Craigslist.Org – Concept & Execution
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006
ஒரு மாதத்துக்கு கோடி விளம்பரம்!
ஆர்.வெங்கடேஷ்
இணையம் என்றாலே எல்லாம் ஓசியில் சுலபமாகக் கிடைக்க வேண்டும், அங்கே எந்த ஒரு வியாபார நோக்கமும் இருக்கக்கூடாது என்பது இணைய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. வியாபார நோக்கம் தலைதூக்கி விட்டால், இணையம் வளரவே வளராது என்பது இவர்களின் வாதம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் தேவையை ஒட்டி சேவைகள் உருவாக்கப்பட்டு, அது முற்றிலும் இலவசமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆர்வலர்களின் கருத்து.
இது எவ்வளவு தூரம் சாத்தியம், சாத்தியமில்லை என்பது தனிக்கதை. ஆனால், மக்களின் தேவைகளை ஒட்டியே சேவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் நூறு சதவிகிதம் உண்மை. அப்படி உருவான சேவைகளில் ஒன்றுதான் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.நீக்ஷீணீவீரீsறீவீst.ஷீக்ஷீரீ/). வரி விளம்பரங்களை மக்களே இலவச மாக சேர்க்கும் வசதிகொண்ட வலைதளம் இது.
நாளிதழ்களில் வெளியாகும் வரி விளம்பரங்களுக்கு அல்ப ஆயுசு. அடுத்த இதழ் வந்துவிட்டால், சென்ற இதழை எல்லாரும் மறந்து போவார்கள். மேலும் வரி விளம்பரங்கள் பற்றி மக்களுக்கு உள்ளூர சில சந்தேகங்கள் உண்டு. குறிப்பாக, அதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்து சந்தேகம் எழுவதுண்டு. வரி விளம்பரங்களைக் கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதால்தான் இத்தகைய ஓர் அவநம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. சொல்லப்போனால் வரி விளம்பரத்தை நம்புவதைவிட, அதை வெளி யிடும் பத்திரிகையின் மேல்தான் மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இணையம் இந்தப் பிரச்னைகளைச் சுலபமாகக் கடந்துவிட்டது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்டே’ இதற்கு பெரிய உதாரணம். 1995&ல் தொடங்கப்பட்ட இந்த இணையம், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஏரியாவில் உள்ள விளம்பர தாரர்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டது. பின்னர் 1999&ல் இந்த வலைதளம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் இதன் வளர்ச்சி, பிரமிக்கத்தக்க அளவில் விரிந்தது. 2000&ம் ஆண்டில் மேலும் ஒன்பது நகரங்கள் இந்த சேவையில் இணைக்கப்பட்டன. 2003&ல் 14 நகரங்கள் இணைந்துகொண்டன. 2006 ஜூன் மாதத்தின் கணக்குப்படி, இப்போது இந்த லிஸ்ட்டில் உலகெங்கும் உள்ள 310 நகரங்கள் இணைந்துள்ளன. அதில் நமது சென்னையும், பெங்களூரும், டெல்லியும்கூட அடக்கம்.
இதன் வளர்ச்சியை மேலும் புரிந்துகொள்ள இந்த விவரங்களை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இந்த லிஸ்ட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வரி விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன. அதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விளம்பரங்கள் வேலைவாய்ப்புக்கு மட்டுமே பதியப்படுகின்றன. சொல்லப்போனால், வேலைவாய்ப்புக்கு என்றே இருக்கும் வலைதளங்களில் பதியப்படும் விளம்பரங்களை விட இந்த எண்ணிக்கை அதிகம். அதேபோல், இந்த ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் இருக்கும் விவாத அரங்கில் எண்பது தலைப்புகளில் கிட்டத்தட்ட நான்கு கோடி பேர்கள் பங்கேற்று கருத்துகள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த வலைதளத்தின் சிறப்புக்களில் ஒன்று, அதன் எளிமை. பொதுவாக, வலைதளங்கள் என்றாலே அதில் எண்ணற்ற விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல சமயங்களில், இந்த விளம்பரங்கள் அந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கம் டவுன்லோட் ஆவதைத் தாமதப் படுத்திவிடும். அல்லது விளம்பரம் முதலில் டவுன்லோட் ஆகிவிடும். வலைப்பக்கத்தில் உள்ள விவரங்கள் டவுன்லோட் ஆகத் தாமதமாகும்.
ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் மருந்துக்குக்கூட ஒரு விளம்பரம் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக இந்த வலைதளம் நடந்துகொண்டிருந்தும் இதுவரை ஒரு விளம்பர பேனர்கூட அங்கே போடப்பட்டது கிடையாது. ஆச்சரியமாக இல்லை? விளம்பரம் போட்டா லென்ன என்று ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் அதிபர் கிரெய்க் நியூமார்க்கிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: “மக்கள் இதைக் கேட்கவில்லையே!”
ஆம்! மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்! பல ஆச்சரியங்கள் இந்த வலை தளத்தில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாக ஒன்றை இந்த வலைதளத்தில் செய்ய வேண்டுமென்றால், கிரெய்க் நியூமார்க் செய்யும் ஒரே வேலை, அதன் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு அறிவதுதான். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டைப் பயன்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர் தன் வலைதளத்தில் செய்வார். ஒவ்வொரு நகரத் துக்கும் இந்த லிஸ்ட்டை விரிவு படுத்துவதும் மக்களின் தேவையை ஒட்டிதான். தொடர்ந்து இணைய மக்களிடமிருந்து, எங்கள் நகரத்துக்கும் இந்த லிஸ்ட்டை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை வந்தால் மட்டுமே அந்த நகருக்கு இந்த லிஸ்ட் விரிவு படுத்தப்படும்!
இன்னொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. ஒருமுறை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் விளம்பரம் செய்ய முன்வந்தது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் பாப்பு லாரிட்டியைப் பார்த்து, தானாகவே வந்த விளம்பர வாய்ப்பு அது. அதுவும், எந்த டிஸ்கவுண்டும் கோராமல், அன்று சந்தையில் விளம்பரங்களுக்கு என்ன ரேட் இருக்கிறதோ அதைத் தருகிறோம் என்று சொன்னது ‘மைக்ரோசாஃப்ட்’. கிரெய்க், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று பிற்பாடு அவரிடம் கேட்டபோது, முதல் காரணமாக அவர் சொன்னது, ‘அப்போது எனக்குப் பணம் வேண்டியிருக்கவில்லை’ என்பதுதான். அடுத்து சொன்னது: ‘மக்கள் இதைக் கேட்க வில்லையே!’ அன்று எடுத்த முடிவு இன்றுவரை விளம்பரமே இல்லாமல், முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு என்றே இந்த வலைதளம் இருக்கிறது.
விளம்பர நிறுவனங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சந்தேகம். ‘என்ன இவர்கள் மடையர்களாக இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் களாக இருப்பார்களோ? பணம் சம்பாதிக்காமல் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகி றார்கள்?’ என்று ஒவ்வொரு நாள் ராத்திரியும் தூக்கமில்லாமல் தவித்தவர்கள் மற்றவர்கள்தான். ஆனால், இப்படி மக்களின் விருப்பத்தைச் சார்ந்தே இருந்ததால்தான் இந்த அசுர வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்தது.
பொதுவாக இணையத்தில் வரும் விளம் பரங்கள் பற்றி அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் வெளியாகும் வரிவிளம்பரங்களை மக்கள் நம்புகிறார்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். விளம்பரங்களைப் போடுபவர்களிடமும் விளம்பரங்களைப் படிப்பவர்களிடமும் மெள்ள மெள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.
2006&ல் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ மீண்டும் தனது பயனர்களிடம் சென்றது. இந்தச் சேவையை மேலும் தொடர போதிய வருமானம் வேண்டும் என்பது விவாதிக்கப்பட, பின்னர் விளம்பரம் கொடுக்க வரும் நிறுவனங் களிடம் இருந்து பணம் பெறலாம், தனி நபர்களிடம் இருந்து பெறக் கூடாது என்று மக்கள் கருத்துத் தெரி வித்தனர். அதன் பின்னரே, மூன்றே மூன்று அமெரிக்க நகரங்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படத் தொடங்கியது.
இதே வரி விளம்பர ஐடியாவை வைத்துக் கொண்டு, வேறு எண்ணற்ற வலைதளங்கள் இணை யத்தில் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகம் இருக்கும். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ இன்றுவரை பெரும் வருமானத்தை ஈட்டவில்லை. ஆனால், மிகப்பெரும் நம்பிக்கையை மட்டும் ஈட்டி இருக்கிறது!
மறுமொழியொன்றை இடுங்கள்