The ills of Indian Agriculture – RS Narayanan
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
புல்லும் ஓர் ஆயுதம்
ஆர்.எஸ். நாராயணன்
இருபத்தி ஐந்து மாடுகளை வைத்துக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் எங்களுக்குத் தீவனத் தட்டுப்பாடு வந்தது. இதைச் சரி செய்யப் புல் வளர்க்க யோசித்தோம். மானாவாரியாக எதைப் பயிர் செய்யலாம், பாசனமாக எதைப் பயிர் செய்யலாம் என்று திட்டமிட்டு புல்விதை விலைகளை விசாரித்தோம். மயக்கம் வந்துவிட்டது. குதிரை மசால் விதையின் விலை கிலோ ரூ. 200. கொழுக்கட்டைப்புல் விதை ரூ. 90. நெல் விதை 6 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இந்தியாவின் விவசாயப் பிரச்சினைகளை நெல்லால் தீர்க்க முடியாதபோது, புல்லால் தீர்த்து விடலாம் என்று தோன்றுகிறது. மாடுகளையும் பட்டினி போட வேண்டாம். பச்சைப்புல்லைக் கொடுத்தால் பாலும் நிறையக் கிடைக்குமே. பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தபோது டாக்டர் ராமசாமி, ஐ.ஐ.ங. பேராசிரியர் (ஓய்வு), கூறிய கருத்து மனத்தில் பளிச்சிட்டது. அவர் இவ்வாறு கூறுகிறார்: காளை மாடுகளை உழவுக்கும், பாரம் சுமக்கும் வாகனமாகவும் பயன்படுத்தினால் 60 லட்சம் டன் பெட்ரோலியத்தை மிச்சப்படுத்தலாம்.
இதன் மதிப்பு ரூ. 20,000 கோடி. நவீன முறையில் வண்டிகளைத் திருத்திச் சில மாற்றங்களைச் செய்தல், கால்நடைகளுக்கு நல்ல தீவனம் வழங்கிப் பராமரித்தல் ஆகிய தொழில்கள் மூலம் கிராமங்களில் 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். நாட்டுக்கும் நன்மை. ராமசாமியின் கருத்துப்படி இந்தியக் கால்நடைத்துறை – கால்நடைகள் மூலம் பெறும் வருமான மதிப்பு – மொத்த எசட யில் ஏழு சதவீதம். ஆனால் கால்நடை மேம்பாட்டுக்கும் புல் வளர்ப்புக்கும் செலவுத்திட்டம் ( allocation) 0.3 சதவீதமே என்று நொந்து கொள்கிறார்.
மீளுமா இந்திய வேளாண்மை? என்று எஸ். ஜானகிராமன் ஒரு கொக்கி போட்டுள்ளார் (22-8-06 துணைக்கட்டுரை). அரசு வழங்கும் மானியங்களைக் கால் பங்காகக் குறைத்து விட்டு வேளாண்மைப் பொது முதலீட்டை நான்கு பங்காக உயர்த்தக் கோரியுள்ளார். மானியங்களைக் குறைக்க வேண்டாம். இந்த மானியங்கள் நிஜமாகவே விவசாய உற்பத்திக்கு வழிவகுத்துள்ளதா என்று யோசித்து இதனால் யார் பயனடைகிறார்கள் என்று பார்ப்பது நல்லது.
- உர மானியம் என்பது மண் வளத்தை அழிக்கும் ரசாயன உரக் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
- கருவிகள் – இயந்திர மானியம், டிராக்டர் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
- இதே மானியத்தை இயற்கை இடுபொருள்களுக்கும், கால்நடை – தீவனப் பராமரிப்புக்கும் மாற்றியமைத்துவிட்டாலே போதும். இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிடும்.
உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா செலவிடும் மானியம் குறைவுதான். உலகளாவிய அளவில் ஒரே சட்டம் அமல் செய்து விவசாயிகளுக்கு இவ்வாறு மறைமுகமாக வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டு விட்டால், முதலில் அழிவது அமெரிக்காதான். அமெரிக்காவில் சிறு விவசாயி என்பவருக்கு 1,000 ஹெக்டேர் நிலம் இருக்கும். எல்லா அமெரிக்க விவசாயிகளும் ஹைடெக் . அங்கு தேச வருமானத்தின் பெரும்பகுதி இந்த ஹைடெக் விவசாயத்திற்குச் செலவாகிறது. இந்த ஹைடெக் விவசாயம் முழுக்க முழுக்க மானியத்தை நம்பியுள்ளது. ஓர் இந்திய விவசாயி மானியத்தை நம்பாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு இங்கு உள்ளதுபோல் வேறெங்கிலும் இல்லை. அடித்தளமே இல்லாத அமெரிக்க விவசாயத்தை விடவும் ஒரு பலமான வாழ்வியல் அடித்தளத்துடன் இயங்கும் இந்திய விவசாயத்தை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள, விவசாயம் பற்றி மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் எழுதியுள்ளதைப் படித்தாலே போதுமானது. தீர்க்க தரிசனம் புலப்படும்.
இந்தியாவில் விவசாயப் பொருளாதார மேம்பாட்டுக்குத் திட்டமிடும் வல்லுநர்கள், அடித்தளம் இல்லாத அமெரிக்காவை மாடலாக வைத்து உருவாக்கிய திட்டத்தில் ரசாயன உரங்களுக்கும் – டிராக்டர் போன்ற இயந்திரங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் கிராமங்களே இல்லை. இரண்டு ஏக்கர் திட்டமும் இல்லை. இருக்கும் இரண்டு ஏக்கரில் 8 துண்டு. “”துண்டு” என்று நான் அதைச் சொல்லவில்லை. 25 செண்டு என்ற sub division Fragmentation என்று கூறப்படும் துண்டான நிலத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதையே “”இந்திய விவசாயத்தைப் பற்றியுள்ள நோய்” என்று மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரப்பாவும் காந்தியும் இதை நோயாகப் பார்க்காமல், “”காளை உழவுக்கு ஏற்ற கால்காணியே விவசாயிகளை வாழ வைக்கும்” என்று புரிய வைத்தும் நாம் புரிந்து கொள்ளாமல், சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏழை விவசாயிகளை அடிமைகளாக்கி, நகரத்துச் சேரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.
“”முத்ரா ராக்ஷசம்” என்ற சம்ஸ்கிருத நாடகத்தை மையமாக வைத்து ஆர்.எஸ். மனோகரின் நாடகமான சாணக்கிய சபதத்தில் ஒரு காட்சி வரும். சாணக்கியர், “”அர்த்த சாஸ்திரம்” எழுதியவர். அதாவது “”பொருளாதார விஞ்ஞானம்”. அப்படிப்பட்ட அறிஞர், ஒரு புல் தடுக்கி விழுந்துதான் சபதம் செய்தாராம். இந்தியாவுக்கு முதல் பொருளாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த மாபெரும் ராஜதந்திரியை ஒரு புல் வீழ்த்தியுள்ளது. புல்லை நாம் அலட்சியப்படுத்த முடியாது. வல்லவர்களான இந்திய விவசாயிகளுக்கு இன்று நெல்லைவிடப் புல்லே நல்ல ஆயுதமாகப்படுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்