Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Puthucehrry’s First CM – Pakkiri Saami Pillai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர்

சோ. முருகேசன்

முதன்முதலில் ஏழைகளுக்கு இலவச அரிசியைத் தனது சொந்தச் செலவில் வழங்கினார் ஒரு முதல்வர். அவர் புதுவையின் முதலாவது முதலமைச்சரான சா. பக்கிரிசாமிப்பிள்ளை. 1955இல் ஏகமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காரைக்காலில் பிறந்தவர்.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பின், 1955 ஜூலையில் நடந்த புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், மக்கள் முன்னணி 21 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் சில உறுப்பினர்கள் அணி மாறியதன் விளைவாக இறுதியாகக் கட்சிகளின் பலம் – காங்கிரûஸ ஆதரித்து 20 உறுப்பினர்கள், மக்கள் முன்னணியை ஆதரித்து 19 உறுப்பினர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரியில் கூடிய சட்டசபை காங்கிரஸ் கமிட்டி சா. பக்கிரிசாமிப்பிள்ளையைக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பிள்ளையவர்கள் ஆகஸ்ட் 13இல் பதவியேற்றார். அவருடன் ஐவர் அமைச்சராகப் பணியேற்றனர் –

  1. எதுவார் குபேர்,
  2. தியாகராஜ நாயக்கர்,
  3. சந்திரசேகர செட்டியார்,
  4. முகமது யூசுபு,
  5. எஸ். தட்சணாமூர்த்தி முதலியார் ஆகியோர்.

1955இல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கிரிசாமிப்பிள்ளை 1946ஆம் ஆண்டு முதல், காரைக்கால் கொம்யூன் மேயராகத் தொடர்ந்து பணியாற்றி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றவராவார்.

“”ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கலாம்” என்ற எண்ணமே நாட்டில் ஏற்படாத காலத்தில், மழைக்காலங்களில் பசியால் அவதியுறும் ஏழை மக்களுக்கு இலவசமாக இவரது சொந்தச் செலவில் அரிசி விநியோகம் செய்து மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர் பிள்ளையவர்கள். தீபாவளியின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, புடவை வழங்குதல் இவரது வாழ்க்கையில் ஓர் அங்கம்.

இதேபோன்று ஆண்டுதோறும் இவர் நடத்தும் கிருஷ்ணஜெயந்தி விழாவின்போது, அரண்மனை போன்ற தனது வீட்டின் உள்ளே ஏழை, பணக்காரர், உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும், நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல் சமபந்தி போஜனம் நடத்தியவர் பிள்ளையவர்கள்.

1947இல் நடந்த சேனாத்தேர் (செனட்டர்) தேர்தலில் பக்கிரிசாமிப்பிள்ளை வெற்றி பெற்று, பாரீசிலுள்ள மேல்சபை உறுப்பினராக 1954 வரை சிறந்த பணியாற்றியுள்ளார். இவர் சேனாத்தேராக இருந்த காலத்தில் பிரெஞ்சிந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களில் பல மக்களாட்சிக் கொள்கைகளைப் புகுத்தியுள்ளார்.

இவரது சேனாத்தேர் பதவிக் காலத்தில்தான், பிரெஞ்சிந்திய விடுதலை பற்றிய பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பாரீசில் நடைபெற்றன. அமைதியான முறையில் “”கத்தியின்றி ரத்தமின்றி”ப் பிரெஞ்சிந்தியா புதுச்சேரி மாநிலமாக மாறியது இவரது இராஜதந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்காலக்கட்டத்தில், பண்டித நேருவின் நெருங்கிய தொடர்பையும், அவரது நன்மதிப்பையும் பெற்றார்.

பிள்ளையவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் மறக்க முடியாத பல செயல்கள் செய்துள்ளார். அவைகளில் “”எல்லோருக்கும் கல்வி” என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா குக்கிராமங்களிலும், சரியான போக்குவரத்து இல்லாத எல்லா சிற்றூர்களிலும் நூற்றுக்கணக்கில் “”ஓராசிரியர் பள்ளிகள்” புதுச்சேரியிலும், காரைக்காலிலும், மாஹேயிலும், ஏனாமிலும் தொடங்கப்பட்டன. இந்த ஓராசிரியர் பள்ளிகள் இன்று உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேனிலைப் பள்ளிகளாகவும் காட்சியளிக்கின்றன!

பிள்ளையவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த மற்றொரு மாபெரும் சிறப்பு நிகழ்ச்சி, பாரதப் பிரதமர் பண்டித நேரு 1955 அக்டோபர் 3இல் காரைக்காலுக்கு வருகை தந்ததாகும். அன்று மாலை தோமாஸ் பிள்ளைத் திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பண்டித நேரு, இம்மாநில வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் நடுவண் அரசு அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார். இம் மாநிலத்தில் பன்னெடுங்காலமாக நிலவி வரும் பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாடு, மாநிலத்தில் நிலவி வந்த தனிச்சலுகைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என முழக்கமிட்டார்.

புகழேணியின் உச்சியில் வீற்றிருந்த பக்கிரிசாமிப்பிள்ளை, 1956 ஜனவரி 13இல், நகராட்சி மன்றத்தில் தனது கடமைகளை ஆற்றிவிட்டு வீடு திரும்பியவர் திடீரென மாரடைப்பால் பகல் 1.30 மணியளவில் காலமானார்.

(இன்று பிள்ளையவர்களின் நூற்றாண்டு நாள்.)

ஒரு பதில் -க்கு “Puthucehrry’s First CM – Pakkiri Saami Pillai”

  1. நிர்மல் said

    இவரை பற்றி இதுவரை கேளவி பட்டதில்லை.
    விவரம் தந்தமைக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: