Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

NRI Investments and Return to India plans – Dinamani Editorial

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 10, 2007

வெளிநாடு வாழ்வோருக்கு அழைப்பு

தில்லியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளதுபோல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இன்னும் நிறைய பங்காற்ற முடியும். இந்த மாநாட்டில் பிரதமர் மட்டுமன்றி மத்திய அமைச்சர்களும் உரையாற்றினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் சுமார் இரண்டரைக் கோடி இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகளாக இப்போதைய மாநாட்டில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநாட்டில் அவர்களது கருத்துகளும் பெறப்பட்டன.

பிரதமரும் மற்ற அமைச்சர்களும் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இன்னும் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். இன்று சீனாவின் பெருத்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் வாழும் சுமார் 6 கோடி சீனர்கள், கணிசமான அளவில் சீனாவில் முதலீடு செய்துள்ளதே ஆகும். உதாரணமாக 2003-ம் ஆண்டில் சீனாவில் செய்யப்பட்ட மொத்த வெளி முதலீட்டில் 65 சதவீதம் இவ்விதம் வெளிநாடுவாழ் சீனர்களிடமிருந்து கிடைத்ததாகும். இத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு சதவீத அளவில் மிகக் குறைவே ஆகும்.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கு தங்களது உழைப்பின் மூலம் செல்வநிலைக்கு உயர்ந்த இந்தியர்களில் சிலர் தங்களது தாய்நாடான இந்தியா பயன் பெற அவ்வப்போது நன்கொடையாகவும் முதலீடாகவும் நிதி அளித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இவை சிறு துளிகளாகத்தான் உள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டைப் பெருத்த அளவில் கவர முடியாமல் போவதற்கு இந்தியாவில் தொழில் துவங்குவதில், முதலீடு செய்வதில் உள்ள எண்ணற்ற எரிச்சலூட்டும் விதிமுறைகளும் காலதாமதமும் முக்கியக் காரணங்களாகும். இவை எளிதாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தியாவில் உள்ள விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய காலத்திலும் அன்னியச் செலாவணி பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்திலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வெட்கித் தலைகுனிந்தது உண்டு. ஆனால் இன்று தங்களை இந்தியன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு இந்தியா முன்னேறி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் சரி தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் நன்கு முன்னேறி தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்கின்றனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு சலுகைகளையும் சில வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பிட்ட 16 நாடுகளில் வாழும் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெறலாம் என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென இந் நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவும் திட்டமும் உள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களில் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுடன் இன்னமும் வலுவான கலாசாரப் பிணைப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லும் இசைக் கலைஞர்களுக்கு அங்கு கிடைக்கிற ஆதரவு, இந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைக்கிற வரவேற்பு முதலியவை இதைக் காட்டுகின்றன. அடுத்த தலைமுறையினர் இடையே இயல்பாக இந்த ஆர்வம் குறையலாம். அவர்களை மனத்தில்கொண்டு இந்தியா தகுந்த திட்டத்தை வகுக்க முடியும். சுற்றுலா ஏற்பாடு இந்த வகையில் உதவும்.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் கணிசமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் சீனர்களாக உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோல வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்களைக் கவர்வதற்கென தனி சுற்றுலாத் திட்டத்தை உருவாக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>