Four new Flyovers for Madras
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006
மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சென்னையில் 4 மேம்பாலங்கள்: மாநகராட்சியில் தீர்மானம்
சென்னை, செப். 1: சென்னையில் 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பணிகளுக்கு மாநகராட்சியின் நிலைக்குழு (பணிகள்) ஒப்புதல் அளிக்காததால் மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியது:
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள
- வடக்கு உஸ்மான் சாலை-டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) சந்திப்பு,
- பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை-டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பு,
- கோமதி நாராயணா சாலை-திருமலை சாலை சந்திப்பு,
- உஸ்மான் சாலை-துரைசாமி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்துக்கு மன்றத்தின் அனுமதி வேண்டி முதலில் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களைக்கூறி இத்திட்டத்துக்கு நிலைக்குழுவினர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பியும் இதற்கான ஒப்புதல் தர நிலைக்குழுவினர் மறுத்து வந்தனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மாநகராட்சி மேயரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை மன்றக்கூட்டத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதிகளில் ரூ. 58.52 கோடியில் மேம்பாலங்கள் அமைக்க மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் ராஜா சர் முத்தையா செட்டியார், மேயராக பணியாற்றிய எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனக்கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பெருங்குடியில் மக்காத குப்பைகளில் இருந்து ரூ. 20 கோடியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார் கராத்தே தியாகராஜன்.
அரசுக்கு நன்றி: மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சி.வி. மலையன் (திமுக) பேசியது:
சென்னையில் பல்வேறு வெள்ளத்தடுப்புப் பணிகள், மேம்பாலங்கள், பூங்காக்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்பட கடந்த 4 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முன் வந்துள்ளது என்றார்.
இதற்காக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்