Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Kerala’s Unreasonable Demands – Mullai Periyar Dam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

தடம் மாறும் வாதம்

“வெள்ளெரிக்காய் காய்ச்சது தோட்டத்துல, மூணு வெள்ளிக்கு விக்கச்சொன்னான் வெள்ளத்தொரை’ -என்று ஒரு நாட்டுப்பாடல். அதாவது, என் தோட்டத்தில் நான் விளைவித்த பொருளுக்கு வெள்ளைக்காரன் விலை நிர்ணயம் செய்கிறான் என்பதைக் கிண்டல் செய்யும் பாடல்.

இப்போது பெரியார் அணை விவகாரத்தில் இதே விஷயம் கொஞ்சம் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக நலனுக்காக வெள்ளைக்காரன் கட்டி வைத்த அணையில், 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள இடத்தில், தண்ணீரை எவ்வளவு உயரத்துக்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது கேரள அரசு.

பாதுகாப்பு என்ற அளவில் கேரள மாநில அரசின் வாதங்கள் நியாயமானவைதான். அதனால்தான் தமிழக அரசு பிரச்சினையைப் புரிந்து உடனடியாகச் செயல்பட்டது. நீர் தேக்கும் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்தது. நிபுணர்கள் குழுவும், நீதிமன்றமும் விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, அணையை பலப்படுத்திய பின்னரும், 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னரும் கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது வேதனைக்குரியது.

1850-களில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தையும் வறட்சியையும் பார்த்தபின்னர் அப்பகுதியில் உள்ள 80000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் அளிக்கத்தான் பெரியாறு அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த அணை கட்டுவதில் தடைகள் வந்தபோது இதை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் தன் சொத்துகளை விற்று கட்டினார். அவர் மீது தமிழர்கள் கொண்ட மரியாதை அளப்பரியது. அப்பகுதியில் பென்னி குயிக் பெயர் கொண்டவர்கள் இன்றும் உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கேரள அரசு, இப்போது புதிய வாதத்தை வைத்துள்ளது: “திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் 1947-லேயே காலாவதியாகிவிட்டது.’ இந்த வாதம் இந்திய ஒருமைப்பாட்டையே கொஞ்சம் அசைத்துப் பார்க்கின்ற வாதம். இதே வாதத்தை காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும் கையில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வீட்டை இன்னொருவர் வாங்கும்போது அதன் மீதான வங்கிக் கடனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லமுடியாது என்கிற சாதாரண நடைமுறையை, மிகச்சாதாரண மக்கள்கூட அறிந்திருக்கும்போது கேரள அரசுக்குத் தெரியாதா? அல்லது வழக்கை மேலும் சிக்கலாக்கவும் தாமதப்படுத்தவும் இந்த வாதத்தை முன்வைக்கிறார்களா?

கேரள மாநிலத்தில் எந்த நாளிலும் தண்ணீர் பிரச்சினை இருந்ததில்லை. அணை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள அரசின் அச்சம் தேவையற்றது. மேலும் தற்போதும்கூட மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன நீர் இல்லாமல் விவசாயம் பாழ்பட்டு இருப்பதை எந்த நிபுணர் குழுவும் ஆய்வு நடத்தாமலேயே சொல்லிவிட முடியும்.

அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தை உயர்த்தினால் மட்டுமே ராமநாதபுரத்தின் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கும். நீரை உயர்த்தப் போதுமான அளவு அணை பலப்படுத்தப்பட்டுவிட்டது. இனியும் கேரள அரசு மறுக்குமானால் தன் வீட்டையும் சொத்துகளையும் விற்று அணை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்-கின் தியாகம் அர்த்தமற்றதாகிவிடும்.

ஒரு பதில் -க்கு “Kerala’s Unreasonable Demands – Mullai Periyar Dam”

  1. koman said

    nalla pathipu 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: