Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Neelakadal – Review by Re Karthigesu in Marathadi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006

நீலக்கடல்
ரெ கார்த்திகேசு மரத்தடி.காம்

2005இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை. தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்
பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில்
தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார். முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையான
பெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

ஒரு பதில் -க்கு “Neelakadal – Review by Re Karthigesu in Marathadi”

  1. zsenthil said

    ஐயா, நாங்கள் ஆழி என்ற பெயரி்ல் தொடங்கப்பட்டிருக்கும் புதிய பதிப்பகத்தின் சார்பானவன். திரு ரெ.கார்த்திகேசு அவர்களின் தொலைபேசி எண் எங்களுக்குத் தேவைப்படுகிறது. உங்களிடம் இருந்தால் zsenthil@gmail.com க்கு மடலிடுங்கள். மிக்க நன்றி.

    செ.ச.செந்தில்நாதன்
    சென்னை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: