Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

When will the Complete works of EVR Periyar reach the Print?

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

பெரியார் பேச்சும் எழுத்தும் யார் உடைமை?

எம். பாண்டியராஜன்

திருச்சி, செப். 13: அறிஞர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள் என இதுவரை 37 பேருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது தமிழக அரசு -இன்னமும் மீதியிருக்கிறது, பெரியார் ஈ.வே.ரா. நூல்கள்!

திராவிட -பகுத்தறிவு இயக்கங்களின் ஊற்றுக்கண்ணான பெரியாரை முழுவதுமாகப் படிக்க நல்ல நூல் தொகுதி எதுவும் இல்லை, வே. ஆனைமுத்துவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சிந்தனையாளர் கழகம் வெளியிட்ட “பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்‘ தவிர.

இந்தத் தொகுப்பும்கூட “ஏறத்தாழ முழுவதுமாக’த் தொகுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்படுகிறது.

1970-களின் தொடக்கத்தில் மூன்று தொகுதிகளாக சுமார் 2,200-க்கும் கூடுதலான பக்கங்களில் வெளிவந்த இந்தத் தொகுப்பின் பிரதிகள் இப்போது அபூர்வமாகச் சில பெரியார் பற்றாளர்களிடம் மட்டுமே இருக்கின்றன.

1924 தொடக்கம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சில் வரத் தொடங்கிவிட்டன.

 • நவசக்தி,
 • ரிவோல்ட்,
 • புரட்சி,
 • பகுத்தறிவு,
 • குடி அரசு,
 • விடுதலை,
 • திராவிடன்,
 • ஜஸ்டிஸ், இவையன்றிப் பிற்காலத்தில்
 • உண்மை,
 • மாடர்ன் ரேஷனலிஸ்ட்,
 • சண்டமாருதம்,
 • புதுவை முரசு,
 • நகரதூதன்,
 • திராவிட நாடு,
 • தனி அரசு,
 • பொன்னி உள்பட பலவற்றிலும் பெரியாருடைய பேச்சும் எழுத்தும் வெளியாகியுள்ளன.

பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அவருடைய கருத்துகளையொட்டி ஏராளமான சிறு நூல்கள் -அவர் இருந்தபோதும் பிறகும் இப்போதும், 80 ஆண்டுகளாக -வெளிவருகின்றன.

நூல்களாக வெளிவந்தவை மட்டுமின்றி, இன்னமும் நூல் வடிவம் பெற வேண்டிய, தொகுக்கப்பட வேண்டிய அவருடைய பேச்சும் எழுத்தும் எவ்வளவோ?

ஆனால், பெரியாரை முறையாகவும் முழுவதுமாகவும் வாசிக்க? கற்க? ஒருபோதும் இவை போதுமானதல்ல.

இன்றைக்குப் புரட்சிகரமானதாகக் கருதப்படும் கருத்துகளெல்லாம், 1920, 30-களிலேயே பேசப்பட்டிருக்கின்றன என்பதை இன்றைய “தகவல்- தொழில்நுட்ப கால’ இளைஞனும் யுவதியும் அறியவந்தால் மட்டுமே அவற்றின் வீச்சு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

மத்திய அரசின் முன்முயற்சியில் மகாத்மா காந்தியின் நூல்கள், ஆங்கிலத்தில் 100 தொகுதிகளாகக் குறைந்த விலையில் வெளிவந்திருக்கின்றன. குறுந்தகட்டிலும்கூடக் கிடைக்கிறது.

மகாராஷ்டிர அரசின் முயற்சியில் அம்பேத்கரின் உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவற்றைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து, இந்திய அரசின் செய்தி -ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது- அரசு உதவியுடன், மலிவு விலையில்.

தமிழில் இதுவரை 34 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. இன்னும் 4 தொகுதிகள் வரவுள்ளன. அரசு உதவியுடன், மலிவு விலையில்.

ஆனால், பகுத்தறிவைப் பரப்பி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வையே கழித்த பெரியாரின் எழுத்தும் பேச்சும்?

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு மாநிலத்தையே ஆண்டு கொண்டிருக்கின்றன அவர் பெயர் சொல்லும் இயக்கங்கள். மத்திய அரசிலும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

இருப்பவற்றில் சிந்தனையாளர் கழகத்தின் தொகுப்பு குறிப்பிடத் தக்கது. இது முழுவதுமாகப் படிக்கப்பட்டு, படித்துக் காட்டப்பட்டு, பெரியாரின் ஒப்புதல் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெரியாரைப் பரப்பும் திசை வழியில், இன்று உலகெங்கும் பல்கிப் பரவியுள்ள தமிழர்களிடம் கொண்டுசேர்ப்பதில் முதல்கட்டமாக, இந்தத் தொகுதியை உரிய முறையில் நாட்டுடைமையாக்கி, தமிழக அரசே பதிப்பித்து, மலிவுப் பதிப்பாக, மக்கள் பதிப்பாக வெளியிடலாம்.

அடுத்தது, பெரியாரின் எழுத்துகளும் கடிதங்களும் பேச்சுகளும் உரையாடல்களும் விவாதங்களும் காலவரிசைப்படி தொகுக்கப்பட வேண்டும்; தொடர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டும். அடுத்து இந்திய மொழிகளிலெல்லாம் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் -மகாத்மா காந்தியைப் போல, அம்பேத்கரைப் போல.

இதற்காகத் தமிழக அரசு எத்தனை கோடிகளை ஒதுக்கினாலும் தகும்.

ஐந்தாம் முறையாகத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார் -“பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கொள்கை வழியிலே வந்த நாம், அண்ணா வழியில் வந்த நாம் தமிழகத்திலே பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப வேண்டிய அவசியம் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்காக ஒரு தனித்துறையே அமைக்க வேண்டும் என்று சிவபுண்ணியம் கேட்டுக் கொண்டார்… … ஏற்கெனவே, 2000-ல் உருவாக்கப்பட்டிருந்த “சமூக சீர்திருத்தத் துறை‘ மீண்டும் புதுப்பிக்கப்படும்.”

இந்தத் துறையின் கீழ், அறிஞர்கள் குழுவை அமைத்து, கால இலக்கையும் நிர்ணயித்து, இந்தப் பெரும் பணியை முதல்வர் கருணாநிதி தொடக்கி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: