33% Reservation for women in Indian Parliament – Double Standards
பதிந்தவர் SnapJudge மேல் ஜூன் 17, 2007
ஊருக்கு உபதேசம்
குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ராஜஸ்தான் ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகையைத் திறமையும் அனுபவமும் மிக்க ஒரு பெண்மணி அலங்கரிப்பது நமக்குப் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரதிபா பாட்டீலின் தேர்வைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களும், இடதுசாரி தலைவர்களும் மீண்டும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்படவேண்டும் என்கிற கோஷத்தில் எந்த அளவுக்கு இந்த அரசியல் கட்சிகளுக்கு உண்மையான ஈடுபாடு இருக்கிறது என்பது சந்தேகத்துக்குரிய விஷயம்.
மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்குவதால், மொத்த இடங்களில் கட்டாயமாக மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருப்பது உறுதி செய்யப்படும் என்பது மகளிர் இடஒதுக்கீடு ஆதரவாளர்களின் வாதம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அப்படியொரு சட்டம் இல்லாத நிலையில், பெண்களால் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் வெற்றி பெற முடியாமல் போகும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு. ஆண் அரசியல்வாதிகளைப்போல, தங்களுக்கு பணபலமும், அடியாள் பலமும் இல்லை என்கிற அவர்களது வாதத்திலும் நியாயம் இருக்கிறது.
கடந்த அறுபது ஆண்டு இந்திய வரலாற்றில், இந்தக் குறைபாடுகளையெல்லாம் மீறி பெண்கள் பிரதமர் பதவியிலிருந்து அரசின் எல்லாப் பொறுப்புகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மை. அத்தனை ஆண்களுக்கு மத்தியிலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பல வெற்றிகளைச் சாதிக்க முடிந்தது என்பதையும், தமிழகத்தில் ஜெயலலிதா, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா, தில்லியில் ஷீலா தீட்சித் என இந்தப் பெண் அரசியல்வாதிகள் தங்களுக்கென அரசியலில் ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு சில தொகுதிகளை “பெண்கள் போட்டியிடும் தொகுதி’ என்று ஒதுக்கி வைப்பது, அவர்களை இன்னமும் சரிசமமாகப் பார்க்க விரும்பாத ஆணாதிக்கம்தான் என்று ஏன் கருதக்கூடாது?. பெண்களுக்கு உண்மையிலேயே அதிக அளவு பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று கட்சித் தலைமைகள் விழைந்தால், இன்றைய பொதுத் தொகுதிகளில் தகுதியும் திறமையும் உள்ள பெண் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியும். அதைச் செய்வதை விட்டுவிட்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு பற்றிப் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அவரவர் கட்சியின் தேர்தல் நேர வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்களா என்றால் – இல்லை. தங்களது இரட்டை வேடம் தெரியாமல் இருப்பதற்காக, சில முக்கியமான, ஆனால் அதிகாரம் இல்லாத பதவியில் ஓரிரு பெண்களை அமர்த்துவதும், விரைவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் என்று கூறுவதும் வழக்கமாகி விட்டது.
முதலில் இவர்கள் பங்குக்கு அவரவர் கட்சி வேட்பாளர் பட்டியல், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, ஆட்சியில் இருந்தால் அமைச்சரவை என்று எல்லாப் பொறுப்புகளுக்கும் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்துவிட்டு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சட்டமாக்குவது பற்றிப் பேசட்டும்.
