DMK Alliance Partners Demand More Allocations for Local Body Polls
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006
உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு: தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு
சென்னை, செப். 27-
உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக தி.மு.க. வில் ஆற்காடு வீராசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் காங்கிரஸ், பா.ம.க., கம்ïனிஸ்ட்டு கட்சிகளை சேர்ந்த குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
50 சதவீத இடங்களுக்கு குறையாமல் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. மீதமூள்ள 50 சதவீதத்தை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பது என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் 30 சதவீதம் இடங்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அவர்களுக்கு 20 முதல் 25 சதவீத இடங்களை ஒதுக்க தி.மு.க. கருதுகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இதே போல பா.ம.க.வும் 20 சதவீதத்திற்கு குறையாமல் இடங்களை கேட்கிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
3-வது நாளாக பேச்சு வார்த்தை இன்றும் நீடித்தது. இன்று காலையில் இந்திய கம்ïனிஸ்டு துணை பொதுச் செயலாளர் மகேந்திரன் தி.மு.க. தேர்தல் குழுவினரை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மகேந்திரன் நிருபர்களிடம் கூறும் போது பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பேச்சுவார்த்தை இன்றும் முடியவில்லை. தொடர்கிறது. நாளைக்குள் முடிவு எட்டப்படும் என்றார்.
மதியம் 12 மணியளவில் மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் தி.மு.க. தேர்தல் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து ஏ.கே.மூர்த்தி தலைமையிலான பா.ம.க. குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் மதியம் 12 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட அளவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதில் தனக்கு திருப்தி இல்லை என்று தேர்தல் குழு உறுப்பினர் சுதர்சனம் எம்.எல்.ஏ. பகிரங்கமாக தெரிவித்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் திடீர் பிரச்சினை உருவானது. காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இட பங்கீடு தொடர்பாக சுதர்சனம் பேசி முடிவு செய்யட்டும், நான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறி இருந்தார். மேலும் இந்த பிரச்சினை பற்றி புகார் செய்வதாக கூறி அவர் இன்று காலை டெல்லி சென்றார்.
இதே போல சுதர்சனமும் இன்று மாலை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிரச்சினையால் இடபங்கீடு இறுதி முடிவை எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்