Mangaiyar Malar – Lathika Charan Interview
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2006
‘‘மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எஸ்டேட்கள் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். என் கூடப் பிறந்தவர் ஒரே ஒரு சகோதரி. எங்கள் பெற்றோர், ‘‘பெண் என்றாலும் வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். படிப்பை முடித்துவிட்டு சொந்தக் காலில் நிற்கவேண்டும்’’ என்று சொல்வார்கள். நான் முதலில் ஊட்டியிலும் அடுத்து கொடைக்கானலிலும் ஹாஸ்டலில் தங்கி என் படிப்பை முடித்தேன்.
படிக்கிற காலத்தில், எனக்குப் புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். நான் விரும்பிப் படித்தவை துப்பறியும் நாவல்கள்தான். என்னுடைய மனம் கவர்ந்த துப்பறியும் நாவலாசிரியர், அகதா கிறிஸ்டிதான். துப்பறியும் நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டால், எனக்கு நேரம் போவதே தெரியாது. என்னிடம் சில பத்திரிகையாளர்கள், சின்ன வயதில் துப்பறியும் நாவல்களில் உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம்தான், போலீஸ் வேலைக்கு வரத் தூண்டியதா என்று கேட்பார்கள். உண்மை என்னவென்றால், நான் பிற்காலத்தில் காவல் துறைக்கு வரப் போகிறேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.’’
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நான் எனக்கு மிகவும் பிடித்த பாடமான கணிதத்தில பட்டப் படிப்பை முடித்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் வாலி பால், நெட் பால், பாஸ்கட் பால் என்று அனைத்து விளையாட்டுகளும் ஆடினாலும், கல்லூரியின் வாலிபால் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கூட நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆர்வமாக இல்லை. படிப்பை முடித்த பிறகு, என் அப்பா, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். உன்னால் வெற்றி பெற முடியும் என்று எனக்கு ஊக்கம் அளித்தார். தேர்வு விண்ணப்பத்தில், எனது முதல் விருப்பமாகக் காவல்துறைப் பணியைக் குறிப்பிட்டேன். காரணம், என்னுடைய குணத்துக்கு, ஐ.ஏ.எஸ். அல்லது அயலுறவுத் துறை பணியை விட காக்கி சீருடைப் பணி பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். என் அப்பா, அம்மா இருவருமே, உனக்கு எது விருப்பமோ அதையே குறிப்பிடு என்று சுதந்திரம் அளித்தார்கள். பணியிட விருப்ப வரிசையில் முதல் சாய்ஸ் தமிழ்நாடு. அடுத்து கேரளா எனக் குறிப்பிட்டிருந்தேன்.
ஐ.பி.எஸ்.க்குத் தேர்வு பெற்றபின் அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் கடுமையானது. தினமும் நான்கு மணி நேரம் பலவிதமான உடற்பயிற்சிகள். இதில் குதிரையேற்றமும், ஆயுதப் பயிற்சியும் அடக்கம்.
பயிற்சிக்குப் பின்னர், சேலத்தில் துணை கண்காணிப்பாளராக எனக்கு முதல் போஸ்டிங். தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
தமிழகக் காவல் துறையில் குற்றப் பிரிவு, சி.ஐ.டி. பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்ததுடன், சி.பி.ஐ.யிலும் நாலரை ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.
என் காவல் துறை அனுபவத்தில் பல பரபரப்பான வழக்குகளை நான் கையாண்டிருக்கிறேன் என்றாலும், என் ஆரம்பக் கட்டத்தில் சேலத்தில் பணியாற்றியபோது புலனாய்வு செய்த ஒரு கேஸ் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது!’’
‘‘மூன்று மாதக் குழந்தை ஒன்று, நகரின் பொதுக் கழிப்பிடப் பகுதி ஒன்றில் இறந்து கிடந்தது. விசாரித்த போது, பன்னிரண்டு வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தை இறப்பதற்கு முன்னால் அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனது தெரியவந்தது, அந்தப் பையன் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு வாங்கியதாக ஒரு பெண்மணி சொன்னாள். அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரணை நடத்தினோம். பையன், குழந்தைக்கு மரவள்ளிக் கிழங்கைக் கொடுத்திருக்கிறான், கிழங்கு அதன் தொண்டையில் சிக்கிக் கொள்ள, குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தோம்.
