Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Kanshiram & BSP : Goals & Achievements – ‘Viduthalai Siruthaigal’ Ravikkumar

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

ஒரு ஜனநாயகப் போராளி

ரவிக்குமார்

இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கான்சிராம் அமரர் ஆகிவிட்டார். அம்பேத்கருக்குப் பிறகு இந்திய அளவில் தலித் மக்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர் அவர். 1934 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் பஞ்சாபில் “ரவிதாஸி சீக்கிய’ சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கான்சிராம். நான்கு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் கொண்ட அவரது குடும்பத்தில் அவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை படித்தார். நில அளவைத் துறையில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் புனேவில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு மாற்றலாகிப் போனார்.

அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த கான்சிராம், 1965ஆம் ஆண்டில் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு விடுமுறை தரும் வழக்கத்தை அரசு கைவிட்டபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். சாதியவாதிகளின் வெறுப்பு அவரை அதிர வைத்தது. அம்பேத்கர் எழுதிய “”சாதி ஒழிப்பு” என்ற நூலை ஒரே இரவில் மூன்று முறை படித்தபோது சாதியவாதிகளின் வெறுப்புணர்வுக்கான காரணம் விளங்கியது. தாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் குறித்த தெளிவும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பயணம் நாற்பது ஆண்டுகள் நிற்காமல் தொடர்ந்தது.

கான்சிராமுடன் பணிபுரிந்த டி .கே. கபார்டே என்பவர்தான் அவருக்கு அம்பேத்கரின் சிந்தனைகளை அறிமுகம் செய்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதெனத் தீர்மானித்த கான்சிராம் தனது நண்பர் கபார்டேவுடன் சேர்ந்து அதற்கான ஆதரவாளர்களைத் திரட்ட ஆரம்பித்தார்.

சமூகப் பணியில் தோய்ந்த மனம் அரசாங்க வேலையில் லயிக்க மறுத்தது. திருமண வாழ்வில் அவருக்கு விருப்பமே இல்லாமல் போயிற்று. 1971-ல் அவர் அரசுப் பணியைத் துறந்தார். அதே ஆண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கென நலச்சங்கம் ஒன்றை உருவாக்கினார். 1973ல் மேலும் சில நண்பர்களோடு சேர்ந்து “அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பை (BAMCEF) உருவாக்கினார்.

மகாராஷ்டிரத்தின் சிறு நகரங்களையும் கான்சிராம் விட்டு வைக்கவில்லை. அவரது செல்வாக்கு மகாராஷ்டிரத்தைக் கடந்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் என விரிந்தது. 1980ல் அவர் நடத்திய “அம்பேத்கர் மேளா’ என்ற ஊர்திப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் பலரையும் அவரை நோக்கி ஈர்த்தது. அதன் விளைவாக “தலித் சோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ என்ற அமைப்பை அவர் துவக்கினார். DS4 என சுருக்கமாக அறியப்பட்ட அந்த இயக்கமே 1984ல் அவர் பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்குவதற்கு இட்டுச் சென்றது.

கான்சிராம் ஒரு கவர்ச்சியான பேச்சாளரல்ல, ஆழ்ந்த சிந்தனையாளரெனவும் அவர் அறியப்பட்டதில்லை. மாறாக, அவர் நல்ல அரசியல் ராஜதந்திரி. எளிய மக்களை அமைப்பாகத் திரட்டத் தெரிந்தவர். இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் தலித் மக்களை விடுதலை பெறச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரமே அவர்கள் முன்னேறுவதற்கு ஒரே வழி என அவர் கருதினார்.

காங்கிரஸின் வாக்குவங்கியாக இருந்த தலித் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்சிராமை நோக்கி நகர்ந்தனர். அவர் கனவு கண்டதுபோல 1995ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அவரது கட்சி ஆட்சி அமைத்தது, மாயாவதி முதலமைச்சர் ஆனார்.

அம்பேத்கருக்குப் பிறகான இந்திய நாடாளுமன்ற அரசியலில் தலித் மக்களை “பேரசக்தி’ உள்ளவர்களாக மாற்றிய பெருமை கான்சிராமையே சாரும். அரசியல் அதிகாரம் சாதியை ஒழித்து விடாது என்பது உண்மைதான். ஆனால் அது வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் என்பதை எவரும் மறுக்க முடியாது. தலித்துகளை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்த வரலாற்றை மாற்றி தலித்துகள் மற்ற கட்சிகளை உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதை சமாஜ்வாதி, பாரதீய ஜனதா கட்சிகளோடான அவரது கூட்டணி எடுத்துக்காட்டியது.

கான்சிராம் எவருக்கும் பணிந்து போனதில்லை. தன்னைச் சிறுமைப்படுத்த முயன்ற எவரையும் தண்டிக்காமல் விட்டதில்லை. “ஸ்திரத்தன்மைதான் வளர்ச்சிக்கு ஆதாரம்’ என்ற கருத்துக்கு மாறாக, “ஸ்திரமற்ற அரசியல் சூழல்தான் தலித்துகளின் வளர்ச்சிக்கு நல்லது’ என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார். வலிமையான அரசு பலவீனமான சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்பதை அவர்தான் முதலில் கூறினார்.

கான்சிராம் இந்த நாட்டை ஜனநாயகப்படுத்த முயற்சித்த சமூகப் போராளி ஆவார். பெரும்பான்மையின் ஆட்சி என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் மேலை நாடுகளில் இருப்பது மாறும் தன்மை கொண்ட அரசியல் பெரும்பான்மை (political Majority). இந்தியாவில் இருப்பதோ பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வகுப்புவாதப் பெரும்பான்மை (Communal Majority்) என அம்பேத்கர் கூறினார். இந்தியாவில் அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை உருவாக்கவே கான்சிராம் பாடுபட்டார்.

வகுப்புவாதத்தின் கை ஓங்கியிருந்த காலத்தில் சாதி ஒழிப்பின் அடிப்படையில் புதிய கேள்விகளை, புதிய அரசியலை முன்வைத்து அதைப் பலவீனப்படுத்தியவர் கான்சிராம். மதவாத எதிர்ப்பு என்பது சாதிப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு சாத்தியமல்ல என்பதை அவர் எடுத்துக் காட்டினார். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதைவிடவும் அவர்கள் “”பணிய மறுக்க வேண்டும்” என்பதே கான்சிராம் தந்துவிட்டுப் போயிருக்கும் முதன்மையான செய்தியாகும். அந்தச் செய்திதான் அவரை தலித் மக்களின் அரசியல் குறியீடாகவும் ஆக்கியிருக்கிறது.

(கட்டுரையாளர்: விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர்).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: