Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

India – Pakistan Agreement on Cross Border Terrorism & Kashmir

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

சந்தேக ஒப்பந்தம்!

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புக்கான அமைப்பு ஒன்றை நிறுவுவது சாத்தியமா …? சொல்லளவில் இது சாத்தியம் என்று முஷார·ப்பும் மன்மோகன் சிங்கும் உரையாடி ஒப்பந்தமும் போட்டுவிட்டார்கள். ஆனால், செயலளவில்…?

 

கடந்த ஜூலை மாதம் மும்பையில், ஓடும் ரயில்களில் குண்டு வெடித்து அநியாயமாய் உயிர்களைக் கொள்ளை கொண்டபோது, பாகிஸ்தானின் ஆதரவும் அங்கீகாரமும் பெற்ற பயங்கரவாத அமைப்புகளே அதற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்னும்போது, அந்நாட்டு அரசாங்கமே இந்த பயங்கரவாத அமைப்புகளுக்குப் பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்கிறது என்னும்போது, அதே பயங்கரவாதத்தை எதிர்க்க அந்நாடு இந்தியாவுடன் கைகோத்து அமைப்பு நிறுவுகிறது என்பது நம்பக் கூடிய விஷயமே அல்ல.

அப்படியே சொன்ன சொல்லைக் காப்பாற்ற ஓர் அமைப்பு நிறுவப்பட்டாலும் அது எவ்வளவு தூரம் வெற்றிகரமாக இயங்கிவிட முடியும்? ‘‘இந்த அமைப்பு சரியாகச் செயல்பட்டுப் பயனளிக்காவிட்டால் பயங்கரவாதத்தை வேறு விதங்களில்தான் முறியடிக்க முயற்சி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் ஒப்பந்த மை உலர்வதற்கு முன்பே சொல்லிவிட்டார்.

பரஸ்பரம் சந்தேகத்துடனும் எதிர்ப்புணர்வுடனும் நோக்கும் இரு நாடுகள் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா..? அது சாத்தியமேயில்லை. கிடைத்த தகவல்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எந்த முடிவுக்கும் எளிதில் வந்து, எந்த நடவடிக்கையையும் உறுதியாக எடுக்க முடியாமல் போகும்.

மன்மோகன் சிங் – முஷார·ப், அணிசாரா நாடுகள் உச்சி மாநாட்டில் சந்தித்ததால் விளைந்துள்ள ஒரே நற்செயல், முறிந்துபோன இந்தோ-பாக் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்திருப்பதுதான். அயலுறவுத்துறை அமைச்சர் இல்லாத நிலையில், பிரதமர் தமது நட்பான அணுகுமுறையினால் இதைச் சாதித்துள்ளார் என்பதை வரவேற்போம்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக, அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பது மற்றும் ஒரு வரவேற்க வேண்டிய முடிவு. நீட்டப்பட்டுள்ள நேசக்கரத்தைப் பற்றியிருக்கும் பாரதப் பிரதமர், பாகிஸ்தானுடன் உறவுகள் மேம்படுவதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா – பாகிஸ்தானிடையே பிரச்னையாக நீடித்துவரும் – எல்லைக்கோடு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் கருத்தறித்து அதற்கேற்ப அங்கு அரசியல் தீர்வு காண முயற்சி செய்வது போன்ற அம்சங்களைப் பேசித் தீர்வு காண நல்லதொரு பிடிமானம் இப்போது இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

‘பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பேசுவோம்’ என்கிற பா.ஜ.க. அரசின் கோட்பாடிலிருந்து மாறி, இன்றைய மத்திய அரசு நிபந்தனைக்குட்படாத பேச்சு வார்த்தைகளைத் துவக்குவது நல்லது. காஷ்மீர்ப் பிரச்னையைக் கௌரவப் பிரச்னையாகப் பாராமல், அங்குள்ள மக்களின் பிரச்னையாகப் பார்ப்பது அவசியமாகிறது. அவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் ஆயுதங்களுக்கும் பாதுகாப்புக்கும் இரு நாடுகளுக்கும் ஆகிற செலவைக் குறைத்து அமைதியை நிலைநாட்டவும் தேவையான அளவு விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

சென்ற வாரம் கையப்பமான பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தின் வார்த்தை ஜாலங்களை நம்பி, முதலில் அமைதி நிலவட்டும்; அதன் பிறகு அரசியல் தீர்வு பற்றி ஆராயலாம் என்று காத்திருந்தால், அபாயம் அதிகரிக்கவே செய்யும். மாறாக, பாகிஸ்தானுடன் அரசியல் தீர்வு ஏற்பட்டால், அது தொடர்பான பயங்கரவாதத்துக்கு இடமில்லாமலே போகும். இதுவே இந்தியாவை அச்சுறுத்தும் இதர சில பயங்கரவாத அமைப்புகளை வெற்றி கொள்ளவும் உதவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: