Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sensationalism’ Category

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »