Chikungunya – Tamil Nadu Toll
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006
சிக்குன் குனியா காய்ச்சல்: இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டார் ஜெ.
சென்னை, செப். 21: தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு இதுவரை 232 பேர் இறந்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் முகவரி பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 155 பேருக்கு மேல் இறந்துள்ளனர் என நான் கூறினேன்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, இறந்ததாகக் கூறப்படும் 155 பேர்களின் பெயர்களையும், முகவரிகளையும் வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அரசு தகவல் பெற எவ்வளவோ துறைகள், சாதனங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு என்னிடம் தகவல் கேட்கிறார் அமைச்சர்.
பத்திரிகைகளைத் தினமும் படித்துவிடுவேன் எனக் கூறி வரும் முதல்வர் கருணாநிதி, சிக்குன் குனியா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிக்கிறாரா இல்லையா?
முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தமிழகத்தில் சிக்குன் குனியா இல்லை என்றும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் பதிவு செய்து விட்டார்கள்.
அதை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களே தவிர, காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இல்லை; நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை.
மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கேட்டபடி, சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளேன் என்றார்.
பட்டியல் விவரம்: தமிழகம் முழுவதும் சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் என்று ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் விவரம்:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, பழைய வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 24 பேர் சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்துள்ளனர்.
தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 29 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர்.
சேலம் மாநகர்ப் பகுதியில் 21 பேரும், எடப்பாடி தொகுதியில் 4 பேரும் இறந்துள்ளனர்.
மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேரும் இறந்துள்ளனர்.
கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை, நாகை மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் தலா 4 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும், வேலூரில் 9 பேரும் இறந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 11 பேரும், கோவை மாவட்டத்தில் 19 பேரும் இறந்துள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்