Every Indian has to adhere to the LTTE Ban – M Karunanidhi
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2006
விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு அனைவரும் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்
![]() |
![]() |
தமிழக முதல்வர் மு. கருணாநிதி |
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியா இல்லையா என்பது விவாதத்திற்குரியது என்றாலும் அந்த தடை அமலில் இருக்கும் வரை, அந்த தடைக்கு அனைவரும் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்றும், அதை மீறிச்செல்வோம் என்று யாராவது செயல்பட்டால் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்கள் ஏற்றுத்தான் தீர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் பேசும்போது, வேலூர் மாவட்டம் திருப்பத்துர் நகரில் புரட்சிகர இளைஞர் முன்னணி என்கிற அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அதில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, தடை நீக்கப்படவில்லை என்றால் இந்தியா துண்டுதுண்டாகிவிடும் என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்ட அவர்கள் மீதும் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சியினர் மீதும் வழக்கு ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய கருணாநிதி, புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் ஜூலை 31ம் தேதி ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து எந்த பதட்ட நிலையும் வேலூர் மாவட்டத்தில் இல்லை என்றும், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அதிகாரிகள் தமக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஈழத்தமிழர்களுக்கான தமது அனுதாபத்தை ஈழத்திலே இருப்பவர்களுக்கும், சிங்கள தரப்புக்கும், இந்திய அரசுக்கும் வெளிப்படுத்துகின்ற வகையில் ஆர்ப்பாட்டங்களோ, கிளர்ச்சிகளோ அமையுமானால் அது ஏற்கத்தக்கதே என்று கூறிய கருணாநிதி, அதே சமயம் இத்தகைய பேரணி மற்றும் ஊர்வலங்களின் நிலைமைகள் வேறுமாதிரி திரும்புமேயானால் அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரித்தார்.
கருணாநிதியின் இன்றைய எச்சரிக்கையும், அதை அவர் பீடிகையோடு சொன்ன விதமும், இலங்கை தமிழர் பிரச்சினையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் தலைவர்களுக்கு அவர் வெளிப்படுத்தியிருக்கும் மறைமுக சமிக்ஞையாகவே அரசியல் திறனாய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
அதோடு கூட, விடுதலை புலிகள் விஷயத்தில் திமுக எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான தர்மசங்கடங்களையும் அது வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
அன்றாட நடைமுறை அரசியலில் திமுக பின்வரும் பிரச்சினையை எதிர்கொள்கிறது.
அதாவது, பாமக, திக போன்ற தோழமை கட்சிகளும் மதிமுக, விடுதலைசிறுத்தைகள் ஆகிய எதிர்கட்சிகளும் தங்களின் புலிகள் ஆதரவு நிலையை சமீப காலமாக வேகப்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.
இவர்களின் வலுவான எதிர்ப்பு காரணமாகவே, இந்திய நடுவணரசின் பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை காவலர்கள் 44 பேரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும்படி, கருணாநிதி நடுவணரசை வலியுறுத்தவேண்டிய நிலைமை உருவானதாக கருதப்படுகிறது. இதனால், பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு கடந்தவாரம் இலங்கை காவல்துறையினர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்.
அதேசமயம், ராஜீவ் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளை மன்னிக்க தயாராக இல்லை என்று மிகச்சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
பிரதான இடதுசாரிகட்சிகள் இரண்டும் கூட விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க தயாராக இல்லை. இந்த கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திவரும் திமுக, இவர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய தேவை இருப்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்கட்டுகிறார்கள்.
இந்த பின்னணியில், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் பிரச்சாரம் குறித்த காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையே, அந்த கட்சியை சேர்ந்த ஞானசேகரன் இன்று பகிரங்கமாக சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரசின் இந்த எதிர்ப்பை தாம் கவனத்தில் கொண்டிருப்பதாக காட்டுவதற்காகவே, புலி ஆதரவாளர்களை கருணாநிதி இன்று பகிரங்கமாக எச்சரித்திருப்பதாகவும் சில திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே, இலங்கையில் நடைபெறும் வன்முறைகளை சர்வதேச சமூகம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பண்டியன் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் நடந்துவரும் வான்வழித்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாண்டியன் கூறினார்.
Hiren said
Good to see Karunanidhi speaking like that.