Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

CPI(M)’s N Sankaraiyaah – Kumudam.com

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனால், சாமான்யர்களுடன் மின்சார ரயிலில் பயணம். எளிமை; கதராடை! தனி வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தூய்மை! அவர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவரான தோழர் என். சங்கரய்யா.

சங்கரய்யாவின் தந்தை: நரசிம்மலு; தாய்: இராமானுஜம் அம்மாள்.

இவர்களது இரண்டாவது மகன்தான் சங்கரய்யா. பிறந்தநாள்: 15.7.1922.

சங்கரய்யாவின் குடும்பம், சுயமரியாதைக் குடும்பம் இவரது தாய் மாமா, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடியவர்.

பூர்வீகம்: நெல்லை மாவட்டம், ஆத்தூர். பிறந்த ஊர்: கோவில்பட்டி. தந்தை நரசிம்மலு, பொறியாளர். மதுரை நகரசபை நீரேற்று நிலையத்தில் மேற்பார்வையாளர் பணி.

மாணவர் சக்தி!

1938_ல் தமிழகத்தில் மெட்ராஸ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பு உருவாகி, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியது. மாணவர் பேரணிகள் நடத்தப்பட்டன. முத்தையா, பாலதண்டாயுதம், ஆர்.உமாநாத், தூத்துக்குடி சீனுவாசன் போன்றோருடன், மதுரையில் படித்துக் கொண்டிருந்த சங்கரய்யாவும் அந்தப் பேரணிகளில் கலந்து கொண்டார்.

1939_ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் (வரலாறு) தேறினார். கல்லூரியின் மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். இதைச் சகிக்காத கல்லூரி நிர்வாகம் சிலரை சஸ்பெண்ட் செய்தது. இதை எதிர்த்து சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் போராடினர். இறுதியில் கல்லூரி நிர்வாகம் பணிந்தது. ‘நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல; நாட்டு விடுதலைக்காகப் போராடுகிறவர்கள்’ என்று சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் உணர்ச்சிகரமாக ஆர்ப்பரித்தனர்.

இவரது பேச்சு காந்த சக்தி கொண்டது. யாரையும் வசியப்படுத்தும் திறன் வாய்ந்தது. மாணவர்கள் பலரும் இவர் தலைமையை ஏற்றனர். விளைவு, அமெரிக்கன் கல்லூரியில் 1940_ல் மாணவர் மன்றச் செயலாளரானார். 1941_ல் நேரு கைது செய்யப்பட்டார். சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகத்தில் இவர் உட்பட 40 மாணவர்கள் கைதானார்கள். ‘சுதந்திரப் போராட்ட வீரர்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும்’ என்பதை வலியுறுத்தி ஏ.கே. கோபாலன் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 19 நாட்கள் உண்ணாமல் இருந்தார்.

அது தேர்வு நேரம். சிறை சென்றதால், சங்கரய்யாவால் தேர்வு எழுத இயலவில்லை. படிப்பையும் தொடர முடியவில்லை. கல்லூரித் தேர்வு எழுதாவிட்டாலென்ன? விடுதலைப் போர் என்னும் அரசியல் தேர்வில், அவர் அவுட்ஸ்டாண்டிங்கில் பாஸ் செய்துவிட்டாரே!

1942_ல் தமிழ்நாடு மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம். சங்கரய்யாவின் கடும் உழைப்பு மாணவர் சக்தியை ஒன்றுதிரட்டியது. அதன்பிறகு, ஏராளமான பேரணிகள்… போராட்டங்கள்.. ஆர்ப்பாட்டங்கள்! பிரட்டிஷ் அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது மாணவர் சக்தி!

பாளையங்கோட்டையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த மாணவர் ஊர்வலத்துக்கு, சங்கரய்யா தலைமை தாங்கினார். ஊர்வலக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸ் தடியடியில் அவர் காயப்பட்டார். பிறகு, மதுரையில் கைது. அவரது கைதை எதிர்த்து தமிழகம் முழுதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரண்டு போன பிரிட்டிஷ் அரசு, சங்கரய்யாவை விடுதலை செய்தது.

தந்தை மறைவு!

1944_ல் தந்தை நரசிம்மலு காலமானார். குடும்பப் பொறுப்பு தோழரின் தோள்மீது. கட்சியின் முழுநேர ஊழியராக இருந்து கொண்டே குடும்பப் பொறுப்பையும் திறம்பட நிர்வகித்தார் சங்கரய்யா.

1946_ம் ஆண்டு, காஷ்மீரில் நுழையக் கூடாது என்று நேருவுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சங்கரய்யா தலைமையில் கூட்டங்களும் ஆர்பாட்டங்களும் மதுரையில் நடந்தன. இதே சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரை வந்தபோது, மிகப்பெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் சங்கரய்யா. இந்தக் காரணங்களால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு, 1946_ல் மதுரை சதி வழக்கை ஜோடித்து பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி ஆகியோரைக் கைது செய்தது. இந்திய விடுதலையின் முதல்நாள் வரை அந்தச் சிறை வாழ்க்கை நீடித்தது.

திருமணம்!

1947_ம் ஆண்டு நவமணி அம்மாளை மணம் புரிந்தார். கலப்புத் திருமணம். நவமணி அம்மாள் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர். கரடுமுரடான கணவரின் அரசியல் பாதையில் எந்த முகச் சுளிப்பும் காட்டாமல் அனுசரணையும் அன்பும் காட்டி குடும்பத்தை நடத்தி வருபவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; ஒரு மகள். ஏழு பேரக் குழந்தைகள்.

இவரது குடும்பத்தினரும், பல்வேறு பொறுப்புகளிலிருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்கள் உறவினர்கள் பலர் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்தவர்களே. இவரது சகோதரர் என். ராமகிருஷ்ணன் நிறைய கம்யூனிஸ்ட் இயக்க நூல்களை எழுதியிருக்கிறார்.

கம்பீரக்குரல்!

நேரம் தவறமாட்டார். கூட்டம் நடப்பதற்கு முன்பே அங்கு போய்விடுவார். மேடையில் பேச ஆரம்பித்தால் புள்ளி விவரங்கள் துள்ளித் தெறிக்கும். கம்பீரமான குரல்! தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமான பேச்சுத்திறன். சட்டமன்றத்தில் இவர் மிக வேகமாகப் பேசும்போது, குறிப்பெடுக்கும் சுருக்கெழுத்தர்கள் திணறுவார்கள்.

காலை 5.30க்கு விழிப்பு. எழுந்தவுடன் ஹிந்து, தீக்கதிர் படிக்காவிட்டால், அடுத்த வேலை ஓடாது.

கட்சிப் பொறுப்புகளில் உயர்ந்த போதிலும் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும் முழு நேர ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும் அலவுன்சை மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகித்து வந்த சங்கரய்யா, சமீப காலம் வரை குரோம்பேட்டை நியூகாலனியில் ஒரு சிறிய வீட்டில்தான் குடியிருந்தார் என்பது, சுயநலமில்லாத அவரது பொதுநல உழைப்பின் அடையாளம். அவரது பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குப் போன பிறகுதான், தந்தைக்காகச் சிறிய வீட்டைக் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்!

சங்கரய்யாவுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பரிமேலழகர் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். இவரது மிகப் பெரும் உந்து சக்தி பாரதியார் கவிதைகள். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்று சங்க இலக்கியங்களை விரும்பிப் படிப்பார்.

‘சங்க இலக்கியத்தைப் பற்றிய ஆழ்ந்த புலமை பெற வேண்டும்’ என்று இயக்கத்தின் இளைய தலைமுறையினரிடம் அன்புடன் வலியுறுத்துவார். பேச்சுத்திறன் போலவே எழுத்திலும் வல்லமையுள்ளவர். ‘ஜனசக்தி’யின் ஆசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றியிருக்கிறார் (1959_62).

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் இவரது பங்கு மகத்தானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, ஏராளமான போராட்டங்கள்… பொதுக் கூட்டங்கள்… மாநாடுகள்… தொழிலாளர்கள், விவசாயிகள் நலம் நாடும் களப்பணிகள்… இயக்கம் தடை செய்யப்பட்டபோது, 1948_லிருந்து 1951 வரை தலைமறைவு வாழ்க்கை. 1962 சீனப்போரின் போது, கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை! பிறகு விடுதலை. 1964_ல் சீனா நெருக்கடி நிலை தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் 1966 வரை சிறை! கிட்டத்தட்ட மொத்தம் ஏழரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை… மூன்றரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை! பதவிகள் பல இவரைத் தேடி வந்தன. தங்களை அலங்கரித்துக்கொண்டன.

மார்க்சிஸ்ட் இயக்கம்!

