State of the Indian Parliament MPs – The Politics of Corrupt Representatives
பதிந்தவர் SnapJudge மேல் ஏப்ரல் 30, 2007
இதற்காகவா தேர்ந்தெடுத்தோம்?
பி. சக்திவேல்
உலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.
தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.
சமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.
சிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்?
இவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
இவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
சிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.
தனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.
மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.
பல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்?
14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
அதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்!
(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).
