AIADMK Alliance Partners Allocation Details for Local Body Polls
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006
உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு: 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டி
சென்னை, செப். 24-
உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் நேற்றிரவு முடிவு செய்யப்பட்டது. ம.தி.மு.க.வுக்கு 17.5 சதவீதம், விடுதலைச்சிறுத்தைகளுக்கு 4 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாநகராட்சிகளும், 102 நகர சபைகளும் இருக்கின்றன. இதில் யார்- யாருக்கு எந்த இடம் என்று பிரித்துக்கொள்வதற்குப்பதில், மொத்த இடங்களிலும் சதவீத அடிப்படையில் போட்டியிடலாம் என்ற முடிவை அ.தி.மு.க. கூட்டணி எடுத்துள்ளது.
மாநகராட்சி மற்றும் நகர சபைகளை தனித்தனியாக கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தால், அது கட்சி அமைப்பு ரீதியிலும், பிரசாரத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநகராட்சி என்று ஒதுக்கினால், அங்கு அந்த கட்சிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் கவுன்சிலர் இடங்களை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
அத்தகைய சூழ்நிலையில் தோழமை கட்சிகளிடையே அதிருப்தி ஏற்படகூடும். மேலும் பிரசார வேலைகளும் முழுமையாக நடக்காது. எனவேதான் மாநகராட்சி, நகரசபைகளில் உறுப்பினர் இடங்களை சதவீத அடிப்படையில் பிரித்துக் கொண்டு போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
உள்ளாட்சித்தேர்தல் முடிந்தபிறகு ஒவ்வொரு மாநகராட்சியிலும், ஒவ்வொரு நகரசபையிலும், கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளது என்பதை பொருத்து மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்வு நடைபெறும். சதவீத அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சி, நகரசபைகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுக்கு சதவீத அடிப்படைகளுக்கு ஏற்பவே வெற்றிகள் கிடைக்கும்.
அந்த சமயத்தில் ம.தி.மு.க.வுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் தலைவர் பதவியை பெறும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். என்றாலும் சதவீத அடிப்படையில், தலைவர் பதவி இடங்களை தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரு கட்சிகளும் மாநகராட்சி மேயர் பதவியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. அதற்கு பதில் நகரசபைகளில் கணிசமான தலைவர், துணைத் தலைவர் இடங்களை பெற விருப்பம் தெரிவித்துள்ளன.
ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தையும் தலைவர் பதவிக்குரிய இடங்களுக்கு கூட்டணித் தலைவரான அ.தி.மு.க.வை அனுசரித்தே செல்லவேண்டும். இது கூட்டணி உடையாமல் மேலும் பலமாக வைத்து இருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டுக்கும் அ.தி.மு.க. 21.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில்
- இந்திய ïனியன் முஸ்லிம் லீக்,
- இந்திய தேசிய லீக்,
- மூவேந்தர் முன்னேற்றக்கழகம்,
- அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம்,
- உழவர் உழைப்பாளர் கட்சி,
- மதச்சார்பற்ற ஜனதா தளம்,
- சமூகநீதிக்கட்சி,
- தமிழ் மாநில முஸ்லிம் லீக்,
- இந்திய குடியரசுக்கட்சி,
- கிறிஸ்தவ முன்னேற்றக்கழகம்,
- சிறுபான்மை ஐக்கியபேரவை ஆகிய மேலும் 11 தோழமைக் கட்சிகள் உள்ளன.
இந்த 11 தோழமைக்கட்சி களுக்கும் சுமார் 4 சதவீத இடங்களை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக எஞ்சி உள்ள 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க, ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலிடம் உடன்பாடு செய் துள்ள சதவீத அடிப்படையில் மாவட்டங்களிலும் இவர்கள் இடப்பகிர்வை இன்றே செய்கின்றனர்.
யார், யார் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்ற விபரம் ஏற்கனவே பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. எனவே அடுத்த முக்கிய பணியான வேட்பாளர் தேர்வு பணியை அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் இன்று தொடங்குகின்றன. 20 ஆயிரத்து 886 பதவிகளுக்கு வேட்பாளர்களை இவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்துக்கது.
ஓரிரு நாட்களில் வேட்பாளர் தேர்வு முடிந்துவிடும். இதையடுத்து வேட்பாளர்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் பெருமளவில் மனுத்தாக்கல் செய்வார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்