1964_ம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 35 உறுப்பினர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியினை அமைத்தனர். அந்த 35 பேரில் சங்கரய்யாவும் ஒருவர்.

2002_ம் ஆண்டு, கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு. கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த சங்கரய்யா, தன் உடல்நிலை காரணமாக, அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்!

பதவியிலிருந்துதான் ஒதுங்கினாரே தவிர, கட்சிப் பணியிலிருந்து அவர் ஒதுங்கவில்லை. 84 வயதிலும் அவர் கட்சி அலுவலகத்துக்கு இப்போதும் வருகிறார். தன் நெடிய அனுபவத்திலிருந்து ஆலோசனை தருகிறார். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா பாதையில் தமிழகமும் திரும்ப வேண்டும் என்பது சங்கரய்யாவின் ஆழமான கனவு! இதோ, சங்கரய்யாவின் வழிகாட்டுதலில், இளைய தலைமுறை சிவப்புச் சிப்பாய்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றனர் _ சங்கரய்யாவின் கனவை நிறைவேற்ற! றீ

2002_ம் ஆண்டு கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. அந்த மாநாட்டின் கொடியேற்று விழாவின்போது, ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே’ என்று தொடங்கும் பாடல் பாடப்பட்டபோது, ஒரு குழந்தையைப் போல் குலுங்கிக் கண் கலங்கினார் என். சங்கரய்யா. காரணம், அந்தப் பாடலின் பின்னணியில் புதைந்து கிடக்கும் தியாகச் சரித்திரம்!

அந்தப் பாடலின் பின்னணி இதுதான்: இந்திய சுதந்திர தினமான 1947_ ஆகஸ்ட் 15_ம் தேதிக்கு முதல்நாள் வரையில் பி.ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, என். சங்கரய்யா உள்பட நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் ‘மதுரை சதி வழக்கு’ போடப்பட்டு மதுரைக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 14_ம் தேதி மாலை சிறைச்சாலைக்கே வந்து தோழர்களை விடுதலை செய்தார் நீதிபதி. தொழிலாளர்கள் அவர்களை ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். விடுதலைத் திருநாளில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தியாகி வைத்திய நாதய்யர் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம்!

விடுதலைப் போரில் இறந்தவர்களின் நினைவுகளைப் போற்றி இந்தி ஆசிரியரும் கம்யூனிஸ்டுமான மணவாளன் ‘விடுதலைப் போரில்’ பாடலை எழுதியிருந்தார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலேயே அமர்ந்து மெட்டமைக்க, குரல்வளம்மிக்க ஐ.வி. சுப்பையா, கம்பீரக் குரலில் பாடினார்.

நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரம் காம்ரேட்களுக்கு நீடிக்கவில்லை. 1948ல் மீண்டும் கைது. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்ததைவிட, சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குக் கடுமையான சிறைக் கொடுமைகள்!

அந்தப் பாடலை எழுதிய மணவாளனை மதுரைக்கு வெளியே லாரியில் ஏற்றிச் சென்று சுட்டுக் கொன்று, தப்பிக்க முயன்ற போது சுட்டதாகக் கதைவிட்டது சுதந்திர இந்திய போலீஸ்!

பாடலைப் பாடிய ஐ.வி. சுப்பையா, சிறைச்சாலை அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து, அணு அணுவாக உயிரைவிட்டார். விடுதலைப் போரில் இறந்த மலர்களுக்காகப் பாடிய இரண்டு மலர்கள் விடுதலை இந்தியாவில் உதிர்ந்து விழுந்த பரிதாபம்!

அன்று கோவை கம்யூனிஸ்ட் மாநாட்டில் ‘விடுதலைப் போரில்’ பாடல் பாடப் பட்டபோது, சங்கரய்யாவுக்குக் கடந்து வந்த கரடுமுரடான தியாகப் பாதைகளும்… இளமைக்காலப் போராட்டங்களும் இறந்து போன சகாக்களும்… கடந்து செல்ல வேண்டிய இலக்குகளும்… இன்னும்… இன்னும் எழுத முடியா உணர்வுகள் எல்லாம் மனதில் எழுந்திருக்க வேண்டும்! கம்யூனிஸ்ட்கள் நெகிழ்ச்சித் தன்மையற்றவர்கள், இறுக்கமானவர்கள் என்ற வாதங்களின்மீது ஒரு முற்றுப்புள்ளியாய் விழுந்தது சங்கரய்யாவின் கண்ணீர்த்துளி!

_பெ. கருணாகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: