Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Economic impact of Industrialization of Agricultural Farmlands

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தொடரும் நிலப் பறிப்பால் துன்புறும் மக்கள்

மா.பா. குருசாமி

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்களும் பெருத்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்கள் வலுவற்றவர்களாக இருந்து வருவதால் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை; ஆனால் தற்போது நிலைமை சற்று மாறிவருகிறது. நிலத்தை இழந்த விவசாயிகள் வீதிக்கு வந்து பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

விவசாயிகளை திடீரென நிலமற்ற நாடோடிகளாக விரட்டியடிப்பது பெரிய சிக்கலின் தொடக்க வெளிப்பாடாகும். இதைத் தடுக்காவிட்டால் கிராம மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரத்தையே இழக்கச் செய்யும் ஒரு “வளர்ச்சி’ முறையை ஆதரிக்கின்றவர்கள் இந்தச் சிக்கலை மேலோட்டமாகப் பார்க்கின்றனர். நிலத்தை மதிப்புள்ள ஒரு சொத்தாக மட்டும் கருதி, அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் போதுமென்று கருதுகின்றனர்.

இந்தியா தொழில்மயமான நாடாக மாற, சில தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட தியாகங்களில் ஒன்றுதான் சில கடைநிலை விவசாயிகள் நிலத்தை இழப்பதும் என்று வாதிடுகின்றனர்.

சின்னஞ்சிறு விவசாயிகளுக்கு நிலம் வெறும் சொத்து மட்டுமல்ல; அது அவர்களுக்கு அமுதசுரபி. ஆண்டாண்டு காலமாக அந்த பூமித்தாயை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள், நான்கைந்து பசு – எருமை மாடுகள் இருந்தால் உழைப்பை நம்பி, வளமாகவும் நலமாகவும் வாழ்ந்த காலம் இருந்தது. கிராம வாழ்வின் ஆதாரமாக வேளாண்மையும், வேளாண்சார் தொழில்களும் இருந்தவரை வாழ்க்கை ஒரு சீராக இருந்தது.

இந்நிலையில், நகரங்களின் விரிவாக்கமும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரங்களை ஒட்டிய வேளாண் நிலங்களை விழுங்கத் தொடங்கின.

வீட்டடி நிலத்திற்காக இருபோகம், முப்போகம் விளைந்த நிலங்கள் வாங்கப்பட்டன. நிலத்தை வாங்கி விற்பவர்கள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, வீட்டுமனைகளாக்கி, அவற்றை விற்று, கோடி கோடியாகப் பணம் குவிப்பதும், அடுத்தடுத்து இருக்கும் நிலங்களை, அக்கம் பக்கம் தெரியாமல் வாங்கிச் சேர்ப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெருஞ் செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் கூடுவது இதனை ஊக்குவிக்கிறது. தங்கத்துக்கு அடுத்தபடியாக நிலமுதலீடுதான் கருப்புப் பணத்தைக் கவர்ந்து ஈர்த்தது.

குடியிருப்புக்கு அடுத்து வாணிப, தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கின்றன. நிலத்தை வாங்க, விற்க உரிமை இருப்பதால் இதில் யாரும் தலையிட முயல்வதுமில்லை; முடிவதுமில்லை.

மேலும் நமது நாட்டில் நிலத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கொள்கை இதுவரை உருவாகவில்லை. ஆதலால் நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.

கணிசமான கிராம மக்கள் சொந்த நிலத்தை, வாழ்வை இழந்து வெளியேறுவதை “வளர்ச்சிப் போக்கு’ என்று அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

நமது நாட்டில் சராசரி நில உடைமையளவு 1.41 ஹெக்டேர். இது ஒரு வேளாண் குடும்பத்துக்கு வாழ்வளிக்காது. இப்பொழுது 74 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.

வேளாண்மையை நம்பி இருக்கின்றவர்களில் 20 சதவீத மக்களை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்துகின்றனர். எப்படி, எந்தத் துறைக்கு மாற்றுவதென்று யாரும் திட்டவட்டமாகக் கூறவில்லை; கூற முடிவதில்லை.

இந்நிலையில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைத்து கிராமங்களைத் தொழில் மயமாக்க அரசு முயன்று வருகிறது. பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைக்கும் பொறுப்பு நமது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கும், மிதுனபுரி மாவட்டம் நந்தி கிராமத்தில் இந்தோனேசியா நிறுவனத்துக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மேற்குவங்க அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

இப்பொழுது அனுமதி பெற்றிருக்கிற 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தரப் போகிற நிலம் 37,400 ஹெக்டேர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் 340. மேலும் 300 திட்டங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் எராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் உறுதி கூறுகின்றனர்.

நிலத்தை இழக்கின்றவர்களுக்கெல்லாம் இந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போவதில்லை. இவர்களில் சிலருக்கு தொடக்க காலத்தில் உடல் உழைப்புச் செய்யும் பணிகள் கிடைக்கலாம். ஆனால் இவற்றில் தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் திறன்மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்.

