Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Short Films on Disabled

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

புதிய பாதை: நிஜமாகும் கனவுகள்!

மா. பழனியப்பன்

இது குறும்படங்கள், ஆவணப் படங்களின் காலம் போலும். ஜனரஞ்சக சினிமா சீண்டாத விஷயங்களை, மீடியா வெளிச்சம் விழாத பிரதேசங்களை சமூக அரங்குக்குக் கொண்டு வருகின்றன இந்தப் படங்கள். குறும்படங்கள் தயாரிப்பில் ஒரு கூட்டமே தீவிரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் குறும்படங்கள் உருவாக்கத்தோடு நின்று விடாது, அவற்றை அந்த இலக்கு மனிதர்களை நோக்கி எடுத்துச் செல்வதிலும், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதிலும், அம்மக்களின் கருத்துகளை திரும்பப் பெறுவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் எஸ். அலெக்ஸ் பரிமளம். சென்னை லயோலா கல்லூரி காட்சி ஊடகவியல் துறை விரிவுரையாளர். அவருடன் பேசியதிலிருந்து…

அலெக்ஸ் பரிமளம்

“”தற்போதைய விரிவுரையாளர் பணிக்கு முன் பெங்களூரில் உள்ள “ஆட் இண்டியா’ (அக்க் ஐய்க்ண்ஹ) நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். ஊனமுற்றோரின் நல்வாழ்வுக்குப் பாடுபடுவது இந்த உலகளாவிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வேலை. பின்தங்கிய கிராம மக்கள், ஊனமுற்றோர், குழந்தைத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், மனநலம் குன்றியோர் போன்றோரின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் நிறுவனங்களுடனும் ஆட் இண்டியா இணைந்து செயல்படும். இந்நிறுவனத்தில் எனக்கு மக்கள் தொடர்பாளர், திட்ட அலுவலர் பணி. குறிப்பிட்ட மக்களின் இருப்பிடத்துக்கே சென்று அவர்களோடு கலந்து செய்ய வேண்டிய வேலை. அதனால் அவர்களின் வாழ்க்கையை, அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு. அதை அப்படியே படங்களாக பதிவு செய்திருக்கிறேன்.


படப்பிடிப்பில்…

நான் இதுவரை 20 குறும்படங்கள், ஆவணப் படங்கள் இயக்கி, உருவாக்கியிருக்கிறேன். முதன்முதலாக 1992-ல் ஒரு ஃபரீலான்ஸராக “ஊரான் பிள்ளை…’ என்ற 20 நிமிஷ குறும்படத்தை உருவாக்கினேன். சாலையோரம் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் பிளாட்பார சிறார்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு. சென்னை சமூக அறிவியல் கல்லூரி நடத்திய திரைப்பட விழாவில் அதற்கு முதல் பரிசான பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. அதுதான் துவக்கம்.

தொடர்ந்து, 94-ல் ஆண்டிபட்டியில் உள்ள “ஆரோக்கிய அகம்’ என்ற அமைப்புக்காக, “சிதையாத சித்திரங்கள்’ என்ற படத்தை உருவாக்கினேன். காசநோயாளிகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும், அது குணப்படுத்தக் கூடிய நோய்தான் என விளக்கும் குறும்படம் அது.

அப்புறம், “ஆட் இண்டியா’வில் இணைந்ததும் எனது பணியின் அங்கமாகவே பல படங்களைத் தயாரித்தேன். குறும்படம் என்றாலே, பொருள் தேடும் உலகம் பொருட்படுத்தாத மனிதர்களை காமிராவுக்குள் அள்ளிக்கொண்டு ஓடிவந்து விடுவதல்ல. நான் ஸ்கிரிப்டையே அம்மக்களுடன் சேர்ந்துதான் உருவாக்குவேன். அம்மக்களே நடிப்பார்கள். வழிகாட்டுவார்கள். முடிந்தால் காமிரா பிடிப்பார்கள். முழுக்க முழுக்க மக்கள் பங்கேற்புடனே நடக்கும்.

ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றுவதும், அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வழிகாட்டுவதும், விழிப்புணர்ச்சியை விதைப்பதும்தான் இந்தப் படங்களின் அடிப்படை நோக்கங்கள். அதனால் அக்குறிப்பிட்ட மக்கள் பங்கேற்பாளர்களாக இல்லாமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் சரியாயிருக்குமா? எனவேதான் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

மக்கள் பங்கேற்பின் காரணமாக இந்தப் படங்களில் ஒரு தொழில்நுட்ப நேர்த்தித் தன்மை இல்லாமல் போகலாம். ஆனால் உயிருண்டு. காட்சி அழகியலை விட வாழ்வியல் நிதர்சனம் முக்கியமில்லையா?

படம் தயாரானதும் மக்களுக்கும், இத்துறையில் புலமை உள்ளவர்களுக்கும், ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும் திரையிட்டுக் காட்டுவோம். அவர்களின் கருத்துகளை பதிவு செய்வோம்.

இந்தப் படங்கள் அனைத்தும் தென்னிந்திய மொழிகள், குஜராத்தி, இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆட் இண்டியாவுடன் இணைந்த பல்வேறு தொண்டு அமைப்புகளால் ஆங்காங்கே காட்டப்பட்டு வருகின்றன.

இன்று நமது ஊடகங்கள் எல்லாமே மக்களுடன் அன்னியப்பட்டு நிற்பவையாகத்தான் உள்ளன. சுதந்திர தினத்தன்றும் நமீதா பேட்டியைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளை, அவர்களைப் பற்றிய விஷயங்களை பேசுகிற “கம்யூனிட்டி டிவி’ போன்ற அமைப்பு இங்கில்லையே!

சம்பந்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அவ்விஷயத்தில் ஆர்வமுள்ளோருக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்தினருக்கு அதற்கான வாய்ப்பு இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். நிச்சயம் மாணவர்களை இவ்வழியில் வழிநடத்தினால் அவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை ஆற்றுவார்கள். நான் கல்லூரியில் “மேம்பாட்டுக்கான தொடர்பு’ பாடம் நடத்துகிறேன். வகுப்பில் எனது அனுபவ அறிவுடன் கிராம மக்கள், அடித்தட்டு மக்களின் வாழ்நிலை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். கிராமங்களுக்குச் செல்ல முன்வருகிறார்கள்.

இன்றும் நாம் நம்மருகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறியாமல்தான் இருக்கிறோம். கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அவரவர் தங்கள் வீட்டுக்கு முன் மலம் கழிக்க, அதை மாதாரி இனத்தினர் கைகளால் சுத்தம் செய்கின்றனர். அதற்கான கூலி “எடுப்பு சோறு’. அதாவது வீட்டுக்கு வீடு போடும் சோறு. இது இன்றைய தேதி நிலைமை. சுடும் உண்மை.

இதையெல்லாம், இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பளபள பிளாசாக்களையும் பல்லாயிரம் கிலோமீட்டர் நீள நாற்கரச் சாலைகளையும் காட்டி, ஆகா முன்னேற்றம் வந்துடுச்சு என்று ஆரவாரிப்பதில் என்ன இருக்கிறது? அரசாங்கத்தின் கண்ணை யார் திறப்பது?

இளமையில் “கல்’.

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் மூலம் எனது படங்கள் பல நூறு கிராமங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இவை இலட்சம், கோடி மக்களை அடைய வேண்டும். அதற்கு மாஸ் மீடியாவின் அனுசரணை வேண்டும். அதற்காகத்தான் தற்போது தூர்தர்ஷனில் பேசிக்கொண்டிருக்கிறேன். முன்பு கர்நாடகத்தில் கேபிள் டிவியில் சினிமா படங்கள் போடுவதற்கு முன் இதுபோன்ற படங்களை ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்தோம்.

நாங்கள் உருவாக்கிய படங்கள் எல்லாமே மக்கள் சார்ந்த, அவர்களின் மண் சார்ந்த பிரச்சினைகளை, அவர்கள் மொழியிலேயே பேசுபவை. அதனால் இவை அம்மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. ஆனால் காலம் காலமாக ஊறிவந்த உணர்வுகளை, அவர்களின் முரட்டுத்தனமான மூட நம்பிக்கைகளை உடனே முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். மாற்றம் என்பது மிகவும் மெதுவாக வரலாம். ஆனால் அதற்கான மனமாற்றம் நிச்சயம் ஏற்பட்டு வருகிறது என்பது மட்டும் நிதர்சனம்.”

நம்பிக்கை தெறிக்கும் குரலில் அலெக்ஸ் பரிமளம் முடிக்க, அவர் மனநலம் குன்றியோர் பற்றி 12 மணி நேரத்தில் உருவாக்கிய பட சிடியில் நம் பார்வை படுகிறது – “நிஜமாகும் கனவுகள்’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: