Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Hatred wildfires

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

வன்மம் என்னும் அணையா நெருப்பு

பாவண்ணன்

பீறிட்டுப் பாயும் மனித ரத்தத்தை அல்லது சொட்டுச்சொட்டாக ஒழுகுகிற ரத்தத்தைப் பார்க்கும் முதல் கணத்தில் பொதுவாக நம் மனம் எப்படி உணர்கிறது? உடனடியாக ஒருவித அதிர்ச்சி நம்மைத் தாக்கித் துணுக்குறச் செய்கிறது. மறுகணம் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து விடுகிறோம். அச்சத்திலும் குழப்பத்திலும் நம் உடல் நடுங்கத் தொடங்குகிறது. நம் எண்ணங்கள் தடுமாறுகின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமடைந்து விடுகிறவர்களும் உண்டு. நாம் காணும் ரத்தம் நம் உடலிலிருந்தே பீறிடுவதைப்போல பீதியும் தளர்வும் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெட்டுப்பட்டவனின் நிலையில் நம்மைப் பொருத்தி, அக் கொடுமை நமக்கு நேரவில்லை என்று சிறிது நேரம் அமைதியடையவும் செய்கிறது நம் மனம். இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, இத்தகு காட்சிகளில் ஒரு சிலர் மனம் திருப்தியிலும் நிம்மதியிலும் திளைக்கலாம். நெடுங்காலமாகத் தமக்குள் பற்றியெரிந்தபடியிருந்த வன்மம் தணிந்ததில் அமைதியுறலாம். அதுவரையில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகிச் சரிந்த விடுதலையுணர்விலும் மிதக்கலாம்.

அன்பும் கருணையும் சமநோக்குப் பார்வையும் நிறைந்திருக்க வேண்டிய மனத்தில் வன்மம் எப்படி வந்து சேர்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். தனக்கு முன்னால் ஏராளமான பாதைகள் தென்பட்டாலும் வன்மத்தின் பாதையை ஒரு மனிதன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? இரக்க உணர்வுகளே அற்ற இரும்பு நெஞ்சத்தோடு வாழ்வது எப்படிப் பழகி விடுகிறது? வன்மத்தின் பாதையில் நிம்மதியையும் நிறைவையும் ஒருவனால் எப்படி உணர முடிகிறது?

நட்பாலும் நல்லுறவாலும் நிம்மதி நிறைந்த ஒன்றாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வாழும் சக்தி நமக்கு இருக்குமேயானால், வன்மம் நிறைந்த பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டிய அவசியமே தோன்றியிருக்காது. நட்பு, நல்லுறவு, அன்பு, நெருக்கம் எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு வெளியுலக நடவடிக்கைகளைப் பிழையான கோணங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட காரணத்தால்தான் நிம்மதியையும் வன்மத்தையும் ஏதோ ஒரு கணத்தில் இணைத்துப் பார்க்க நாம் முயற்சி செய்கிறோம். நம் வாழ்வில் அன்பில்லாமல் இருப்பதாலும் நம் நடவடிக்கைகளில் சிறிதுகூட கனிவில்லாமல் இருப்பதாலும் அன்புக்கும் கனிவுக்கும் இனி இந்த உலகில் இடமே இருக்க முடியாது என்ற பிழையான எண்ணத்துக்குக் கட்டுப்பட்டு விடுகிறோம். வேறு வழியில்லாத நிலையில்தான் வன்மத்தின் பாதையில் அடியெடுத்து வைப்பதாக ஒரு நொண்டிச் சமாதானத்தை நமக்கு நாமே கற்பித்துக் கொள்கிறோம்.

தான் நேசித்த காதலனின் கழுத்தை அறுத்துத் தட்டில் வைத்து தனக்குப் பிறந்தநாள் பரிசாகத் தர வேண்டுமென தன்னை நேசித்த ஆடவனிடம் கேட்ட இளம்பெண்ணொருத்தியின் வன்மக்கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். தன்னை நேசிக்க மறுத்து விட்டாள் அல்லது புறக்கணித்து விட்டாள் என்பதற்காக அமிலம் ஊற்றி அலங்கோலப்படுத்துகிற இளைஞர்கள் பற்றியும் கழுத்தை நெரித்துக் கொன்று வீசி விட்டுப் போகிற இளைஞர்கள் பற்றியும் ஏராளமான செய்திகள் இன்று வரையிலும் அவ்வப்போது வந்தபடியே உள்ளன. கொல்வது என்பதை ஒரு தீர்வாகக் கண்டுணர்ந்ததும் கொல்லப்பட்ட உடலிலிருந்து சொட்டும் ரத்தமும் சதைத் துண்டுகளும் களிப்போடு பார்க்கத்தக்க காட்சிகளாக அவர்களுக்குத் தோற்றமளிக்கத் தொடங்குகின்றன.

காதலுக்காகக் கொலை. குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கொலை. நேர்மையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகக் கொலை. அந்தஸ்தையும் கௌரவத்தையும் அடைவதற்காகக் கொலை. சாதிக்காகக் கொலை. மதத்துக்காகக் கொலை. இனத்துக்காகக் கொலை! கொலையுணர்வு மெல்ல மெல்லத் திட்டமிட்டு செழுமைப்படுத்திக் கொள்ளப்படும் ஒரு கலையாக சமூகத்தில் உருமாறி விடுகிறது. ஒரு பெருங்கூட்டத்தைத் திட்டமிட்டுக் கொல்வதை ஒரு கலைநிகழ்ச்சியைப்போல நடத்தி முடிக்கிறார்கள் கொலையாளிகள். உடல்கள் சிதறுண்டு போய் விழுவதும் ரத்தம் பீறிட்டுப் பாய்ந்து குட்டையாகத் தேங்குவதும் உறுப்புகள் சிதைவுறுவதும் நிகழ்ச்சியின் இறுதிக் காட்சிகளாகி விடுகின்றன. தம் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் காணும் கொலையாளிகளின் கண்கள் ஏதோ சாகசத்தை நிகழ்த்திவிட்ட மிதப்பில் பூரிக்கக்கூடும். அவர்கள் நெஞ்சில் எரியும் வன்மம் அந்த ரகசியக் கொண்டாட்டத்தில் பல மடங்காகிப் பெருகக் கூடும்.

வரலாற்றில் வன்மத்தின் இருப்புக்கு மிக நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. அரக்கு மாளிகையில் பாண்டவர்களைத் தந்திரமாகத் தங்க வைத்து உருக்குலைந்து போகுமாறு எரிக்க நினைத்த துரியோதனன் மனத்தில் நிறைந்த வன்மம் வழிவழியாக அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் ஒவ்வொருவர் மனத்திலும் ஊறிக் கொண்டே வந்திருக்கிறது. பூட்டப்பட்ட குடிசைகளில் ஆண்கள், பெண்கள் பேதமின்றி உழைப்பாளர்களை அடைத்து நெருப்பு வைத்து எரித்த கீழ்வெண்மணிச் சம்பவத்திலிருந்து தில்லிக் கடைத்தெருக்களிலும் மும்பை ரயில் நிலையங்களிலும் மறைத்து வைத்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த சம்பவங்கள் வரை ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம். அதிகாரமும் வன்மமும் ஒரே வாளின் அடுத்தடுத்த பக்கங்கள்.

வன்மத்தில் குறைந்த அளவுள்ள வன்மம், அதிக அளவிலான வன்மம் என எந்த வேறுபாடுமில்லை. எரியும் கொள்ளிகள் எல்லாத் தருணங்களிலும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். கதறக்கதற மனைவியின் தலையை அடித்து உடைத்து ரத்தம் சிந்த வைக்கிற கணவனின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஒரு குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்களை ஒரே கணத்தில் தேங்காய்ச்சில்லுகளைப்போல சிதற அடிக்கிற கூட்டத்தினரின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஏறத்தாழ ஒரே தன்மையுடையதுதான்.

தன் தரப்பை நிறுவிக்காட்டும் அகங்காரம். தன் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கிற வெறி. தன் அதிகாரத்துக்கு எதிரான சவால்களை அடக்கவும் அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்து தன் அதிகார வலிமையைப் புலப்படுத்தவும் மேற்கொள்ளும் யுத்தம்! யுத்தமும் ரத்தமும் பழகப்பழக வன்மம் மேன்மேலும் பலிகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அடங்காப்பசியினால் மானுடமே சிதைந்து கிடக்கிறது.

இதுபோன்ற நாசகாரச் சக்தியான வன்மத்தை முற்றிலுமாக அகற்றுவது முக்கியமான ஒரு விஷயமல்லவா? இதன் விளைவுகளை கண்ணால் பார்த்தும்கூட அழிப்பதற்கு மாறாக வன்மத்தை எதற்கு வளர்த்துக் கொண்டே போகிறோம்? உண்மையில் பிரச்சினை என்னவென்றால் எல்லாருமே வன்மத்தை உள்ளூர விரும்புவதுதான். பாதுகாக்கப்பட்ட ஆயுதம்போல மனத்தின் அடியில் அதைப் புதைத்து வைப்பது மிகவும் அவசியம் என்கிற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. தேவைப்பட்டபோது வெளிப்படுத்தத் தயங்காதவன் என்கிற அச்ச உணர்வு தன்னைப்பற்றிய ஒரு படிமமாக அடுத்தவர்களிடையே உருவாவது நல்லது என்னும் எண்ணமும் இருக்கிறது. ஆனால் முடிவாக எல்லாரும் சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா? “”மற்றவர்கள் நிறுத்தட்டும், நானும் நிறுத்திவிடுவேன்” என்பதுதான். யார் இந்த மர்றவர்கள்? யார் இந்த நான்? எல்லாம் நாமே அல்லவா?

நம்மையறியாமல் நமக்குள் வெறுப்பின் விதை விழுந்து வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கிறது. அந்தக் காடு பற்றியெரியும்போதெல்லாம் வெப்பம் உச்சத்தை அடைகிறது. வன்மம் அணையாத நெருப்பாக கொழுந்துவிட்டு தகதகவென எரிந்து நாசம் விளைவிக்கிறது.

வன்மத்துக்கு எதிர்ச்சொல் நேசம் என்று பள்ளித் தேர்வில் மட்டுமே எழுதத் தெரிந்த நமக்கு யாரையும் நேசிப்பதில் துளியும் விருப்பமில்லை என்பது மிகப்பெரிய சோகம். நேசிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே வாட்டமும் வலியும் புரியும். நேசமறியா நெஞ்சங்களுக்கு எல்லாமே கண்டு களிக்கத்தக்க படத் தொகுப்புகளாகிவிடும்.

ஒரு பதில் -க்கு “Hatred wildfires”

  1. MzBizzy said

    Nice site, I am trying to do something like this myself.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: