Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Request to open the Marina beach MGR Museum

பதிந்தவர் SnapJudge மேல் மார்ச் 21, 2007

ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை திறக்கக் கோரி வழக்கு

சென்னை, மார்ச் 21:சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினர் விஜயன் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகிலேயே எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை ரூ.38 லட்சம் செலவில் தமிழக அரசு கட்டியது. 2003 -ம் ஆண்டில் தொடங்கிய இப்பணி 2004-ம் ஆண்டில் முடிந்தது.

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களைத் தருமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்பேரில், எம்.ஜி.ஆரின் தொப்பி, கருப்புக் கண்ணாடி, கைகடிகாரம் போன்ற பல பொருட்களை விஜயன் வழங்கினார். இதுவரை அருங்காட்சியகம் திறக்கப்படவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விஜயன். “”அருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்; இல்லையென்றால் அரசிடம் நான் கொடுத்த எம்.ஜி.ஆரின் பொருட்கள், சரியாக பராமரிக்கப்படாமல் வீணாகிவிடும்” என்று மனுவில் கூறியுள்ளார்.

இவ்வழக்கை நீதிபதி டி. முருகேசன் செவ்வாய்க்கிழமை விசாரித்தார். இம்மனு குறித்து வரும் 23-ம் தேதி பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் வசந்தகுமார் இவ்வழக்கில் ஆஜரானார்.

===============================================

எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் வரும் 30-ல் திறப்பு

சென்னை, மார்ச் 28: சென்னையில் எம்.ஜி.ஆர். சமாதியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 30-ம் தேதி திறக்கப்படுகிறது.

அரசு வழக்கறிஞர் தண்டபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.

ரூ.38.5 லட்சம் செலவில் எம்.ஜி.ஆர். சமாதியில் அருங்காட்சியகம் 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. அது இன்னும் திறக்கப்படவில்லை.

அருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்கிற கே.விஜயகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் மனுவில் கூறியிருப்பதாவது:

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களைத் தருமாறு என்னிடம் அரசு கேட்டது. அதன்படி அவர் பயன்படுத்திய தொப்பி, கருப்பு கண்ணாடி, உடைகள், 1938 ல் எம்.ஜிஆர். எழுதிய டைரி, அவரது பாஸ்போர்ட் உள்பட 9 பொருட்களை அரசிடம் ஒப்படைத்தேன். இவை தவிர எம்.ஜி.ஆருக்கு கிடைத்த 9 பரிசுப் பொருட்களையும் அரசிடம் ஒப்படைத்தேன். அருங்காட்சியகம் உடனே திறக்கப்படும் என்ற எண்ணத்தில் அப்பொருட்களை ஒப்படைத்தேன். இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் நான் ஒப்படைத்த அரிய பொருட்கள் பாழாக வாய்ப்புள்ளது.

எனவே எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை உடனே திறக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் விஜயன் கூறியிருந்தார். இவ்வழக்கை நீதிபதி கே. மோகன்ராம் செவ்வாய்க்கிழமை விசாரித்தார். எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை வரும் 30-ம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜரானார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>