Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mooligai Corner: Herbs & Naturotherapy – Purasu: How to maintain healthy brains

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மூலிகை மூலை: அறிவைக் கொடுக்கும் புரசு!

கே. விஜயராஜன்

புரசின் இலைகள் மூன்று மூன்றாக இருக்கும். உடலுக்குச் செழிப்பைத் தரக்கூடிய நீர்த் தத்துவத்தையும், நிலத்தில் உள்ள உலோகங்கள் முதலிய தாதுக்களையும் கொண்டு, அனைத்தையும் கலந்து மருத்துவக் குணம் உண்டானதாக வளர்கின்றது. இதன் இலைகள் துவர்ப்புச் சுவை கொண்டது. கார்ப்பும் கசப்பும் துணைச் சுவைகளாகக் கொண்டது. உடலுக்குச் சூட்டைக் கொடுத்தும், மலச்சிக்கலைப் போக்கும் மருத்துவக் குணமும் உடையது. இதன் மலர்கள் கார்ப்புச் சுவையும், கசப்பும் துவர்ப்புமான துணைச் சுவைகளையும் உடையது. சீத வீரியம் கொண்டது. பக்குவமடையும்போது இனிப்புச் சுவை கொள்ளும். இதன் விதை பக்குவமடையும்போது கார்ப்புச் சுவையாக இருக்கும். எண்ணெய்ப் பசை கொண்டது. இது மர இனத்தைச் சேர்ந்ததாகும். இலை, தண்டு, வேர், பிசின், பூ, விதை மருத்துவக் குணம் கொண்டவையாகும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: வடமொழியில் பலாச, கசாரசிரேசுட்டம், வாதகரம், வக்ரபுசுப்பக, பீச்சுநேக, பிரம்கோபேத, சமித்வரம், ரக்தபுசும்ப, யாச்சு நிகம்.

வகைகள்: சிவப்பு புரசு- இதன் பூக்கள் சிவப்பு நிறமாக இருக்கும். இதுவே அதிகமாகக் காணப்படுகின்றது.

வெண்மை புரசு- இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது அறிவை வளர்ப்பதில் சிறப்புடையது.

மஞ்சள் புரசு- இதன் இலைகள் யானைக் காதுகளைப் போன்று அகன்ற இலைகளைக் கொண்டது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நீலம் புரசு- இதன் பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.

பொதுவாக எல்லா வகையான புரசுகளும் ஒரே மருத்துவக் குணம் உடையதாக காணப்படுகின்றது.

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

புரசு இலையை எரித்து கைப்பிடியளவு சாம்பலை எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி, 100 மில்லியளவு ஆட்டின் சிறுநீருடன் கலந்து காலையில் தொடர்ந்து குடித்து வர சிறுநீர்ப்பையில் காணும் சர்க்கரை நோய் குணமாகும்.

புரசு இலை, சிவதை இலை, நேர்வானம் இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கித் தயிர்த் தெளிவுடன் பக்குவம் செய்து தினமும் உண்டு வர மூலநோய் குணமாகும்.

புரசு இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி அதில் 200 கிராம் திப்பிலியை இரவில் ஊறவைத்துப் பின்னர் பகலில் நிழலில் உலர்த்தி இப்படியாகத் தினமும் செய்து வந்து சாறு முழுவதும் திப்பிலி ஊறிய பின்னர் நிழலில் காயவைத்து பொடியாக்கி அதை 1 தேக்கரண்டியளவு வெந்நீரில் 2 வேளை சாப்பிட்டுவர குன்மம், வீக்கம் குணமாகும்.

புரசு இலைக் குடிநீர் 200 மி.லி.யளவு எடுத்து 50 மி.லி. நெய் சேர்த்து குடித்துவர இரத்த குன்மம் குணமாகும்.

புரசு விதையை 50 கிராம் எடுத்து அரைத்து 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி, வடிகட்டி, 200 மில்லி பாலுடன் கலந்து குடித்து பின்னர் இளம் சூடுள்ள பாலை பானமாக குடிக்க, தடைப்பட்ட மலம் முழுவதும் வெளியேறும்.

புரசு விதைகளை எருக்கம் பாலுடன் அரைத்துத் தேள் கொட்டிய இடத்தில் பூசினால் நஞ்சு முறியும். புரசு விதையும், வாய் விளங்கத்தையும் சம அளவாக எடுத்து நெல்லிக்காய் சாறு விட்டு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து சிறிது தேனும் நெய்யும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வர வயது முதிர்ந்தவனும் இளமையைப் பெறுவான்.

புரசு மரப்பட்டையை கையளவு எடுத்து அரைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டிச் சிறுவர்களுக்கு காலையில் கொடுத்து வர குடல் வாதம் குணமாகும்.

வெண்புரசு விதையை நாளுக்கு ஒன்று வீதம் ஆட்டின் நெய்யுடன் சேர்த்து காலையில் சாப்பிட்டு உடலைச் சாம்பல் பூசி தேய்த்துக் குளிக்கவும். இவ்வாறு ஒருமாதம் செய்ய முதுமை, நரை வராமல் இருக்கும்.

புரசு சமூலத்தை கைப்பிடியளவு எடுத்து அரைத்து, சாறு பிழிந்து 1 டம்ளர் பாலுடன் குடிக்க எலிக் கடி விஷம், குன்மம், வாய்வு, வாதம் நீங்கும்.

புரசு விதையை எருமைச் சாணிக்குள் பொதிந்து ஒருநாள் விட்டு மறுநாள் 2 விதையை தோல் நீக்கி அரைத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து குடிக்க வயிற்றில் உள்ள பெருங் கிருமிகள் வெளியேறும். வயிற்று வலியும் நீங்கும்.

பின்னூட்டமொன்றை இடுக