மறுநாள், இறந்த குழந்தையின் உடலைப் போஸ்ட் மார்டம் செய்த அரசு மருத்துவமனை டாக்டர், என்னைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் வந்தது, நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் சொன்ன தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. தொண்டையில் மர வள்ளிக் கிழங்கு சிக்கி குழந்தை இறக்கவில்லை. துணியை வால் போல் சுருட்டி அந்தக் குழந்தையின் தொண்டைக்குள் செலுத்தியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக டாக்டர் கூறினார். பையனை மீண்டும் விசாரித்தோம். கடைசியில், அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
அவன் கொலை செய்ததற்கு என்ன காரணம் சொன்னான் தெரியுமா? அந்தப் பையன், வட்டிக்குக் கடன் கொடுப்பவன். அந்தக் குழந்தையின் தந்தை, அந்தப் பையனிடம் கடன் வாங்குவான்; ஆனால் ஒழுங்காகத் திருப்பித் தர மாட்டான். ஒருநாள் பையனிடம் கடன் கேட்க அவன் கடன் தர முடியாது; இதுவரை கொடுத்த கடனை முதலில் திரும்பக் கொடு என்று கேட்க, அவன் ‘‘தர முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’’ என்று சவால் விட, பையன் அந்த நபரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கொன்று விட்டான். விசாரணை முடிந்தவுடன், தான் செய்த காரியத்தின் முழு பரிமாணத்தை அறியாத அந்தச் சிறுவன், ‘‘இப்போ நான் வீட்டுக்குப் போகலாமா?’’ என்று கேட்டபோது, நான் அதிர்ந்தேன். அந்தப் பையன், கடைசியில் சீர்திருத்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படான். உண்மையிலேயே என்னால் மறக்க முடியாத கேஸ் இது.
‘‘அரசாங்கம் என்னை நிர்வாகவியல் சிறப்புப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது. முழுமையான ஈடுபாட்டுடனும், திறமையாகவும் என் கடமைகளைச் செய்ததைப் பாராட்டி எனக்கு ஜனாதிபதியின் பதக்கம் வழங்கப்பட்டது.
என்னுடைய திருமணம் காதல் திருமணம். நானும், என் கணவர் சரணும் ஐதராபாத்தில்தான் சந்தித்தோம். திருமணம் முடிந்தது. என்னுடைய பணி எப்படிப்பட்டது என்பதை என் கணவர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், எங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக அமைந்துள்ளது. காவல்துறைப் பணி நேரம் காலத்துக்கு உட்பட்டதில்லை என்பதால், நான் முடிந்த அளவுக்கு ஞாயிற்றுக் கிழமைகளை எனது குடும்பத்துக்காக ஒதுக்கி விடுவேன். என் மகள் இப்போது கல்லூரியில் படிக்கிறாள். அவள் சின்னக் குழந்தையாக இருந்தபோது, அதிர்ஷ்டவசமாக நான் சி.பி.ஐ. யில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என் அலுவலகம் சாஸ்திரி பவனில் இருந்தது. அங்கே ஒரு குழந்தைகள் காப்பகம் உண்டு. அங்கே என் மகளை விட்டுவிட்டு, அவ்வப்போது போய்ப் பார்த்து விட்டு வருவேன்.
எனக்கு சமையலில் ஆர்வமில்லை. ஆனால் என் கணவரும், மகளும் நன்றாகச் சமைப்பார்கள். நான் கேக்குகள், பிஸ்கட்கள் தயாரிப்பேன். மலைப் பகுதியில் அமைந்த எஸ்டேட் பகுதியில் வளர்ந்தவள் என்பதால் எனக்குத் தோட்டக் கலையில் மிகவும் அதிக ஆர்வம் உண்டு. அது மட்டுமின்றி தோட்ட வேலை ஒரு நல்ல உடற்பயிற்சியுமாயிற்றே?
ஒரு பெண் என்றாலும், எனக்கு உடை, அலங்காரம் இவற்றில் எல்லாம் அதிக ஆர்வம் கிடையாது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில், நான் காக்கிச் சீருடை அணிந்தாலும், ஒரு சில பதவிகளில் இருந்தபோது, நான் காக்கிச் சீருடை அணியாமல், புடைவை அணிந்ததும் உண்டு.
எனக்குத் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உண்டு. முன்பெல்லாம் அரைமணி அல்லது முக்கால் மணி நேரம் உடற்பயிற்சிக்காக என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால், இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும், எப்படியும் பதினைந்து நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு நான் ஒதுக்கிவிடுகிறேன்.
தினமும் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுடன் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை. அவற்றால், பலவிதமான பாதிப்புகள். புகாரும் கையுமாக வரும் ஒவ்வொரு வரையும் தினமும் நான் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். சாமானிய மக்களின் நண்பன் காவல்துறை என்ற பெயரை நிலைநாட்டுவதுதான் என்னுடைய முதல் கடமை.’’
‘‘சென்னை மாநகரக் காவல்துறை வரலாற்றில், ஒரு பெண் கமிஷனராக வந்திருப்பதை ஒரு பெரும் சாதனையாகப் பலரும் சொல்லுகிறார்கள். இதுவரை நான் வகித்த பதவிகள் எல்லாவற்றையும் விட, அதிகமான பொறுப்புகள் கொண்ட பதவி இது. முன்பை விட இப்போது அதிகப்படியான பகுதிகள், சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குள் இருக்கின்றன. இருந்தும், சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை வைத்து, என்னை இந்தப் பதவியில் அமர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன்.’’
சந்திப்பு : எஸ். சந்திரமௌலி
படம் : ஸ்ரீஹரி
CAPitalZ said
அட கொக்கிதோ மிக்கா நானும் இயக்குனர் சேரனின் மனைவி என்று நினைத்தன்.
________
CAPital
Bala said
🙂