Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sri Lanka says 25 people killed in fighting: defence ministry

பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 20, 2007

இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன; 25 பேர் பலி

இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ் குடாநாட்டின் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளின் 2 பதுங்கு குழிகளையும் தாங்கள் தாக்கி அழித்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முகமாலை, நாகர்கோவில் மற்றும் வன்னிப் பகுதியில் பாலம்பிட்டி, தம்பனை ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம், இந்த மோதல்களின்போது 12 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இதனிடையில் இரண்டு நாள் விஜயமாக யாழ் குடாநாட்டிற்குச் சென்றிருந்த பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் நீல் பெரி அவர்கள், யாழ் அரசாங்க அதிபர், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.

பிரித்தானிய அரசின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வியிட்ட அவர், அங்கு பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களையும் சந்தித்துள்ளார்.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிலரையும் அவர் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் நேரில் கண்டறிந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.

கதிர்காமர் கொலை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரித்துவருகிறது
  • முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை,
  • முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை,
  • முன்னாள் சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலை,
  • திருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை,
  • மூதூரில் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலை,

உள்ளிட்ட கடந்த காலங்களில் 15 மிக முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு, எட்டு பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 நவம்பர் மூன்றாம் திகதி உருவாக்கியிருந்தார்.

அந்தக் கமிஷன் அதற்கு வழங்கப்பட்ட ஆணைக்குள் இவை குறித்த தனது விசாரணைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதனை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே ஜனாதிபதி இதற்கான பதவிக்காலத்தினை 2008 நவம்பர் இரண்டாம் திகதிவரை நீடித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

இந்த விசாரணக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வை செய்யவே, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி P.N.பகவதி தலைமையிலான சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழுவொன்றினையும் உருவாக்கியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>