்களாமே! சாமி ஆடிக்காட்டு” என்றார். அதற்கும் தலை குளித்துவிட்டு, கையில் கற்பூர தீபம் ஏற்றி அவர் “”ஆ.. ஊ..” என ஆடிக்காட்ட, அருகிலிருந்த பெண்கள் பேயாட்டம் ஆட, சாமி ஆடுபவர் அப் பெண்களைச் சாட்டையால் அடிக்க (அதிலும் ஒரு லாவகம் உண்டு) பதறிய அதிகாரி அவர்களை “இருளர்கள்’ (நப) என ஒப்புக்கொண்டு சென்றார்.

போனவர் கோப்பில் இப்படி எழுதி வைத்துள்ளாராம்:

“”இவர்கள் பழக்கவழக்கத்தால் இருளர்கள்தாம். ஆனால் போதிய ஆவணச் சான்றுகள் இல்லை (நில உரிமைப் பத்திரங்களில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்); ஆதாரங்கள் தந்தால், சாதிச் சான்றிதழ் வழங்கலாம்.”

அதன்பின் அவரது “”ஆண்டை” ஆயிரக்கணக்கில் “அன்பளிப்பு’ கொடுத்து ஓரிருவருக்கு மட்டும் “சாதிச் சான்றிதழ்’ பெற்றுத் தந்ததாகவோ, தர இருப்பதாகவோ கேள்வி.

சென்ற ஆண்டு 12ஆம் வகுப்புத் தேறிய ஒரு பழங்குடி மாணவன் உரிய காலத்தில் “சாதிச் சான்றிதழ்’ கிடைக்காததால் இடைநிலை ஆசிரியப் பயிற்சியில் இலவசமாக இடம் கிடைத்தும் சேர முடியவில்லையாம். இந்த ஆண்டாவது கிடைத்தால் ஒருவராவது அரசுப் பணிக்குத் தயாராகலாம்.

வீட்டுக்கும், மாட்டுக்கும் செம்மறி ஆட்டுக்கும் கடன் என்றால், “சாதிச் சான்றிதழ்’ தயாரித்து வரும் அதிகாரிகள் மனிதர்களுக்கு மட்டும் தர மறுக்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர். ஏன்? இதில் “”எவருக்கும் லாபமில்லை – பயனாளிகளைத் தவிர!

விடுதலை என்பது ஒரு வேட்கை; அது அறிவுதாகத்தால்தான் வரும். “”விலங்கை உடைப்பதால் மட்டுமே விடுதலை கிட்டாது; விலங்கு, மனிதனானால் மட்டுமே அது கிட்டும்” என்பார் கேம்ஸ் ஓப்பன் ஹிம்.

மேற்படிப்புக்கான “சாதிச் சான்றிதழ்கள்’ தர மறுத்து, அவர்களது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டு, தலைவர் பதவி போன்ற அலங்காரங்களை மட்டும் அளிப்பது, இன்றைய முதல்வர் பாணியில் சொல்வதென்றால் “புண்ணுக்குப் புனுகு பூசும்’ வேலையல்லவா!

தேர்தலைப் புறக்கணித்தால், அவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகிறோம்.

தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பது, ஆள் கடத்துவது, ஊரைவிட்டுத் துரத்துவது, நின்று வென்ற பின்னும் “கைப்பாவையாய்’ ஆட்டுவிப்பது, ஆட மறுத்தால், “”வைத்தால்தான் பிள்ளையார்; வழித்தெறிந்தால் சாணி” என அவனை உடனே ராஜிநாமா செய்யச் செய்வது; மறுத்தால், மரணப் பரிசளிப்பது என வெறிக் கூத்தாடும் சாதிய நச்சரவங்களை என்ன சொல்லி அழைப்பது?

இக் கொடுமைகளைக் கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள், வாயிருந்தும் ஊமையாக இருக்கும் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் – இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

இப்போது நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப் புற்றுநோய் புரையோடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

“”சமாதான வாழ்வுக்கு எப்போதும் ஓர் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்; அந்த ஆபத்தின் பெயர்தான் சாதி!”என்று எச்சரித்தார் பெரியார்.

அந்தச் சாதி அடுக்குகள் இருக்கும்வரை அடித்தட்டில் உள்ளவர்கள் அழுத்தப்பட்டு, நசுக்கப்படுவது தொடரும்.

சாதிய நோயால் ஏற்பட்ட வீக்க மேடுபள்ளத்தை, மேனியைத் தடவி மந்திரிப்பதால் சமப்படுத்தவோ, சரிசெய்யவோ முடியாது. அதற்குத் தேவை அறுவைச்சிகிச்சை.

கேரளத்து தலித் போராளி “அய்யங்காளி’ ஒருமுறை சொன்னார்: “”எல்லோர் ரத்தமும் சிவப்பு என்பதை, ரத்தம் சிந்தாமல் எப்படி நிரூபிக்க முடியும்?”

சிந்தும் ரத்தம் நோய் வராமல் தடுக்க அல்லது நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கான ரத்தமாக இருக்கட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: