Mullai Theevu Attack – 60 Children Dead
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006
![]() |
![]() |
இலங்கையில் தொடர்ந்து மோதல் |
முல்லைத்தீவு தாக்குதலில் 60 க்கும் அதிகமான சிறார்கள் பலி என்கின்றனர் விடுதலைப் புலிகள்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்த 61 மாணவியர் கொல்லப்பட்டதாகவும் 129 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் சிறுவர்கள் மீது தாங்கள் தாக்குதலை நடத்தவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வவ்லிபுனம் என்னுமிடத்தில் உள்ள ஏதிலியச் சிறுவர்களுக்கான இல்லத்தின் வளவினுள்ளேயே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த நிவாரணம் தொடர்பான முதலுதவி தொடர்பான வதிவிடப் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
![]() |
![]() |
விடுதலைப் புலிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினோம் என்கிறது இலங்கை அரசு (ஆவணப் படம்) |
தலையில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் போதிய வசதிகள் இல்லாதிருப்பதாகவும், இதனால் அவ்வாறானவர்களை தென்பகுதியில் உள்ள வசதிமிக்க மருத்துவ மனைகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரச படைகள் சிறார்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்த இடம் விடுதலைப்புலிகளின் ஒரு பயிற்சி முகாம் என்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வன்னிப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைக்குழு, போர்நிறுத்த கண்காணிப்பு குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன
மறுமொழியொன்றை இடுங்கள்