நமது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதம் நிலத்தில்தான் வேளாண்மை செய்கிறோம். இன்னும் 37 சதவீத நிலம் மேய்ச்சல் நிலமாக, தரிசு நிலமாக, வேளாண்மை செய்யத் தகுதியற்ற நிலமாக இருக்கிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டி, உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்கிறோம்.

இந்நிலையில் ஏராளமாக இருக்கும் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்கள் அகக் கட்டுமானங்கள் உள்ள நகரங்களை அடுத்த கிராமப்புறங்களை விரும்புமே தவிர, தூரத்திலுள்ள இடங்களை நாடாது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய, மாநில அரசுக்கு, “”பொது நோக்கிற்காகவும், நிறுவனங்களுக்காகவும், இழப்பீடு அளித்து கையகப்படுத்தும் முழு உரிமையை அளிக்கிறது”. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது மாநில அரசுகள் நிலத்தின் விலையை நிர்ணயித்து வேளாண் நிலத்தைக் கைப்பற்றுகின்றன.

இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனங்களுக்கு மொத்தமாக நிலத்தைத் தாரை வார்க்க உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பொழுதும் நமது விவசாயிகளை மொட்டையடிக்க இந்தச் சட்டம் பயன்படுவது வேடிக்கை.

இப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை (விலையை) மாவட்ட ஆட்சியாளர் நிர்ணயம் செய்கிறார். அது நடைமுறை பத்திரப்பதிவு விலையாக இருக்கும். அந்த நிலம் தொழில் நிறுவனத்திற்குக் கை மாறியபின் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கூற முடியாது.

இழப்பீடாக பல ஆயிரம் ரூபாய் பெறுகிற விவசாயியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவன் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கிப்போட்ட செடியாக இருப்பான். உடனே வேறு இடத்தில் நடப்பட்டால் செடி தழைக்கும். இல்லையேல் காய்ந்து கருகிப் போகும். கையிலுள்ள பணம் செலவானபின் விவசாயி வெறும்கையுடன் வேலை தேடி அலைய வேண்டும். லஞ்ச ஊழல் நிர்வாகத்தில் நிர்ணயிக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமென்ற உறுதிப்பாடும் இல்லை.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6,38,365 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 5,93,643 கிராமங்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களில் குடியேறுவதாக வைத்துக் கொள்வோம். நகரங்கள் எல்லாம் நரகங்களாகும் நிலை தானே ஏற்படும்.

நிலத்தை – வேளாண்மையை – நம்பியிருக்கின்ற மக்களுக்கு வாழ மாற்று ஏற்பாடு செய்யாமல் நிலத்தை இழந்து வெளியேறச் செய்வது குளவிக்கூட்டில் கல்லெறிந்து கூட்டைக் கலைப்பதைப் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

சரியான பொருளாதார வளர்ச்சியை முறையாக மேற்கொண்டு எல்லா மக்களையும் வாழ வைப்பதுதான் நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

ஒரு பதில் to “Economic impact of Industrialization of Agricultural Farmlands”

  1. bsubra said

    விளைச்சலுக்கு ஏற்ற விலை – விவசாயம் பாகம் – 2

    விவசாயம் என்பது அடுத்தவருக்கு உணவளிக்கும் ஒரு மதிப்புமிக்க தொழிலாக இருந்து வந்த நிலை மாறி, விவசாயி என்றாலே கடன் கொடுப்பது மட்டுமல்லாமல், பெண் கொடுப்பதற்கு கூட மற்றவர் யோசிக்கும் நிலை இன்றைக்குத் தமிழகத்தில் ஏன் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள் தமிழக விவசாயிகள்.

    தென்னகத்தின் முக்கிய உணவுப் பயிரான நெல்லின் அறுவடை முடிந்து வியாபாரிக்கு விற்கப் போகும் நேரம் தான் விவசாயிகளுக்கு முக்கியமான நேரம். உழைப்பின் பலன், அதாவது நெல் விற்ற பணம் எவ்வளவு வருகிறது என்பது அப்போதுதான் தெரியும், மூன்று போகமும் நன்கு விளைந்து விவசாயிகள் செழிப்பாக இருக்கும் நிலைமை தற்போது இல்லை என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

    நெல் கொள்முதல் விலையினை அரசாங்கமே நிர்ணயிக்கிறது. இந்த விலைக்கு அரசாங்கமே நெல்லை வாங்கிக் கொண்டாலும், தனியார் தரகர்களிடமும், வியாபாரிகளிடமும் கூட நெல்லை விற்கின்றனர் விவசாயிகள். தற்போதைய உலகில், அரசாங்கம் கொடுக்கும் விலை, விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார் போல் இல்லை என்கிறார் தஞ்சை மாவட்டம் மஹாராஜபுரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த காவிரி டெல்டா விவசாயி சுந்தரம்.

பின்னூட்டமொன்றை இடுக