A Marx on Gandhi, Dalits, Varnasramam
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
சாதியத்தை எதிர்த்தாரா மகாத்மா?
அ. மார்க்ஸ்
இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டில் அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.
சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.
காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் பகிர்ந்து கொண்டார்.
இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை’ (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,
“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்”
என்பது. இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.
1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.
தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “”தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.
மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “”இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).
சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண ல அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “”தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.
“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே’ பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “”அழுந்தியவர்கள்”(depressed) அல்ல; மாறாக “”அழுத்தப்பட்டவர்கள்” (Suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).
“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “”இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.
காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்‘ முதலிய நூற்கள் வெளியிடப்பட்டன (1932).
காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “”நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).
மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ravi srinivas said
Did Periyar ever recognise these.Will Marx criticise Periyar for this.Anil Nauriya’s article appeared in EPW. http://www.epw.org.in
bsubra said
Thank you Ravi
Anil Nauriya said
Could you please let me have your email id I wish to correspond with you