Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Thyagi B Srinivasa Rao – R Nallakannu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

உழவர்களை ஒன்றுதிரட்டியவர்

ஆர். நல்லகண்ணு

உருகும் வேளையிலும் – நல்ல

ஒளி தரும் மெழுகு வர்த்தி

ஒளிதரும் வேளையிலும் – தியாக

உணர்வினைத் தூண்டி விடும்

உழவுத் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராடிய தியாகி பி. சீனிவாசராவ் (பிஎஸ்ஆர்) வாழ்க்கையை இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது. கல்லூரிப் படிப்பின்போதே அன்னிய ஆட்சியை எதிர்த்து விடுதலை வேட்கையில் ஈர்ப்பு ஏற்பட்டது. பர்மா, ரங்கூன் நகருக்குச் சென்றவர், 23வது வயதில் சென்னை வந்தார்.

1930களில் அன்னியத் துணிப் புறக்கணிப்பு (பகிஷ்காரம்) பேரியக்கமாகப் பரவியது; சென்னை நகரத்தில் பூக்கடை பஜாரில் லங்காஷயர் மல்துணி விற்கப்பட்ட கடையில் நாள்தோறும் மறியல் செய்வார் பி.எஸ்.ஆர்.

ஒருநாள் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் இறந்து விட்டாரென்று கால்வாயில் போட்டுச் சென்று விட்டனர்; இறந்துவிட்டதாக நாளேடுகளிலும் செய்தி வந்துவிட்டது; அவர் உயிர் பிழைத்து மீண்டும் களத்தில் இறங்கியதே உயிரோவியமான நிகழ்வாகும்.

ஓயாத சிறைவாசம்; சென்னை மத்திய சிறையிலிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கான் ஆகியோரும் கைதிகளாக இருந்தார்கள். அமீர் ஹைதர்கான் கொடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படித்து, விளக்கம் கேட்டுத் தெளிந்தார்; சென்னை சிறையிலிருந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு – விடுதலைப் போராளியாக மட்டுமல்லாமல், புரட்சியாளராகவும் வெளியே வந்தார்.

1940-ல் 2வது உலகப் போர் நடந்த போதும் யுத்த எதிர்ப்பில் பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்; 1946ல் பம்பாய் துறைமுகத்தில் கடற்படையினர் நடத்திய போராட்டமும் அதை ஆதரித்து நடந்த நாடு தழுவிய எழுச்சியும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு சாவு மணியடித்தது; இப் போராட்டத்திலும் பி.எஸ்.ஆர். மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பிடிவாரண்ட் போடப்பட்டது; பி.எஸ்.ஆர். தலைமறைவானார். தலைமறைவு அனுபவம் நூலாக வெளிவந்தது; இது கடித இலக்கியமாகக் கருதப்பட்டது.

சுதந்திர இந்தியாவிலும் பி.எஸ்.ஆருக்கு 1961 வரை போராட்டமே வாழ்க்கையாக இருந்தது. 1943ல் தமிழ்நாடெங்கும் கிராமப்புற உழவர் பெருமக்களை ஒன்று திரட்டும் பொறுப்பை ஏற்றார்.

பரம்பரை ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் சிதறிக் கிடந்த கிராமப்புற மக்களை ஒன்றுதிரட்டுவதில் சீனிவாசராவ் பெரும் பாடுபட்டார்; மக்களோடு இரண்டறக் கலந்து, மக்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்து, ஏழை விவசாய மக்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் சங்கமாகத் திரட்டுவதில் முன்னணித் தலைவராக விளங்கினார்.

1947ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாட்களான விவசாயத் தொழிலாளர்களின் விடுதலைக்கான கிளர்ச்சியும் சாகுபடி விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்புக்கு நடத்த இயக்கங்களும் – பெரும் கலகமாகச் சித்திரிக்கப்பட்டன; இதை மறுத்து சீனிவாசராவ் “தஞ்சையில் நடப்பதென்ன?’ என்ற நூலை எழுதினார்.

சாதியால் சிதறுண்டு கிடந்த ஏழை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் செங்கொடி இயக்கத்தின் கீழ் அணி திரட்டப்பட்டார்கள்; உரிமைக்காகப் போராடினார்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, பாதுகாப்புக்கான சட்டங்கள் இல்லாத காலத்தில், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட சக்தியினால் தஞ்சை மாவட்ட மிராசுதாரர்களைப் பணிய வைக்க முடிந்தது; சவுக்கடி – சாணிப்பால் ஊற்றி அடிக்க மாட்டோம் என்று 1944ல் மிராசுதாரர்களைக் கையெழுத்திடச் செய்ய முடிந்தது.

  • சாகுபடியாளர்கள் நில வெளியேற்றத் தடைச் சட்டம்,
  • 60:40 நியாயவாரச் சட்டம்,
  • குடியிருப்பு மனைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வரச் செய்ததோடு, அமலாக்குவதற்கும் தொடர்ந்து போராடுவது செங்கொடி இயக்கங்களாகும்.

1961ல் நில உச்சவரம்பு மசோதாவை அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது; ஒருவரோ – குடும்பமோ – 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கொடுத்தது. மிச்ச நிலமே கிடைக்காத அளவு மக்களை ஏமாற்றும் அந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரியக்கத்தை நடத்தியது; பி.எஸ்.ஆர். தலைமையில் கோவையிலிருந்தும், மணலி கந்தசாமி தலைமையில் மதுரையிலிருந்தும் 30 நாள் நடைப்பயணமாகச் சென்னை நகர் வந்தடைந்தனர்.

செப்டம்பரில் எல்லா மாவட்டங்களிலும், மசோதாவைத் திருத்தக் கோரி அறப்போர் நடந்தது. 16,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; சிறையிலேயே 4 தோழர்கள் இறந்தார்கள். சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர மாநில அரசு இசைந்தது.

முப்பது நாள் போராட்டம் முடிவுக்கு வருவதாக 1961 செப்டம்பர் 29ல் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டார் பி.எஸ்.ஆர்.

ஏற்கெனவே, ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த அலுப்பும், தொடர்ந்த சிறைவாசமும், அடக்குமுறையில் பெற்ற விழுப்புண்களும், ஆஸ்த்மா நோயும் அந்த மாவீரனின் உயிரைப் பறித்து விட்டது, செப்டம்பர் 30ல்.

பி.எஸ்.ஆர். பிறந்தது 1907 ஏப்ரல் 10.

கர்நாடக மாநிலம் படகாரா;

தந்தை பெயர் இராமச்சந்திர ராவ்.

54 ஆண்டுகளே வாழ்ந்த பிஎஸ்ஆரின் நூற்றாண்டு இவ்வாண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: