Technology & Electronics Trach – Recycle
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006
குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை!
வைகைச் செல்வி
தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சந்தையின் வளர்ச்சி அதீத வேகத்தில் நடைபெறுகையில், இன்றைக்குப் புதியதாக வாங்கும் ஒரு பொருள், நாளையே அரதப் பழசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே பொருளின் புதுப் புது மாடல்கள் புற்றீசல் போல நுகர்வோரை மொய்க்கின்றன. மின்னணுச் சந்தையில் புதிய பொருள்கள் உருவாக உருவாக, பழைய பொருள்களின் கழிவும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.
பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.
நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.
மின் குப்பையில் அபாயகர வேதிப்பொருள்கள் இருப்பதாலேயே அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இக் கழிவுகளைச் சரியான முறையில் கையாளாவிட்டால், சுற்றுச்சூழல் கேடுகளும் சுகாதாரக் கேடுகளும் பின்னிப் பிணைந்துவிடும். அது மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து உருவாகும் மின் குப்பையும் எல்லாக் குப்பையோடும் சேர்ந்து, பெரும்பாலும் சாக்கடைக்கோ அல்லது நகராட்சிக் கழிவிற்கோ செல்லுகிறது. தாமிரம் போன்ற உலோகங்களை மீட்டெடுக்க கேபிள் மற்றும் வயர்களைத் திறந்த வெளியில் மனம் போன போக்கில் எரிக்கையில் நச்சு வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடும். இக்குப்பையை யாரோ உருவாக்க, யாரோ பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இவற்றில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய கழிவுகள் என்னவெனில், கம்ப்யூட்டர் கழிவுகளே. இவற்றின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர்களின் விலை குறைந்து கொண்டே வருவதாலும், கடன் வசதிகள் பெருகியுள்ளதாலும், நடுத்தரக் குடும்பத்தினரால்கூட எளிதில் கம்ப்யூட்டர் வாங்க இயலுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கும் நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் கம்ப்யூட்டர் பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இதே வேகத்தில் கழிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டிற்குள் இது 100 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.
பெங்களூர் மட்டும் ஒரு வருடத்திற்கு 8000 டன்கள் கம்ப்யூட்டர் கழிவுகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் 30,000 கம்ப்யூட்டர்கள் பயனற்றதாகக் கழிக்கப்படுகின்றன.
ஒரு கணினியில் உள்ள நச்சுப் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அசந்து போக நேரிடும். தற்சமயம் பிரபலமாயுள்ள தட்டை ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் பாதரசம் உள்ளது. பொதுவாக கணினி உதிரி பாகங்களில் காரீயம் மற்றும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் டயாக்சின் மற்றும் ஃப்யூரான் ஆகிய நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் பாலி வினைல் குளோரைடு கேபிள் இன்சுலேஷன்களில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப்பொருள்கள் உள்ளன. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் உள்ளது. இத்தகு நச்சுப் பொருள்கள் எல்லாம், பயனற்ற கம்ப்யூட்டர்கள் தவறான முறையில் கழிக்கப்படுகையில் வெளியாகின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாய் மின்னணுக் குப்பை விகிதமும் அதிகரிக்கிறது. எனினும், இக் குப்பைக்கு சந்தையில் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு விலை உள்ளது. மின் குப்பையில் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களோடு தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களும் கிடைக்கின்றன. “குப்பையே செல்வம்’ என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக மின் குப்பையைச் சொல்லலாம். பல கழிவுப் பிரச்சினைகளுக்கு ஆதாரமாக விளங்கும் அதே மின் குப்பை மறுசுழற்சி செய்கையில் ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமற்ற முறையில் மறுசுழற்சி செய்கையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேட்டை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலையும் நச்சாக்குகிறது.
வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையை “பின் வாசல்’ வழியாகக் கொட்டுகின்றன. அதாவது ஏற்கெனவே பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை “டொனேஷன்’ என்ற பெயரில் மறுபயன்பாட்டிற்காகத் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தானமாக இங்கு அனுப்புகின்றன. சிறிது காலத்திற்குப் பின் இவை குப்பைகளே. வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவை மறு சுழற்சி செய்ய அதிகச் செலவாகும். ஆனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மறு சுழற்சி நடைபெறுவதால் இக்கழிவுகள் இங்கே தள்ளிவிடப்படுகின்றன. எனவே, இந்நாடுகளில் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெடுகிறது.
அபாயகரக் கழிவுகளை உலகின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதை முறைப்படுத்த உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயல் திட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி, அமெரிக்காவில் உருவாகும் மின்னணுக் குப்பையில் 50 முதல் 80 சதவிகிதம் வளரும் நாடுகளுக்கு, மறுசுழற்சி செய்வதற்காகத் தள்ளிவிடப்படுகிறது. மின் குப்பைக்கென நம் நாட்டில் தனியே சட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு ஜூலை 2004-ல் தேசிய மின்னணு மற்றும் மின் கழிவிற்கான பணிக்குழுவை (National Waste of Electronic and Electrical Equipment Task Force) நியமித்துள்ளது.
நகராட்சிக் கழிவுகளையே இன்னும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போடும் மனநிலையில் இல்லாத பொது மக்கள் மின்னணுக் குப்பையைச் சரியான முறையில் கையாளுவது சிரமம். எனவே “சுற்றுச்சூழல் சீர்கேட்டினை உண்டுபண்ணுபவரே, அதற்கான இழப்பை ஈடு செய்ய வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இச்சாதனங்களின் உற்பத்தியாளரே இக்கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரித்து இறுதி நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்சமயம் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் உயர் நிலைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலுள்ள தரமணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற இடங்களில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையவுள்ளன. மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவாகும் மின்னணுக் கழிவுகளின் அளவைக் கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பொதுவாக இக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிதான, செலவு குறைந்த தொழில் நுட்பமே இந்தியாவைப் போன்ற வளரும் நாடு களுக்குத் தேவை.
மறுமொழியொன்றை இடுங்கள்