Vivekanandha College students strike – College gets closed by Management
பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 14, 2007
மாணவர்கள் ஸ்டிரைக் எதிரொலி: விவேகானந்தா கல்லூரி மூடல்
சென்னை, பிப். 14: சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், கல்லூரி காலவரம்பின்றி மூடப்படுகிறது. இதைக் கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது குறித்து கல்லூரி செயலர் சுவாமி சத்தியப்பிரியானந்தா, முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கல்லூரி மாணவர்கள், குறிப்பாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கடந்த ஐந்து நாள்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனிடையில், கல்லூரி மாணவர்கள், அதிலும் விடுதி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். கல்லூரியின் விலைமதிப்பற்ற சொத்துகளையும் சில ஆசிரியர்கள், ஊழியர்களின் தனிப்பட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கடந்த 7-ம் தேதி விடுதி மாணவர்கள் உள்பட சில மாணவர்கள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி, திடீரென்று ஸ்டிரைக் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய போராட்டத்தில் இதர கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
கல்லூரி நிர்வாகத்தை நடத்தி வரும் ராமகிருஷ்ண மடத்தின் மூத்த அறங்காவலர் சுவாமி கெüதமானந்தா விடுதி மாணவர்களுடன் கடந்த 10-ம் தேதி பேசினார். தொடர்ந்து, விடுதி நிர்வாகத்துக்கு மாற்று ஏற்பாட்டையும் அவர் செய்தார்.
அதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால், மாணவர்கள் புதிய கோரிக்கைகளை திங்கள்கிழமை முன் வைத்தனர். ஆனால், அக்கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் நிர்வாகம் உள்ளது. இது மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள் சிலர், மாணவர்களுடன் பேச்சு நடத்தி, பிறகு கல்லூரி பணியாளர்களுடனும் விவாதித்தனர்.
ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். போராட்டத்தைக் கைவிடும்படி மாணவர்களிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தங்களது பிடிவாதத்தை அவர்கள் கைவிடவில்லை. எனவே, பகல் நேரக் கல்லூரி, மாலை நேரக் கல்லூரியுடன் விடுதியையும் கால வரம்பின்றி மூடுவது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
விவேகானந்தா கல்லூரி நாளை திறப்பு
சென்னை, பிப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியும் வித்யாபீடம் என்ற அதன் விடுதியும் புதன்கிழமை திறக்கப்படுகின்றன.
மாணவர் விடுதி செவ்வாய்க்கிழமை (பிப். 27) முதல் செயல்படும் என்று கல்லூரிச் செயலர் சுவாமி அபிராமானந்தரும், முதல்வர் வ.வே.சுப்பிரமணியனும் அறிவித்துள்ளனர். இக்கல்லூரியும், விடுதியும் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் காலவரம்பின்றி முடப்படுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது
